Last Updated : 23 Jun, 2017 10:50 AM

 

Published : 23 Jun 2017 10:50 AM
Last Updated : 23 Jun 2017 10:50 AM

திரை வெளிச்சம்: மீண்டும் கிளம்பும் டிஜிட்டல் பூதம்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஜி.எஸ்.டி.யைக் கண்டு அலறுவதுபோலவே ‘க்யூப்’ சினிமா கட்டணத்துக்கும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறார்கள். கட்டணத்தைக் குறைக்காவிட்டால் நாங்கள் வேறு டிஜிட்டல் சினிமா நிறுவனத்தை நாடுவோம் என்ற நிலைப்பாட்டை விஷால் தலைமையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்திருக்கிறது. தயாரிப்பாளர் தாணு தலைவராக இருந்தபோது, முகம் காட்டிய இந்த க்யூப் கட்டணப் பிரச்சினை தற்போது மீண்டும் தலைதூக்கியிருப்பதற்கு என்ன காரணம்? அதைத் தெரிந்துகொள்ளும் முன் டிஜிட்டல் சினிமா பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

டிஜிட்டல் திரையிடல்

திரையிடல் என்பது டிஜிட்டலாக மாறும் முன்புவரை, பிலிம் படப் பிரதிகளைத் திரையரங்குகளுக்குத் தயாரிப்பாளர்கள் அனுப்பிவந்தார்கள். பட வெளியீட்டின் முதல் நாள் முதல் காட்சிக்குப் படப் பெட்டி பேருந்து அல்லது ரயிலில் வந்திறங்கும். அதை யானை மீது ஏற்றிக்கொண்டு மேள தாளம் முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் திரையரங்குக்கு கொண்டுவந்து சேர்ப்பார்கள் ரசிகர்கள். தங்கள் அபிமான நட்சத்திரங்களின் கட்- அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்து பட்டாசு வெடித்தபின் படக்காட்சித் தொடங்கும். இன்று கட் –அவுட் மறைந்து பிளெக்ஸ் பேனர்கள் வந்துவிட்டதுபோலவே, படப் பெட்டிகள் மறைந்து டிஜிட்டல் சினிமா வந்துவிட்டது.

மாஸ்டர் சிடியில் பதிவுசெய்யப்பட்ட டிஜிட்டல் திரைப்படம், திரையரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் புரொஜெக்டர்களில் தரவிறக்கம் செய்யப்படுகிறது. கம்ப்யூட்டர்களுடன் இணைந்த அதிநவீன டிஜிட்டல் புரொஜெக்டர்களில் டிஜிட்டல் சினிமாவை ஏற்றித் தருவதற்கென்று தனது தொழில்நுட்ப ஊழியரை அனுப்புகிறது டிஜிட்டல் சினிமா நிறுவனம். காட்சி நேரத்துக்குச் சற்று முன்னதாக நிறுவனம் தரும் கடவுச் சொல்லை உள்ளீடு செய்தால் மட்டுமே திரையில் காட்சி விரியும். இந்த முறையில் திரையரங்குகளில் டிஜிட்டல் புரொஜெக்டர்களை நிறுவித் தந்து, டிஜிட்டல் சினிமா சேவையை வழங்கும் பல நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ‘க்யூப்’.

எங்களிடம் வசூல் செய்யாதீர்கள்!

படப் பெட்டிகளின் காலத்தில் படச் சுருளில் ஒரு பிரதி எடுக்க 50 ஆயிரம் ரூபாய்வரை செலவானது. படப் பிரதியின் விலையை மனதில் வைத்துக் குறைந்த அளவே பிரதிகள் போடப்பட்டு, அதற்கு ஏற்ற எண்ணிக்கையில் திரையரங்குகளில் படங்கள் வெளியாகிவந்தன. இருப்பினும் பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் அதிகபட்சமாக 250 பிரதிகள் எடுக்கப்படும் நிலை இருந்தது. தற்போது தயாரிப்பாளர்கள் தரப்பில் விசாரித்தபோது, “டிஜிட்டல் முறையில் ஒரு படத்தை மாஸ்டரிங் சிடி செய்வதற்கு 500 ரூபாய்வரை செலவாகிறது.

