Published : 09 Sep 2016 12:13 PM
Last Updated : 09 Sep 2016 12:13 PM

கமல் வாழ்த்தினார்... அப்பா எச்சரித்தார்!! - நடிகர் காளிதாஸ் பேட்டி

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பல குரல்களில் மிமிக்ரி செய்து, ‘ஜெயராம் பையனா இது?' என்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர் காளிதாஸ். தற்போது ‘மீன் குழம்பும் மண் பானையும்' படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் பேசியதிலிருந்து...

இரண்டு மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறீர்கள். நாயகனாகத் தமிழில் அறிமுகமாகக் காரணம் என்ன?

தமிழ் மற்றும் மலையாளம் இரண்டிலுமே நிறைய கதைகள் கேட்டேன். ஆனால் எனக்கு பாலாஜி தரணீதரன் சார் சொன்ன கதை மிகவும் பிடித்திருந்தது. ‘ஒரு பக்க கதை' முடித்தேன். அந்தப் படம் பல்வேறு காரணங்களால் வெளிவராமல் இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து கேட்ட கதைகளில் எனக்கு அமுதேஷ்வர் சார் சொன்ன கதை பிடித்திருந்தது. அதுதான் ‘மீன் குழம்பும் மண் பானையும்' படம். இதோ இப்போது ஷூட்டிங் எல்லாம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. இந்தப் படம் வெளியானவுடன் ‘ஒரு பக்க கதை' வெளியாகும் என்று நம்புகிறேன்.

மற்றபடி, கலைக்கு மொழி தடையில்லை என்பது என் கருத்து. தற்போது மலையாளத்தில் ஒரு படம் நடித்து வருகிறேன். இந்த மொழியில்தான் அறிமுகமாக வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்தது கிடையாது.

‘மீன் குழம்பும் மண் பானையும்' படத்தின் கேரக்டர் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்...

இந்தப் படத்தில் கல்லூரி இளைஞனாக நடித்திருக்கிறேன். எனக்கு அப்பாவாக பிரபு சார் நடித்திருக்கிறார். அவரோடு இணைந்து நடிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அப்பா - மகன் உறவுகளுக்கு இடையே இருக்கும் தலைமுறை இடைவெளியை மையப்படுத்திதான் இப்படத்தின் கதை அமைந்திருக்கிறது. படம் பார்ப்பவர்கள் அனைவருமே இப்படத்தின் கதைக் களத்தோடு தங்களைப் பொருத்திக் கொள்வர்கள். அந்த அளவுக்கு யதார்த்தத்தை மீறாமல் இருக்கும்.

உங்களைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் கமல். முதல் படத்திலேயே பிரபு போன்ற சீனியருடன் இணைந்து நடித்திருக்கிறீர்கள். இருவரும் உங்களுக்குக் கொடுத்த அட்வைஸ் என்ன?

‘மீன் குழம்பும் மண் பானையும்' படத்தில் நடிக்கும் போது, ‘இப்படி நடி. அந்த ஸீன்ல வேற மாதிரி நடிச்சிருக்கலாம். அதுதான் ரசிகர்களிடம் எடுபடும்‘ என நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார் பிரபு சார்.

‘ஒரு பக்க கதை‘ ஆரம்பிக்கும்போது என்னைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் கமல் சார். அப்போது ‘மேக் மீ புரவுட்’ என்றார். அந்த வாழ்த்தை விடவும் பெரிய அட்வைஸ் வேண்டுமா என்ன?

அப்பாவின் வழியில் நீங்களும் நடிகராகிவிட்டீர்கள். அப்பா என்ன சொன்னார்?

என் அப்பா எப்போதுமே மிகவும் உறுதுணையாக இருப்பார். நான் நடிக்கப் போகிறேன் என்றவுடன் எனக்கு எந்தவொரு ஆலோசனையையும் வழங்கவில்லை. ‘நாயகனாக அறிமுகமாகப் பலரும் காத்திருக்கிறார்கள். திரையில் ஒரு காட்சியிலாவது வந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உனக்கு அந்த வாய்ப்பு எளிதாகக் கிடைத்திருக்கிறது. நல்ல கதைகளைத் தேடி நடி' என்று அன்பாக எச்சரித்தார். அவருடைய வார்த்தைகளைக் காப்பாற்றணும். காப்பாற்றுவேன்.

‘ஹீரோவா மட்டுமே நடிப்பேன்' என்று நான் எந்த சபதத்தையும் போட்டுக் கொள்ளவில்லை. எனக்கு அனைத்துவிதமான கதைக்களங்களிலும், எல்லா விதமான கேரக்டரையும் செய்து பார்க்க‌ ஆசை.

சென்னை உங்களுக்கு எந்த அளவுக்கு நெருக்கமானது?

பள்ளி மற்றும் கல்லூரி இரண்டுமே இங்குதான் படித்தேன். ஒரு வாரம் சென்னையை விட்டுப் பிரிந்திருந்தேன் என்றால் எனக்கு எதையோ இழந்தது போன்று இருக்கும். கல்லூரி வாழ்க்கை என்பது மிகவும் இனிமையாக அமைந்தது. என்னோடு படித்த நண்பர்கள் ஒவ்வொருவராக நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்கள். விரைவில் அனைவருமே ஜெயிப்போம்.

ஆரம்பத்தில் 110 கிலோ எடை இருந்தீர்களாமே. எப்படி எடையைக் குறைத்தீர்கள்?

சுமார் ஒரு வருடம் வீட்டை விட்டு எங்கேயும் போகவில்லை. தப்பான வழியில் அல்லாமல் சரியான வழியில் எடை குறைக்க வேண்டும் எனத் திட்டமிட்டேன். ‘ஜிம்மே கதி' என்று எப்போதுமே ட்ரெய்னருடன்தான் இருப்பேன். இப்போது உடல் இளைத்துவிட்டது. ஆனால், அதே நேரத்தில் இப்போதுள்ள ‘ஸ்டமினா'வை அப்படியே பராமரிக்க இன்னும் மெனக்கெட்டு வருகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x