Published : 26 Jan 2014 12:19 PM
Last Updated : 26 Jan 2014 12:19 PM

செழுமையான வாழ்வை தரும் பி.டெக். செராமிக் டெக்னாலஜி

நவநாகரிக யுகத்தில் நவீன கலாச்சாரத்துக்கு வித்திடும் செராமிக் வகை கலைப் பொருட்களுக்கு தனி இடம் உண்டு. செராமிக் டைல்ஸ், அலங்காரப் பொருட்கள், வியக்க வைக்கும் ஜாடிகளை தயாரிக்கும் நிறுவனங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பீங்கானை மூலப்பொருளாக கொண்டு, அதை உற்பத்தி செய்வது, வடிவமைத்து, விற்பனைக்கு அனுப்பிவைப்பது வரையிலான படிப்பாக பி.டெக். செராமிக் இன்ஜினீயரிங் - டெக்னாலஜி பட்டப்படிப்பு விளங்குகிறது.

இதை படிக்க விரும்புபவர்கள் கலை ஆர்வமும் கற்பனை வளமும் கொண்டிருப்பது நல்லது. இப்படிப்பை தமிழகத்தில் படித்தாலும்கூட, வட மாநிலங்களில் இதற்கான பணி வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக குஜராத் மாநிலத்தில் இத்தொழில் அபார வளர்ச்சி கண்டுள்ளதால், அங்குள்ள தொழிற்சாலைகளில் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தியும் கற்றுத் தேர்ந்தவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு காத்திருக்கிறது.

பீங்கான் பொருள் தயாரிப்பு மட்டுமின்றி, பெரிய அளவிலான தொழிற்சாலைகள், ஆராய்ச்சிக் கூடங்களிலும் செராமிக் தொழில்நுட்பம் பயன்படுகிறது. செராமிக் தொழில்நுட்பம் பயின்றவர்கள் இஸ்ரோ, பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் உயர் பொறுப்பை பெறவும் இயலும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் பி.டெக். செராமிக் இன்ஜினீயரிங் - டெக்னாலஜி நான்காண்டு பட்டப்படிப்பு உள்ளது. பொறியியல் கலந்தாய்வு மூலம் இதில் சேரலாம்.

சாலிட் ஸ்டேட் ஆஃப் பிசிக்ஸ் அண்ட் கெமிஸ்ட்ரி, விலங்கியல், மெட்டாலர்ஜி, செராமிக் ரா மெட்டீரியல், பிராசஸ் செராமிக், பிசிக்கல் செராமிக் உள்ளிட்ட பாடங்கள் இதில் கற்றுத்தரப்படுகின்றன.

இப்படிப்பை முடித்தவர்கள் செராமிக் டெக்னாலஜிஸ்டாகவும், செராமிக் டிசைனராகவும் பணியில் அமரலாம். இதில் பட்ட மேற்படிப்புகளாக எம்.டெக். செராமிக் இன்ஜினீயரிங் - டெக்னாலஜி உள்ளது. ஆராய்ச்சிப் படிப்பை முடிப்பவர்களின் தேவை மிகுதியாக உள்ளது. செராமிக் இன்ஜினீயர்-டெக்னாலஜி படித்து முடித்தவர்களுக்கு வெளிநாடுகளில் அமோக வரவேற்பு உள்ளது.

இதில் மோர்சலின் அண்ட் சைனா டின்னர்வேர், ஹை-வோல்டேஜ் எலக்ட்ரிக்கல் இன்சுலேட்டர் டைல்ஸ், ரிஸ்சாட்டரிக் கோட்டிங் ஃபார் மெட்டல்ஸ், கிளாஸ் புராடக்ட்ஸ் உள்ளிட்ட சிறப்பு படிப்புகளை எடுத்துப் படிப்பதால், செராமிக் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு துறைகளில் பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. படித்து முடித்தவுடன் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.

அதிகமாக வெளியிடங்களுக்குச் சென்று பணி செய்யவேண்டி இருக்கும். புதுப்புது வகை டிசைன்களை உருவாக்கக்கூடிய கற்பனை சக்தி பெற்றிருக்க வேண்டும். மொத்தத்தில் இது சவாலான படிப்பாக இருந்தாலும், எதிர்கால வாழ்வை செழுமையாக அமைத்துக்கொள்ள முடியும். வசதி படைத்தவர்கள் சுயமாக தொழிற்சாலை அமைத்து, அதிகளவு சம்பாதிக்க முடியும். உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து, பெரும் தொழிலதிபராக வலம் வரலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x