போக்குவரத்துச் செலவு, இதர செலவு என மொத்தமாகச் சேர்த்தாலும் 1,500 ரூபாயைக் கண்டிப்பாகத் தாண்டாது என்பது எங்கள் கணக்கு. ஆனால், இதற்கு மாறாக க்யூப் நிறுவனம் பல மடங்கு அதிகமாக வாங்குகிறது. குறிப்பாகத் திரையரங்கில் அவர்கள் நிறுவியிருக்கும் புரொஜெக்டர்களின் விலையையும் சேர்த்தே எங்களிடம் வசூலிக்கும் விதமாகக் கட்டணத்தை நிர்ணயித்து செயல்படுத்திவருகிறார்கள்.

திரையரங்குகளுக்கு இருக்கை, குளிர்சாதன வசதி, திரையமைப்பு, ஒலியமைப்பு உள்ளிட்ட பல அடிப்படைக் கட்டுமான வசதிகளைக் காலமாற்றத்துக்கு ஏற்ப மாற்றுவதுபோல் பழைய புரொஜெக்டர் முறையிலிருந்து புதிய டிஜிட்டல் புரொஜெக்டர் முறைக்கு மாற்றும் செலவினமும் திரையரங்க உரிமையாளர்களுடையதுதானே? அதை ஏன் எங்களிடம் வசூலிக்கிறீர்கள்?” என்று கேட்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

தவணை முறையில் புரொஜெக்டர்

மேலும் “தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் 14 லட்சம் ரூபாய் விலையில் 2-கே ரெசல்யூஷன் தரம் கொண்ட புரொஜெக்டர்களையும் 40 முதல் 50 லட்சம் ரூபாய் விலை கொண்ட 4-கே புரொஜெக்டர்களை க்யூப் நிறுவனம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. சில திரையரங்குகள் மொத்தப் பணத்தையும் கொடுத்து டிஜிட்டல் புரொஜெக்டர்களை வாங்கிக்கொண்டாலும் பெரும்பாலான திரையரங்குகள் நவீனத்துக்கு மாற விலை தடையாக இருந்ததால், தவணைமுறையில் பணத்தைப் பெற்றுக்கொள்வதாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டு புரொஜெக்டர்களை நிறுவியது. அந்த தவணைத் தொகையைத்தான் ‘டிசிபி சார்ஜ்’ (DCP-Digital Cinema Projection) என்ற பெயரில் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அதன் தயாரிப்பாளரிடமிருந்து மாஸ்டரிங் சிடிக்கான தொகையாக வசூலித்துக்கொள்கிறது” என்கிறார்கள்.

சரி இந்த டிசிபி கட்டணம் எப்படி இருக்கிறது... “ 2-கே,4-கே அல்லது அதற்கும் குறைவான தரத்தில் உள்ள திரையிடல் என அனைத்து விதமான டிஜிட்டல் சேவைகளுக்கும் டிசிபி சார்ஜ் என்ற பெயரில் ஒரு திரையரங்குக்கு ஓராண்டுக்கு ஒரு படத்தைத் திரையிட 22,500/- ரூபாய் வாங்கிவருகிறார்கள். ஒரு வாரத்துக்கு மட்டும் என்றால் 10,500/- ரூபாய் கட்ட வேண்டும். 2-வது வாரம், 3-வது வாரம் எனப் படம் தொடர்ந்து ஓடினால் டிசிபி கட்டணமும் குறைந்து கொண்டே வரும்.” என்கிறார்கள்.

இருப்பினும் இதுவுமே ஏற்புடைய கட்டணமல்ல; இனிமேல் தயாரிப்பாளர்கள் புரொஜெக்டர்களுக்கான பணத்தைக் கட்ட முடியாது. மாஸ்டரிங் சிடியைத் தயார் செய்து, ஒரு படத்தை திரையரங்குக்குக் கொண்டுவந்து சேர்ப்பது மட்டுமே தயாரிப்பாளரின் வேலை. அதற்கு மேல் படத்தைத் திரையிடுவது, திரையிடாதது எல்லாம் திரையரங்கு உரிமையாளர்களின் பிரச்சினை ”என்று தெரிவித்திருக்கிறார்கள்.

எங்கள் நிலை இதுதான்

தயாரிப்பாளர்களின் இந்தப் புதிய நிலைபாடு பற்றித் திரையரங்க உரிமையாளர்கள் என்ன சொல்கிறார்கள்? தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதரிடம் பேசினோம்.

