Published : 07 Oct 2014 12:35 PM
Last Updated : 07 Oct 2014 12:35 PM

புரிதலும் அரவணைப்பும் நிகழ்த்தும் மாயம்

உலக மனநல நாள் - அக்டோபர் 10

மனச்சிதைவால் பாதிக்கப்பட்டு அந்நோயுடனே வாழும் அமெரிக்கப் பொருளாதார மேதை ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ் 1994-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளார்.

மனச்சிதைவு உள்ளிட்ட எந்தவித மனநோயுடனும் வெற்றிகரமாக வாழ முடியும் என்பதற்கு இவர் சிறந்த முன்னுதாரணம். அதனால், மனச்சிதைவு உள்ளிட்ட மனநோய்க்கு ஆளானவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது.

மாறும் பார்வை

ஒரு காலத்தில், "மன நோயாளிகள் ரொம்பவும் ஆபத்தானவர்கள்; சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள்" என்ற மூடநம்பிக்கை இருந்தது. பிறகு அவர்கள், "மனநலக் காப்பகங்களில் இருக்க வேண்டியவர்கள்" என்ற கருத்து நிலவியது. அதனால் மனநோய்க்கு ஆளானவர்கள் காப்பகத்திலும் சமுதாயத்துடனும் மாறி, மாறி வாழ வேண்டிய நிலை உருவானது.

மனநோய்களில் குறிப்பாக மனச்சிதைவு நோய் (Schizophrenia) வருவதற்கான காரணங்கள் குறித்த மூடநம்பிக்கைகளே, மனநோயாளிகள் மீது ஒருவித வெறுப்பையும் இழுக்கையும் ஏற்படுத்தியுள்ளன. பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்ற காரணங்களால்தான் மனநோய் வருகிறது என்ற எண்ணமும் சமூகத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளது. இது முற்றிலும் தவறு.

நமக்குச் சமமானவர்கள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு எந்த வகையிலும் தாழ்ந்தவர்கள் அல்ல; அவர்களுடைய நோய்த் தாக்கம் குறைந்ததும் எல்லோரையும் போல் பணி செய்யலாம்; எல்லோருடனும் சேர்ந்து வாழலாம் என்ற நிலை உருவாக வேண்டும். இந்த நோக்கத்தை வலியுறுத்தவே மனநல நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக மனநல நாள் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 10-ம் தேதி, மனநலம் தொடர்பான ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மையமாகக் கொண்டு அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் மையக் கருத்து ‘மனச்சிதைவு நோயுடன் வாழுதல், (Living with schizophrenia).

மருந்துகளும் புரிதலும்

1952 முதன்முதலாக மனநோய்க்கான மருந்து - Chlorpromazine கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டதால் ஆரோக்கியமான பல மாற்றங்கள் நிகழ்ந்தன. பின்னர், ஒவ்வொரு காலகட்டத்திலும் பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பக்க விளைவுகளே இல்லாமல் மனச்சிதைவு நோயைக் குணப்படுத்தும் அளவுக்கு, மனநல மருத்துவம் இன்றைக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது.

பேய், பிசாசு பிடித்திருப்பதாகச் சொல்லப்பட்டவர்கள் மருந்தால் குணமடைந்தார்கள். ஆக பேய், பிசாசு, பில்லி, சூனியம் என்பவை எல்லாம் அறிவைப் பயன்படுத்தாதவர்கள் கூறிய கூற்று என்பதை அறிவியல் வளர்ச்சி நிரூபித்துவிட்டது.

மூளை நரம்புகளில் செய்திப் பரிமாற்றம் செய்யும் ஒரு சில அலைபரப்பிகளில் (Neuro transmitter) ஏற்படும் சமநிலையற்ற தன்மையே மனநோய்களுக்குக் காரணம். இவற்றை ஒருநிலைப்படுத்தும் மருந்துகளைக் கொடுக்கும்போது மனநோய் குணமடைகிறது. ஆக, மனநோய்கள் மூளை நரம்பியல் சார்ந்த மருத்துவப் பிரச்சினைதான். மற்றபடி வேறெந்த மாய, மந்திரம் சார்ந்தவையும் அல்ல.

தேவை அரவணைப்பு

மருத்துவரீதியான மற்ற நோய்களில் இருந்து மனநோய்கள் மாறுபடுகின்றன. மனநோயாளிகளுக்கு நம்முடைய அன்பும் ஆதரவும் தேவை. பொதுவாக எல்லா நோயாளிகளுக்கும் அன்பும் ஆதரவும் தேவை என்றாலும் மனநோயாளிக்கு சற்றுக் கூடுதலாகத் தேவைப்படுகிறது. இந்த உண்மையை சர்வதேச அளவில் மனநோயாளிகள் மத்தி யில் நடத்தப்பட்ட பல ஆராய்ச்சி முடிவுகள் (The International Pilot Study of Schizophrenia) உறுதிசெய்கின்றன.

ஓர் ஆச்சரியமான உண்மை என்னவென்றால் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளைவிட நம் நாட்டைப் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மனநோயாளிகள் வேகமாகவும் சிறப்பாகவும் குணமடைகின்றனர். இதற்குக் காரணம் நம் நாட்டிலுள்ள குடும்ப அமைப்பு. அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி என ஒன்றாகச் சேர்ந்து வாழும் இந்தக் குடும்ப அமைப்பு முறையால் அன்பும் அரவணைப்பும் அதிகம் கிடைக்கிறது.

பேச்சில் கவனம்

‘மனச்சிதைவு நோயுடன் வாழுதல்’ (Living with schizophrenia) என்ற நோக்கம் நிறைவேற வேண்டுமானால் நோயாளி, குடும்பம், சமுதாயம் என்ற முப்பரிமாண அணுகுமுறை அவசியம். மருத்துவரின் ஆலோசனைப்படி சரியாக மருந்துகளை எடுத்துக்கொண்டாலும்கூட, நோயாளிகளுக்கு அரவணைப்பு கொடுக்க வேண்டியது அத்தியாவசியம்.

குடும்பத்தாரின் அன்பும் ஆதரவும் மருந்துகளுக்கு இணையான ஊக்கத்தைக் கொடுக்கக்கூடியவை. குடும்பத்தினர் உணர்ச்சிகரமான பேச்சை (Expressed Emotions) நோயாளிகளிடம் கவனமாகக் கையாள வேண்டும். மனநோயாளி மனம் வருந்தும் வகையில் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது.

‘பைத்தியம், மெண்டல், லூசு’ போன்ற வார்த்தைகளை விளையாட்டுக்குக்கூடப் பயன்படுத்தக் கூடாது. குடும்ப நிகழ்வுகளில் அவர்களது முறையான பங்களிப்பும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மனித நேயம்

மனநோய் மீதும் மன நோயாளிகள் மீதும் சமூகம் உருவாக்கி வைத்துள்ள இழிவான பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும். மனநோய் என்பது யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். மனநோயாளிகளைப் புறக்கணிக்கக் கூடாது. சில குறைபாடுகள் இருந்தாலும், அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். மனித நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

மாறிவரும் நாகரிகத்தால் மாண்டு போய்க்கொண்டிருக்கும் மனித நேயம் மறைந்துபோகாமல் காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. மனித நேயம் உயர்ந்தால் மனச்சிதைவு நோயுடன் வாழுதல் என்ற நோக்கம் மெய்ப்படும், சந்தேகமில்லை.

கட்டுரையாளர், கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரி பேராசிரியர்,
மனநல மருத்துவர்
தொடர்புக்கு: arulmanas@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x