Last Updated : 03 Apr, 2017 10:05 AM

 

Published : 03 Apr 2017 10:05 AM
Last Updated : 03 Apr 2017 10:05 AM

குரு

நீங்கள் எத்தகைய வாகனத்தை எதிர்பார்க்கிறீர்கள்? பொதுவாக எந்த வாகனத் தயாரிப்பாளரும் இந்தக் கேள்வியை வாடிக்கையாளர்களிடம் கேட்பதில்லை. தாங்கள் தயாரித்த வாகனத்தில் இத்தனை வசதிகள் இருக்கின்றன. அவை அனைத்தும் உங்களுக்கானது என்று கூறுவர். நாமும் அதில் உள்ள வசதிகள் நமக்கு சற்றேறக்குறைய இருந்தாலே போதும் என்ற மன நிலையில் வாகனத்தை வாங்கிவிடுவோம்.

சில சொகுசு ரகக் கார் தயாரி்ப்பு நிறுவனங்கள் மட்டுமே வாடிக்கை யாளர்களின் விருப்பத்துக்கேற்ப சில மாற்றங்களை செய்து தரும் பணியைச் செய்கின்றன. அதுவும் உள்புற வசதிகள், இருக்கைகள் உள்ளிட்டவை மட்டுமே. ஆனால் லாரிகளை பொறுத்தமட்டில் இந்தப் பேச்சுக்கே இடமில்லை.

லாரி டிரைவரின் கேபினில் குறை வான வசதி இருந்தால் கூட போதும், தனக்கு வருமானம் குறையக் கூடாது என்ற எண்ணத்தில் வசதிகளைப் பற்றி உரிமையாளர் எண்ணிப் பார்ப்பதே இல்லை. ஆனால் முதல் முறையாக டிரை வர்களிடம் லாரிகளில் எத்தகைய வசதி தேவை என்று கேட்டறிந்து அதற்கேற்ப வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டு வாங்கும் உரிமை யாளரிடம் அவரது தேவையான, அதிக மைலேஜ், நீடித்து உழைக்கும் திறன், நம்பகத் தன்மை ஆகிய சிறப்பம்சங்களுடன் கூடிய வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுதான் அசோக் லேலண்டின் குரு.

கடந்த ஜனவரி மாதம் அறிமுகப் படுத்தப்பட்டு இதுவரை 500-க்கும் மேலான வாகனங்களை விற்பனை செய்துள்ளது அசோக் லேலண்ட்.

வாடிக்கையாளர்கள், வாகன ஓட்டிகள் என பல்வேறு தரப்பினரின் கருத்தை அறிந்து அதன் அடிப்படையில் குரு தயாரிக்கப்பட்டதாக அதன் வரலாற்றை விவரித்தார் நிறுவனத்தின் சர்வதேச டிரக் பிரிவுத் தலைவர் அனுஜ் கதூரியா.

இலகு ரக வர்த்தக வாகனப் பிரிவில் ஒரு குறிப்பிட்ட இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியை இட்டு நிரப்புவதற்கான வாகனத்தை உருவாக்க வேண்டும் என நிறுவனம் முடிவு செய்தது.

பொதுவாக வாகனத்தை புதிதாக வடிவமைப்பது என்று திட்டமிட்டவுடன் அது வாகனமாக தயாராகி வருவதற்கு 36 மாதங்கள் வரை ஆகும். ஆனால் இதை பாதியாகக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் எந்த வகையிலும் தயாரிப்பில் சமாதானம் செய்து கொள்ளக் கூடாது என்று குழுவினருக்கு உணர்த்தப்பட்டது.

வாகனம் தயாரிப்பது என்ற உட னேயே வாகனம் எப்படி இருக்க வேண் டும் என்பது குறித்து இதை உபயோகிப் பவர்கள், இதை ஓட்டுபவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் ஏறக்குறைய இந்தியா முழுவதும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் கருத்து கேட்கப்பட்டது.

டிரைவர்கள் தாங்கள் ஓய்வெடுப் பதற்கு உரிய வசதி இருக்கவேண்டும் என்றனர். இதற்காக இருக்கை வசதி யில் மாற்றம் செய்யப்பட்டது. பொது வாக டிரைவரின் இடது கை பகுதியில் இருக்கும் ஹேண்ட் பிரேக் வலது பக்கத்துக்கு மாற்றப்பட்டது. இவ்விதம் மாற்றுவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என்று அவர்கள் தெரிவித் ததன் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டது.