“தயாரிப்பாளர்களின் கோரிக்கை நியாயமானது. அதை மறுக்கவில்லை. ஆனால், பிலிம் சுருள் இருந்த காலத்தில் கார்பன் குச்சி கொண்டும், மின் விளக்கு கொண்டும் திரையிட்ட புரொஜெக்டர்களின் விலை ரு. இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சத்துக்குமேல் கிடையாது. அந்த புரொஜெக்டர்களில் பழுது என்றால் படம் திரையிடும் தொழிலாளியே அதைச் செய்துவிடுவார். ஆனால், இன்றைய அதிநவீன டிஜிட்டல் புரொஜெக்டர்களுக்கு முதலீடு செய்கிற நிலையிலா ஒன்று அல்லது இரண்டு திரைகளை வைத்திருக்கும் திரையரங்க உரிமையாளர்கள் இருக்கிறார்கள்?

தமிழகத்தில் இருக்கும் 1,100 திரையரங்குகளில் 80 சதவீதத் திரையரங்குகள் ஒன்று அல்லது இரு திரைகள் கொண்டவைதானே? எங்களது சக்தியை ஆய்வு செய்தபின் தான் க்யூப் எங்களுக்குத் தவணை முறையில் புரொஜெக்டர்களைத் தர முன்வந்தது. அதற்காக, ஐரோப்பா முழுவதும் நடைமுறையில் இருக்கும் டிசிபி கட்டணத்தின் மூலம் தரமான சினிமா திரையிடலுக்கு வழிவகுத்தது. இன்று ஒரு சிறு படம் கூட 150 திரைகளில் ஒரேநேரத்தில் வெளியாகிறது; பெரிய படம் என்றால் 600 முதல் 900 திரைகள்வரை வெளியாகி ஐந்தே நாட்களில் வசூல் இலக்கை எட்டிவிட முடிகிறது என்றால் அதற்கு டிஜிட்டல்தானே காரணம். இந்த அதிநவீன புரோஜெக்டர்களின் அப்டேட் வெர்ஷன்கள் வந்துகொண்டே இருப்பது மட்டுமல்ல; அவற்றில் ஏற்படும் பழுதுகளையும் க்யூப் நிறுவனமே நீக்கிக் கொடுக்கிறது. இது தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர் சங்கம், க்யூப் நிறுவனம் ஆகிய மூன்று தரப்பும் அமர்ந்து பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினை. இதில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற நிலைப்பாட்டை எடுப்பது தீர்வு கிடைக்க வழி கிடைக்காது” என்கிறார்.

வெட்டு ஒன்று துண்டு இரண்டு

ஆனால், இப்பிரச்சினையை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம். இதுபற்றித் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஞானவேல்ராஜாவிடம் பேசியபோது, “ஒரு படத்துக்கு ஓராண்டுக்குத் தற்போது வாங்கக்கூடிய 22,500/- ரூபாய்க்குப் பதிலாக 5,000 ரூபாயும் சிறு படங்களுக்கு இதே தொகைக்குப் பதிலாக 2,500/- ரூபாயும் வாங்கிக்கொண்டு டிஜிட்டல் சேவையை அளிக்கச் சந்தையில் சில நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. அவர்களுடன் எங்கள் தலைவர் விஷால் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். திரையரங்கு உரிமையாளர்களின் ஆதரவின்றி இதைச் செயல்படுத்த முடியாது. எனவே, அவர்களின் பதிலுக்காகவும் காத்திருக்கிறோம்” என வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனப் பேசினார்.

பாதுகாப்பும் தரமும்

க்யூப் நிறுவனம் இதற்கு என்ன சொல்கிறது? அதன் நிர்வாக இயக்குநர் செந்திலிடம் பேசினோம். “டிஜிட்டல் புரொஜெக்டர்களுக்கான விலையை டிசிபி கட்டணமாகத் தயாரிப்பாளர்களிடமிருந்து வசூலித்து வருகிறோம் என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதற்கான காரணத்தை மனசாட்சியுடன் அணுக வேண்டும் என்று கேட்கிறேன். பிலிம் இருந்தவரை ஒரு பிரிண்டுக்கு 50 முதல் 60 ஆயிரம் செலவிட்ட தயாரிப்பாளர்கள் தற்போது அதிகபட்சமாக 22,500/- ரூபாய் செலவிடுகிறார்.

