Published : 29 Apr 2017 10:27 AM
Last Updated : 29 Apr 2017 10:27 AM

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறை

உங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் உங்களுக்கு மட்டும் சொந்தமானதா? நமக்குச் சொந்தமான இடத்தில் துளையிட்டு நாம் கட்டணம் செலுத்தும் மின்சாரம் நமது மோட்டரைக் கொண்டு நாம் சேமிக்கும் தண்ணீர் நம்முடைய நீர் என்று மட்டும் சொல்ல முடியுமா?

பூமியிலிருந்து எடுக்கும் ஒவ்வொரு துளி நீரும் அனைவருக்கும் பொது வானது. நாம் நீரை விரயமாக்கினால் அது பிறரையும் பாதிக்கும். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது மிக அவசியமான ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தண்ணீருக்காக அலையாய் அலையும் மனிதர்களைப் பார்க்கிறோம், அவர்களது கஷ்டங்களைக் காதுகொடுத்துக் கேட்கிறோம். ஆனாலும் எத்தனையோ அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் தனி வீடுகளிலும் மொட்டை மாடியில் காணப்படும் நீர்த் தொட்டிகளில் தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டிருக்கும் காட்சி தென்பட்டுக்கொண்டே இருக்கிறது.

அவசர அவசரமாக ஓடும் தினசரி நடவடிக்கைகளில் பலவற்றை எளிதாக மறந்துவிடுகிறோம். காலையில் குளியலறைக்குள் நுழைகிறோம். குழாயிலிருந்து புஸ்ஸென்ற சத்தம் மட்டுமே கேட்கிறது. எரிச்சலுடன் வெளியே வந்து தண்ணீருக்கான மோட்டரை இயக்கும் பொருட்டு அதன் சுவிட்சைப் போடுகிறோம். அப்படியே அனைத்து வேலைகளைத் தொடருகிறோம். ஆனால் போட்ட சுவிட்சை யார் அணைப்பது? அது குறித்த அக்கறையே கொள்வதில்லை. ஒருவேளை மோட்டர் சுவிட்சைப் போட்டது நினைவில் வந்தாலும் யாராவது அணைப்பார்கள் என்ற சோம்பேறித்தனமான எண்ணம் வந்துவிடுகிறது. விளைவு, கேட்பாரின்றி நிரம்பி வழிகிறது தண்ணீர்.

கோடை நெருங்குகிறது. நிலத்தடியில் மழைக்காலம் போன்று தாராளமாக நீர் கிடைக்காது. இது எல்லாம் நமக்குத் தெரியும். ஆனால் அது நமது நினைவில் உறைப்பதில்லை. அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் அனைவருமே தண்ணீர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் யாரோ ஒருவரது தவறால் அனைவருக்கும் கஷ்டம் வந்துசேரும். யார் மோட்டரைப் போட்டிருந்தாலும் உங்கள் கவனத்துக்கு வந்தால் நீர் நிரம்பி வழியும் முன்னர் மோட்டரை அணைத்துவிடுங்கள். தேவைக்கு மட்டுமே தண்ணீரைப் பயன்படுத்துங்கள். நமது இருப்பு மிகவும் குறைவு என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாகச் செலவிட்டால் சிரமங்களைக் குறைக்கலாம்.

பாத்திரங்களைக் கழுவும் தொட்டியில் போட்டுப் பாத்திரங்களைக் கழுவும்போது குழாயில் நீர் கொட்டிக்கொண்டே இருக்க வேண்டுமா? சிறிது கவனமாக இருந்தால் பெருமளவில் நீரைச் சேமிக்கலாம். பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்சும்போது செடிகளுக்கு மட்டும் நீரைத் தெளிக்கலாம். நிலத்துக்கெலாம் நீரைப் பாய்ச்சினால் அது வீண் தான்.

துணி துவைக்கும்போது பக்கெட் நிரம்பிய பின்னரே அலசுங்கள். குழாயைத் திறந்துவிட்டுக்கொண்டே துணிகளை அலசும்பொது நீர் வீணாவது தெரியவே தெரியாது. காய்கறிகளையும், பழங்களையும் கழுவ வேண்டுமானால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து அதில் இவற்றைப் போட்டுக் கழுவுங்கள். குழாயைத் திறந்துவைத்து இதே வேலையைப் பார்த்தால் தண்ணீர் அதிகம் செலவாகும்.

வீட்டின் முன்பகுதிகளையும் நடைபாதைகளையும் கழுவி விடுவதற்கு முன்னர் அவற்றை துடப்பதால் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். முழுவதும் தண்ணீரால் செய்ய வேண்டுமானால் ஏராளமாய் தண்ணீர் செலவாகும். குளியலறையில் ஷவரைத் திறந்துவிட்டுக் குளிப்பதற்குப் பதில் வாளியில் தண்ணீரைப் பிடித்துவைத்து பின்னர் குளிக்கலாம். இப்படிப் பல வழிகளில் நீரைச் சேமித்தால் அது நமக்கும் நல்லது பிறருக்கும் நல்லது.

- சாம்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x