உரிமையாளர்களோ, அதிக மைலேஜ் தேவை என்றனர். அதேசமயம் குறைந்த செலவில் நீடித்து உழைக்கும், பராமரிப்பு செலவு குறைந்ததாக இருக்க வேண்டும் என்றனர்.

பொதுவாக இலகு ரக வாகனங்கள் 4 சிலிண்டர் இன்ஜின் கொண்டவையாக இருக்கும். ஆனால் இப்போது முதல் முறையாக இது 3 சிலிண்டர் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. இதனால் மைலேஜும் கணிசமாக கூடியது.

வாகனம் தயாரிக்கப்பட்டு, சோதனை அடிப்படையில் ஓட்டிப் பார்க்கப்பட்ட தோடு மட்டுமின்றி, அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக பல்வேறு தரப்பினரிடம் இதை ஓட்டிப் பார்க்க தரப்பட்டது. வாடிக்கையாளர்கள் ஓட்டி பார்த்து திருப்தியான கருத்தைத் தெரிவித்த பிறகே அறிமுகம் செய்யப் பட்டது.

வழக்கமாக இலகு ரக வாகனங்கள் சேசிஸ் மட்டுமே தயாரித்து தரப்படும். பிறகு அதை வாடிக்கையாளர்கள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள கட்டுமான நிறுவனத்திடம் பாடி பில்ட் செய்து கொள்வார்கள். இதனால் வாகனம் டெலிவரி எடுத்த பிறகு குறைந்தது ஒரு மாதம் வரை காத்திருக்கவேண்டும்.

இந்தக் குறைபாடும் இதில் போக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் விரும்பும் வகையில் பாடி பில்ட் செய்து தரப்படுகிறது. இதனால் டெலிவரி எடுத்த நாள் முதலாகவே இதில் சரக்குகளை ஏற்றி பயன்படுத்த முடியும். இதனால் முதல் நாளிலிருந்தே இது பொருள் ஈட்டத் தொடங்கும். இது உரிமையாளர்களுக்கு மிகுந்த மன நிறைவை அளித்துள்ளது.

கேபினில் பொழுது போக்கு அம்சமாக ரேடியோ, மொபைல் சார்ஜர் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் வெளியே தனியாரிடம் சென்று இவற்றைப் பொறுத்த வேண்டிய அவசியமும் ஏற்படாது. இவ்விதம் செய்யும்போது எலெக்ட்ரிக் வயரிங்கில் மாற்றம் செய்வார்கள். இதனால் `ஷார்ட் சர்கியூட்’ ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதைத்தடுக்கும் விதமாக ரேடியோவையும் பொறுத்தி வழங்கியுள்ளோம்.

முதல் முறையாக டிரைவருக்கு ரூ.5 லட்சத்துக்கான காப்பீடு வசதியை யும் அளித்தோம். இது டிரைவர் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்தகைய வசதியை பிற வாகனங்களுக்கும் அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

இந்தியாவில் ஆண்டுக்கு இலகு ரக வாகன விற்பனை அதாவது 7.5 டன் முதல் 12 டன் வரையிலானவற்றின் விற்பனை 50 ஆயிரமாக உள்ளது. இதில் 10 சதவீத சந்தையைப் பிடிக்க குரு-வின் வரவு நிச்சயம் உதவும் என்றார் கதூரியா.

குரு-வில் கேபின் ஏசி வசதி செய்வதற்கான வசதியும் உள்ளது. உரிமையாளரே டிரைவராக இருப்போர் இதைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும் இப்போது உரிமையாளர்களது மனோ நிலையும் மாறி வருகிறது. டிரைவர் சிறப்பாக இருந்தால்தான் தங்களுக்கு வருமானம் என்ற எண்ணம் பரவலாக தோன்றிவருகிறது. இதனால் அனைத்து வாகனங்களும் ஏசி வாகனமாக மாறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இந்தியாவில் ஆண்டுக்கு இலகு ரக வாகன விற்பனை அதாவது 7.5 டன் முதல் 12 டன் வரையிலானவற்றின் விற்பனை 50 ஆயிரமாக உள்ளது. இதில் 10 சதவீத சந்தையைப் பிடிக்க குரு-வின் வரவு நிச்சயம் உதவும்.

தொடர்புக்கு: ramesh.m@thehindutamil.co.in



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x