

ஒரு பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது . ‘‘செய்தி சேனல் பார்த்தியா?’’ என்று கேட்டாள் மறுமுனையில் இருந்த தோழி. ‘‘அதான் பார்த்துக்கிட்டிருக்கேன். செய்தி வாசிக்கும் பெண் பச்சை கலர் புடவை, தோடு என்று மேட்சாக உடை அணிந்திருக்கிறார்’’ என்றாள் அப்பெண். அதற்கு தோழி, ‘‘அடிப்பாவி, கீழே ஃப்ளாஷ் செய்தி வருகிறது பார். உன் கணவர் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி இருக்கிறது’’ என்று பதறினாள். நல்லவேளை சின்ன காயத்துடன் கணவர் தப்பிவிட்டார்.
இப்படித்தான் நாம் பார்க்கும்போது முக்கியமான விஷயங்களை கவனிக்க விட்டுவிடுகிறோம். பார்ப்பதற்கும் (Looking) கவனிப்பதற்கும் (Observing) உள்ள வித்தியாசம் அதுதான். காட்சிப் புலன் (Visual Memory) நினைவு மிக முக்கியம் என்று பார்த்தோம். அதைப் பயிற்சிகள் மூலம் மேம்படுத்தலாம்.
முன்பெல்லாம் சிறுவர்கள் ஒரு விளையாட்டு விளையாடுவார்கள். ஒரு பையில் சில பொருட்கள் இருக்கும். அவற்றை ஒருமுறை பார்த்தபின் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்று ஞாபகப்படுத்தி சொல்ல வேண்டும்.
இது எளிமையானதுதான். ஆனால், நம் கவனிக்கும் திறன் மற்றும் நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்யும் நல்ல விளையாட்டு. இதுபோன்ற சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
இரண்டு படங்களுக்கிடையே குறைந்தபட்சம் 6 வித்தியாசங்கள் கண்டுபிடிக்கும் விளையாட்டு முன்பு பத்திரிகைகளில் வரும். அவை காட்சியில் உள்ள நுணுக்கமான வேறுபாடுகளை (Visual Discrimination) கவனிக்க உதவும். அதேபோலத்தான் திருகுவெட்டுப் புதிர்கள் (Jig Saw Puzzle).
‘இல்லை, நான் செல்போனில்தான் விளையாடுவேன்’ என்றால் இணையத்தில் காட்சிப்புலனை மேம்படுத்தும் விளையாட்டுகள் ஏராளமாக உள்ளன. சீட்டுக்கட்டில் உள்ள அட்டைகளைக் கவிழ்த்துவிட்டுப் பின் ஒவ்வொரு அட்டையாக எடுத்துப் பார்த்து ஜோடி சேர்ப்பதுபோல சுவாரஸ்யமான விளையாட்டுகள் இருக்கின்றன. சும்மா ஆங்க்ரி பேர்ட்ஸ் விளையாடுவதற்குப் பதில் மூளைக்குப் பயிற்சி அளிக்கும் அவற்றை சுவாரஸ்யமான போட்டியாக விளையாடலாம்.
சரி, இது போரடிக்கிற விஷயம் என்றால் இருக்கவே இருக்கிறது சினிமா. ஏதேனும் திரைப்படப் பாடலைப் பாருங்கள். பின்பு அப்பாடலில் வந்த நாயகன் நாயகி அணிந்த உடைகளை விவரியுங்கள். என்ன நிறம், என்ன மாதிரி உடைகள், உடன் ஆடிய துணை நடிகர்கள் எத்தனை பேர் என்று நினைவுகூருங்கள். நண்பர்களுடன் சேர்ந்து இதை ஒரு போட்டி மாதிரி செய்யலாம்.
கல்வி என்பது வெறும் மனப்பாடம் மட்டுமல்ல. பள்ளிகள் இதுபோன்ற திறன்களை மேம்படுத்தும் விதமாக, சுவாரஸ்யமாக இருந்தால் கிரிக்கெட் மேட்ச் இருந்தால்கூட, எந்த மாணவனுக்கும் பள்ளிக்குக் கிளம்பும்போது வயிற்றுவலி வராது.
-மீண்டும் நாளை...