Published : 27 Jan 2014 12:00 AM
Last Updated : 27 Jan 2014 12:00 AM

மத்திய அரசு நிறுவனத்தில் விண்வெளி படிப்பு

விண்வெளி ஆய்வுத் துறையில் வளர்ந்த நாடுகளுக்கு நிகராகச் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது இந்தியா. நமது செயற்கைக்கோள்கள் விண்வெளியில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது செவ்வாயை ஆராய மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்திப் புகழ்பெற்றிருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ. விண்வெளித் துறையில் இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சி இளைய தலைமுறையினரை இத்துறை பக்கம் ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது. விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பொறியியல் படிப்புகளை மத்திய அரசு உயர்கல்வி நிறுவனமே வழங்குகிறது. அந்த நிறுவனம், இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (Indian Institute of Space Science and Technology).

மத்திய அரசு விண்வெளித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம், திருவனந்தபுரம் அருகே வள்ளியமலை என்ற இடத்தில் 100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இது ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே, இந்திய விண்வெளித் துறை, இஸ்ரோ ஆகியவற்றுக்குத் தேவையான என்ஜினியர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்குவதுதான். இங்கு ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங், ஏவியானிக்ஸ், பிசிக்கல் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.டெக். பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஏரோஸ்பேஸ், ஏவியானிக்ஸ் ஆகிய பிரிவுகளில் தலா 60 சீட்டுகளும், பிசிக்கல் சயின்ஸ் பிரிவில் 36 இடங்களும் உள்ளன. இதில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஆகியோருக்கு உரிய இடஒதுக்கீடு உண்டு. விண்வெளி தொழில்நுட்பப் பாடங்களில் எம்.டெக்., பிஎச்.டி. படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இஸ்ரோ மையங்களில் பயிற்சி பெறும் வாய்ப்பு இதன் சிறப்பு அம்சம்.

மேலும் டியூஷன் கட்டணம், உணவு-விடுதி கட்டணம், மருத்துவச் செலவு ஆகியவற்றுக்கு ஒவ்வொரு செமஸ்டருக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை, புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ.3,000 உதவித்தொகை எனப் பல்வேறு வகையான உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றன. அதனால் படிப்புச் செலவு குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தலாம். மேலும், எல்லாவற்றுக்கும் மேல் இந்த நிறுவனத்தில் படித்து முடித்தும் இஸ்ரோ மற்றும் இந்திய விண்வெளித் துறை ஆய்வு மையங்களில் என்ஜினியர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் வேலைவாய்ப்பு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.டெக். படிப்புக்குப் பிளஸ்-2 மதிப்பெண், ஐ.ஐ.டி. (மெயின் தேர்வு) மதிப்பெண் அடிப்படையில் இந்தப் படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். கட் ஆப் மார்க் கணக்கீட்டுக்கு 40 சதவீதம் பிளஸ்-2 மதிப்பெண்ணும், 60 சதவீதம் ஜெ.இ.இ. மெயின் தேர்வு மதிப்பெண்ணும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மேலும், ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வின் இரண்டாவது கட்டமான அட்வான்ஸ்டு தேர்வையும் மாணவர்கள் எழுத வேண்டும். அதில் குறைந்தபட்சம் 20 சதவீத மதிப்பெண்ணும், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் தலா 5 சதவீத மதிப்பெண்ணும் பெற வேண்டும். ஓ.பி.சி. வகுப்பினர் 20 சதவீதத்துக்குப் பதில் 18 சதவீதமும், அதேபோல் 5 சதவீதத்துக்குப் பதில் 4.5 சதவீதமும், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் 10 சதவீதம்- 2.5 சதவீதம் என்ற அளவில் மதிப்பெண் எடுக்க வேண்டும்.

இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் 2014-2015ஆம் கல்வி ஆண்டுக்கான பி.டெக். மாணவர் சேர்க்கை தொடர்பான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பி.டெக். படிப்பில் வரும் கல்வி ஆண்டில் சேர விரும்பும் மாணவர்கள் தற்போது பிளஸ்-2 படித்துக்கொண்டிருப்பதுடன், 2014 ஐ.ஐ.டி. ஜெ.இ.இ. மெயின் தேர்வை எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெறுவதுடன் அட்வான்ஸ்டு தேர்விலும் பங்குகொண்டு குறைந்தபட்ச மதிப்பெண் பெற வேண்டியது அவசியம்.

நுழைவுத்தேர்வு மார்க் வந்தவுடன் இந்திய விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் சேருவதற்குத் தனியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான அறிவிப்பு ஏப்ரல் 30ஆம் தேதி வெளியிடப்படும். மே மாதவாக்கில் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். பி.டெக். சேர விரும்பும் மாணவர்கள் அட்மிஷன் தொடர்பான அனைத்து விவரங்களையும் www.iist.ac.in/admission/under-graduate என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். விண்வெளி துறையில் சாதிக்க விரும்பும் மாணவ-மாணவிகளுக்கு இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஓர் அருமையான நுழைவு வாயில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x