ஓராண்டு முழுவதும் திரையிடவும் ஒரு திரையரங்கிலிருந்து மாநிலத்தில் உள்ள வேறு திரையரங்குக்கு மாற்றிக்கொள்ளவும் இந்தக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்கிறோம். இன்று எவ்வளவு பெரிய படமென்றாலும் முதல் வார வசூல்தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிறது. ஒரு வாரத்துக்கு மட்டும் என்றால் 10,500/- ரூபாய். திரையிடும் வாரம் அதிகரிக்க அதிகரிக்கக் கட்டணம் குறைந்துகொண்டே வந்து ஒரு காட்சிக்கு 250 ரூபாய் என்ற இடத்தில் நிற்கும்படி கட்டண விகிதங்கள் இருக்கின்றன. உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் புரொஜெக்டர்களைச் சர்வதேச அளவில் மூன்று நிறுவனங்கள்தான் தயாரிக்கின்றன. அவர்களிடமிருந்துதான் நாங்கள் புரோஜெக்டர்களை வாங்கி நிறுவுகிறோம்.

ஒரு புரோஜெக்டருக்கான பராமரிப்பு செலவு மட்டுமே மூன்று லட்சத்துக்குமேல் வருகிறது. இதையும் நாங்கள்தான் ஏற்றுக்கொள்கிறோம். பத்து திரையரங்குகளுக்கு ஒரு க்யூப் ஊழியரை அனுப்புகிறோம். இதுதவிர பிரெஞ்சு நிறுவனம் ஒன்றிடமிருந்து வாட்டர் மார்க்கிங் உரிமையை 12 கோடி கொடுத்து வாங்கி, அதைக் க்யூப் பிரதியில் இணைத்திருக்கிறோம்.

இது திரையரங்கிலிருந்து காப்பி செய்யும் வீடியோ பைரசியைத் தடுத்திருக்கிறது. மொத்தம் 400 கோடி ரூபாய் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தின் மூலம் தொடங்கப்பட்ட க்யூப் நிறுவனத்துக்குக் கிடைத்துவரும் லாபம் வெறும் 6 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கிறது. எங்களை நம்பிப் பல முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. இந்த மூலதனத்தை சேமிப்புக் கணக்கில் செலுத்தினால் கூட சற்று கூடுதலாக லாபம் கிடைத்திருக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்குமுன் இதே பிரச்சினை வந்தபோது தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு வெளிப்படையாக எல்லாவற்றையும் எடுத்துக்கூறினேன். தற்போது பதவியேற்றிருக்கும் நிர்வாகக்குழு மின்னஞ்சல் வழியே தொகையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று கேட்டார்கள். நான் உண்மை நிலைமையை அவர்களுக்கு விளக்கி, நீங்கள் கேட்பதுபோல் குறைத்தால் நிறுவனத்தை மூடிவிட்டுச் செல்லவேண்டியதுதான். ஆனால் காட்சிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் விலையைக் குறைக்கத் தயாராக இருக்கிறோம்’ என்று கூறினோம். அதற்கு நிர்வாகக் குழுவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

தற்போது வேறு நிறுவனத்தைக் கொண்டுவருவோம், 5,000/- ரூபாய்க்கும் 2,000/- ரூபாய்க்கும் தருவோம் என்பதாகக் கூறுகிறார்கள். புளுரே டிவிடியை ஒளிபரப்பும் ஒரு லட்ச ரூபாய் புரோஜெக்டரை அமைத்தால் மட்டும்தான் இந்த விலைக்குத் தரமுடியும். பிறகு எதற்கு 2கே, 4கே என்ற தரம்? ஒரு லட்ச ரூபாய் புரஜெக்டர் என்றால் அதில் பைரசி பாதுகாப்பு இருக்கிறது என்று சொல்லமுடியுமா? தயாரிப்பாளர்கள் சங்கம் இதுபோன்ற உண்மைகளை உணர்ந்து கொண்டு அழைத்தால் நாங்கள் பேசத் தயாராகவே இருக்கிறோம். அவர்கள் ஒத்துழைக்காத நிலை ஏற்படுமானால் இந்தத் தொழிலை மூடுவதைத் தவிர எங்களுக்கும் வேறு வழியில்லை” என்கிறார் க்யூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் செந்தில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x