Last Updated : 27 Dec, 2016 11:22 AM

 

Published : 27 Dec 2016 11:22 AM
Last Updated : 27 Dec 2016 11:22 AM

சேதி தெரியுமா? - சம்பளப் பாகுபாட்டில் முன்னிலை

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு சமீபத்தில் உலகளாவிய சம்பள அறிக்கையை (2016-17) வெளியிட்டது. ஆண் தொழிலாளர்களுக்கும் பெண் தொழிலாளர்களுக்கும் சம்பள அடிப்படையில் நிலவும் பாகுபாட்டில் முன்னணி இடத்தை வகிக்கும் நாடாக இந்தியா இருப்பது அதில் தெரியவந்தது. ஒரே நிலையில் இருந்து ஒரே பணியைச் செய்யும் பெண் தொழிலாளர்கள், ஆண் தொழிலாளர்களைவிட 30 சதவீதத்துக்கும் மேல் குறைவான ஊதியத்தைப் பெறுகிறார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஆண், பெண் தொழிலாளர்களுக்கிடையே குறைந்தபட்ச சம்பளப் பாகுபாடு நிலவும் நாடாகச் சிங்கப்பூர் திகழ்கிறது. இங்கே வித்தியாசம் 3 சதவீதமே. இந்தியாவைவிடப் பாலின ரீதியான சம்பளப் பாகுபாட்டில் முன்னிலை வகிக்கும் நாடாக 37 சதவீதத்துடன் தென்கொரியா உள்ளது. இந்தியாவில் குறைந்தபட்சக் கூலிப் பணிகளில், பெண் தொழிலாளர்களில் 60 சதவீதம் பேர் பணியாற்றுகின்றனர். 15 சதவீதம் பேர்தான் உயர் சம்பளப் பணிகளில் இருக்கின்றனர்.

குப்பைகளை எரிக்கத் தடை

திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தேசியப் பசுமை தீர்ப்பாயம், டிசம்பர் 22-ம் தேதி தடையுத்தரவையும் பிறப்பித்தது. திடக்கழிவு மேலாண்மை விதிகளை (2016) அனைத்து மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. மக்காத கழிவுகளையும் மறுசுழற்சிக்குப் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக்கையும் பிரித்துச் செறிவூட்டும் கழிவு நிலையங்களை உருவாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

குறைந்த உத்தரவாதம் கொண்ட பி.வி.சி., குளோரினேற்றம் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைக் கையாள்வதற்கான வழிகாட்டுதல் நடைமுறைகளை மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகமும் மாநில அரசுகளும் ஆறு மாத காலத்துக்குள் உருவாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனா ஏவிய டான்சாட்

உலகளாவிய பருவநிலை மாறுதல்களைப் புரிந்துகொள்வதற்காக, உலகளவில் வெளியேற்றப்படும் கார்பன் டைஆக்சைடின் தாக்கத்தைக் கண்காணிக்க டான்சாட் செயற்கைக்கோளை டிசம்பர் 21-ம் தேதி சீனா வெற்றிகரமாக ஏவியது. வடமேற்கு சீனாவிலுள்ள கோபி பாலைவனத்திலுள்ள ஜியுகுவான் செயற்கைக் கோள் ஏவும் மையத்திலிருந்து, லாங்க் மார்ச் 2டி ராக்கெட்டில் வைத்து, டான்சாட் செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

லாங்க் மார்ச் வரிசை ராக்கெட்களில் வெற்றிகரமாக ஏவப்பட்ட 243-வது செயற்கைக்கோள் இது. பசுங்குடில் வாயுவைக் கண்காணிக்கச் சொந்தமாகச் செயற்கைக்கோள் வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா, ஜப்பானையடுத்து மூன்றாவது நாடு என்ற பெருமையைச் சீனா பெறுகிறது. டான்சாட் செயற்கைக்கோள், 16 நாட்களுக்கொரு முறை கார்பன் டைஆக்சைடு அளவை ஆராயும். இந்தச் செயற்கைக்கோளின் எடை 620 கிலோ இருக்கும்.

வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி

இந்தியாவின் 24 மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கு 2016-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்பட்டது. 8 கவிதைப் படைப்புகள், 7 சிறுகதை நூல்கள், 2 விமர்சனப் புத்தகங்கள், 1 கட்டுரை நூல், 1 நாடக நூல் ஆகியவற்றுக்கு இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவரான வண்ணதாசன் என்ற சி. கல்யாணசுந்தரம், ‘ஒரு சிறு இசை’ சிறுகதைத் தொகுப்புக்காக இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு விருதுடன் ஒரு லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் கவிதை, சிறுகதை, கடித இலக்கியத்தில் பங்களிப்பு செய்துள்ள வண்ணதாசனுக்கு வயது 70.

புதிய தலைமைச் செயலாளர்

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் டிசம்பர் 23-ம் தேதி பொறுப்பேற்றார். 1981-ல் ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்ற இவர் தமிழகத்தின் நான்காவது பெண் தலைமைச் செயலாளர் ஆவார். முன்னாள் தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ் வீட்டில் டிசம்பர் 21-ம் தேதி நடந்த வருமான வரித்துறை சோதனையை அடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பி.ராம மோகன ராவ், காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். 57 வயதாகும் கிரிஜா வைத்தியநாதன், இதற்கு முன்னர் நில மேலாண்மைத் துறை ஆணையராக இருந்தார். தமிழக தலைமைச் செயலாளராக இதற்கு முன்னால் இருந்த பெண்கள் லக்ஷ்மி பிராணேஷ், எஸ். மாலதி, ஷீலா பாலகிருஷ்ணன்.

தங்கம் வென்றார் காயத்ரி

தமிழகத்தைச் சேர்ந்த என். காயத்ரி, புனேயில் நடைபெற்ற 60-வது தேசியத் துப்பாக்கிசுடும் சாம்பியன்ஷிப் 50 மீட்டர் பிரிவில் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். தமிழகத்திலிருந்து சீனியர் பிரிவில் தங்கம் வென்ற முதல் தனிநபர் வீராங்கனை என்ற பெருமையை இவர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றிருக்கிறார். இவர் கோவையைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு ஜூனியர் பிரிவில் தங்கமும், சீனியர் பிரிவில் வெண்கலமும் வென்றிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x