

விமானத்தில் பறப்பது சுகம் தரும் அனுபவம் என்றால், அதில் பணியாற்ற வாய்ப்பு கிடைப்பது என்பது இன்னும் பெரிய விஷயம். இளம்பெண்கள் பலரது கனவுகளில் ஏர்ஹோஸ்டஸ் பணி தனி இடத் தைப் பிடித்துள்ளது. நவநாகரீகமான பணியாகக் கருதப்படும் இப்பணிக்கு பெண்களிடையே போட்டி மிகுதி. இதே பணியில் ஈடுபடும் ஆண்கள் ‘ஏர்-அட்டெண்டர்’ என அழைக்கப்படுவர். ஏர்ஹோஸ்டஸ் பணிக்குச் செல்ல ஆங்கிலம், ஹிந்தி, பிற மாநில மொழிகள், வெளிநாட்டு மொழிகளை கற்றுத் தேர்ந்தவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது.
பிளஸ் 2 படித்து முடித்ததும் ஓராண்டு பட்டயப் படிப்பான ஏர்ஹோஸ்டஸ் டிரெய்னிங் வகுப்பில் சேரலாம். அதைவிட, ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்துவிட்டு இப்பணியில் சேர்வது நல்லது. இப்பணி சார்ந்த டிராவல் டூரிஸம், ஹாஸ்பிட்டாலிட்டி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் போன்ற பட்டப்படிப்புகளை படித்துவிட்டும் சேரலாம்.
இப்படிப்புகளை தனியார் கல்வி நிறுவனங்களே அதிகம் அளிக்கின்றன. சென்னையில் உள்ள பிராங்க்ஃபின் இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் இதற்கான படிப்புகளை வழங்குகின்றன. இப்படிப்புக்கான கட்டணம் ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை. இது ஒவ்வொரு கல்வி நிறுவனத்துக்கும் மாறுபடும்.
ஏர்ஹோஸ்டஸ் பட்டயப் படிப்பில் விமான சட்டதிட்டங்கள், விமானத்தில் உள்ள நடைமுறைகள், பயணிகளுக்கான சேவை, முதலுதவி, சகிப்புத்தன்மை, மொழி தொடர்பு உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன. இப்பணிக்கு அழகிய தோற்றம், சரியான உடல் எடை, புத்திக்கூர்மை, சமயோசிதத்துடன் செயல்படுவது ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஓராண்டு படிக்கக்கூடிய இப்படிப்பில் 3 மாதங்கள் விமானங்களில் நேரடி பயிற்சியில் ஈடுபட வேண்டும். 12 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றக்கூடிய உடல்நிலை கொண்டவராக இருக்கவேண்டும்.
பல நாடுகளுக்கு செல்லவேண்டி இருக்கும். எந்த நேரத்திலும் பணிக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும். தனிமையில் இருக்கப் பழகியவராகவும் தைரியம் மிகுந்தவராகவும் இருத்தல் அவசியம். பயணிகளிடம் கனிவாக, சகிப்புத்தன்மையுடன், இன்முகத்துடன் சேவை செய்வது முக்கியம்.
பொதுவாக தனியார் விமான நிறுவனங்கள், திருமணத்துக்குப் பிறகு பணியில் வைத்துக்கொள்வதில்லை. எனவே, அதற்குத் தகுந்தபடி மாற்றுப்பணிக்கு செல்லவும் தயாராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இளம் வயதில் கண்ட கனவுத் தொழிலான ஏர்ஹோஸ்டஸ் பணி நாகரிகமானது, ஆடம்பரமானது. பல நாடுகளுக்கும் செல்ல முடியும். எங்கு சென்றாலும் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கலாம். உயர்தரமான உணவு வகைகள் சாப்பிடலாம். எனவே, ஏர்ஹோஸ்டஸ் பணியில் சேர்வதன் மூலம் தங்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியோடு சிறகடித்துப் பறக்கலாம்!