Last Updated : 21 Feb, 2017 10:48 AM

 

Published : 21 Feb 2017 10:48 AM
Last Updated : 21 Feb 2017 10:48 AM

சேதி தெரியுமா? - முதல் பசுமை கப்பல்

ஐ.என்.எஸ். சர்வெக்ஷக் இந்தியப் போர்க் கப்பலில் மேற்புறத்தில் கடந்த ஆறு மாதமாக மேற்கொள்ளப்பட்ட சூரியத் தகடுகள் (Solar cell) பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. இந்தப் பணி கேரளத்தின் கொச்சியில் நடந்தது. இந்தியாவில் போர்க் கப்பல் ஒன்றில் சோலார் தகடுகள் பொருத்தப்படுவது இதுவே முதல் முறை. பொதுவாக டீசல் ஜெனரேட்டர் கொண்டுதான் கப்பலில் மின்சாரம் உற்பத்திசெய்யப்படும். அது நாள் ஒன்றுக்கு 165 கிலோ கார்பனை வெளியிட்டுச் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும்.

ஆனால் சூரியனின் வெப்ப ஆற்றலைச் சூரியத் தகடுகள் மூலம் மின்னாற்றலாக மாற்றும் இந்த முறை சுற்றுச்சூழலுக்கு உகந்தது. ஆகையால் இது பசுமைத் தொழில் நுட்பமாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவின் முதல் பசுமை கப்பல் இதுவே. இந்தக் கப்பலில் 18 சோலார் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 5.4 கிலோவாட் மின்சாரம் உற்பத்திசெய்யலாம். இந்த மின்சாரம், போர்க் கப்பலில் உள்ள விளக்குகளையும் குளிர் சாதன எந்திரங்களையும் இயக்கப் பயன்படும் எனக் கூறப்படுகிறது.



மிதக்கும் தொடக்கப்பள்ளி

லோக்தக் ஏரி இந்தியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரி. இது மணிப்பூரில் உள்ளது. இந்த ஏரி பம்திஸ் (phumdis) என்னும் சிறு சிறு தீவுகளால் ஆனது. இவற்றில் நான்காயிரம் மக்கள் இந்த நன்னீர் ஏரியின் மீன் வளத்தை நம்பி வசிக்கிறார்கள். இந்தச் சிறிய தீவிலிருந்து நிலப் பகுதியில் இருக்கும் பள்ளிகளுக்குக் குழந்தைகளை அனுப்பச் சிரமமாக இருப்பதால், இந்த ஏரியிலேயே பள்ளி தொடங்க முடிவெடுக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டுள்ளது. லோக்தக் ஏரி மீனவச் சங்கம் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பள்ளியைத் தொடங்கியுள்ளது. இந்தப் பள்ளி மூலம் படிப்பறிவு இல்லாத பெற்றோர்களுக்கும் கல்வி பயிற்றுவிக்கும் திட்டமும் உள்ளது. தொடக்கக் கட்டமாக இந்தப் பள்ளியில் 25 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் இருவர் பணியிலமர்த்தப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே முதல் முறையாக இந்தப் பகுதியில் மிதக்கும் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டிருக்கிறது. உலகின் ஒரே மிதக்கும் தேசியப் பூங்காவான கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா இந்த ஏரியில்தான் அமைந்துள்ளது.



தனியார் வங்கிகளுக்குச் சவால்!

பாரத ஸ்டேட் வங்கியுடன், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் , ஸ்டேட் பேங்க் ஆஃப் பட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங் ஆஃப் ஐதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஜெய்பூர் ஆகிய ஐந்து வங்கிகளை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் செலவினம் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் அளவுக்குக் குறையும் எனத் தெரியவந்துள்ளது. மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் சொத்துமதிப்பு சுமார் ரூ. 37 லட்சம் கோடியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 50 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் 22,500 கிளைகள், 58 ஆயிரம் ஏடிஎம்கள் கொண்ட வங்கியாகப் பாரத ஸ்டேட் வங்கி உருவெடுக்கும். பொதுத்துறை வங்கிகளைத் தனியார் வங்கிகளோடு போட்டியிடும் வகையில் மேம்படுத்துவதற்கான இந்திரத் தனுஷ் திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த இணைப்புத் திட்டம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



பிராந்தியப் பொருட்களுக்குக் காப்புரிமை

புவிசார் குறியீடு (Geographical Indications) பட்டியலில் நாக்பூர் ஆரஞ்சு, மதுரை மல்லி, காஞ்சிபுரம் பட்டு, ஆளப்புழா கயிறு, பாலராமபுரம் சேலை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட இந்தியப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புவிசார் குறியீடு மூலமாகப் பிராந்திய அளவில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு அறிவுசார் சொத்துக் காப்புரிமை சட்டத்தின் கீழ் பாதுகாப்பும், சர்வதேச அளவிலான அங்கீகாரமும் வழங்கப்படுகிறது. கேரள மாநிலம் நிலம்பூர் தேக்குக்குப் புவிசார் குறியீடு இப்போது கிடைத்துள்ளது. நிலம்பூர் காட்டுப் பகுதியில் உள்ள தேக்கு மரங்கள் தனித்துவம் வாய்ந்தவை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மலபார் ஆட்சியர் எச்.வி.கனாலி என்பவரால் இங்கு மரங்கள் நடப்பட்டன. அவரது பெயராலேயே கனாலி ப்ளாட் என இந்தக் காடு அழைக்கப்படுகிறது. இங்கு உலகின் முதல் தேக்கு காட்சியகம் உள்ளது.



புதிய முதல்வர்

எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் 13-வது முதல்வராகப் பிப்ரவரி 16 அன்று பதவியேற்றார். அவருடன் 30 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் நடந்த விழாவில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் பதவியேற்பு, ரகசியக் காப்பு பிரமாணம் செய்துவைத்தார். அதிமுக இரு குழுக்களாகப் பிரிந்துள்ள நிலையில் புதிய அமைச்சரவை 15 நாள்களுக்குள் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.



விரைவில் கம்பலா போட்டி

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டம் வெற்றிபெற்றததைத் தொடர்ந்து கர்நாடகாவின் பாரம்பரியக் காளைப் பந்தயமான கம்பலாவுக்கும் ஆதரவாகப் போராட்டம் வெடித்தது. அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா, தேவைப்பட்டால் அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் சித்தராமைய்யா தெரிவித்தார். பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கால் 2016-ம் ஆண்டு கம்பலாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இப்போது போராட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கம்பலா போட்டிக்கு அனுமதி அளிக்கும் சட்டம் கர்நாடகச் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x