வேலை வேண்டுமா?- சீருடைப் பணி 15,711 காலியிடங்கள்

வேலை வேண்டுமா?- சீருடைப் பணி 15,711 காலியிடங்கள்
Updated on
2 min read

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல்துறையில் 2-ம் நிலைக் காவலர், சிறைத் துறையில் 2-ம் நிலை சிறைக் காவலர், தீயணைப்புத் துறையில் தீயணைப்பவர் ஆகிய பதவிகளில் 15,711 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப இருக்கிறது. சீருடைப் பணியில் ஒரேநேரத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்புவது இதுவே முதல் முறை.

மதிப்பெண் அடிப்படையில் ஒதுக்கீடு

காவல்துறையில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 4,589-ம், ஆயுதப்படையில் 4,627-ம், சிறைத் துறையில் 976-ம், தீயணைப்புத் துறையில் 1,512-ம் காலியிடங்களும் இடம்பெற்றுள்ளன. மொத்தக் காலிப்பணியிடங்களில் 10 சதவீதம் விளையாட்டு வீரர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுக்குப் பிடித்தமான பதவிகளை வரிசைப்படி விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். முன்னுரிமை மற்றும் மதிப்பெண் தகுதி அடிப்படையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

தேவையான தகுதி

குறைந்தபட்சக் கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். வயது 18 முதல் 24-க்குள் இருக்க வேண்டும். பி.சி., எம்.பி.சி. பிரிவினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு 35 ஆகும். உடற்கூறு தகுதியைப் பொறுத்தவரையில் உயரம் குறைந்தபட்சம் 170 செ.மீ. இருக்க வேண்டும். ஆதி திராவிடர், பழங்குடியினர் எனில் 167 செ.மீ. போதுமானது. அனைத்து வகுப்பினருக்கும் மார்பளவு 81 செ.மீ. விரிவடையும் நிலையில் 86 செ.மீ. இருக்க வேண்டும். பெண்களுக்குக் குறைந்தபட்ச உயரம் 159 செ.மீ. ஆகும் எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு அமைந்திருக்கும்.

தேர்வு முறை

முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதற்கு 80 மதிப்பெண். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, உளவியல் பாடங்களில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் ‘ஒரு காலியிடத்துக்கு 50 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் அடுத்த கட்ட தேர்வுகளான உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, உடல்திறன் தேர்வு ஆகியவற்றுக்கு அழைக்கப்படுவர்.

உடல் திறன் போட்டிகளில் ஆண்களுக்குக் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம் இடம்பெறும். பெண்களுக்கு நீளம் தாண்டுதல், கிரிக்கெட் பந்து எறிதல் அல்லது குண்டு எறிதல், 100 மீட்டர் அல்லது 200 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்படும். எழுத்துத் தேர்வுக்கு 80 மதிப்பெண், உடற்திறன் தேர்வுக்கு 15 மதிப்பெண். என்.சி.சி., என்.எஸ்.எஸ். ஈடுபாடு, விளையாட்டு ஆகியவற்றுக்கு 5 சிறப்பு மதிப்பெண் என மொத்த மதிப்பெண் 100. விண்ணப்பப் படிவங்கள் தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட தபால் நிலையங்களில் கிடைக்கும்.

வேலை வேண்டுமா?

தபால் நிலையங்களின் விவரங்களைச் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (>www.tnusrb.tn.gov.in) தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பத்தின் விலை ரூ.30. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 22-க்குள் சென்னையில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்துக்கு அனுப்ப வேண்டும். எழுத்துத் தேர்வு மே 21-அன்று நடைபெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in