Last Updated : 01 May, 2017 10:20 AM

 

Published : 01 May 2017 10:20 AM
Last Updated : 01 May 2017 10:20 AM

வாகனம் தீப்பிடிக்காமல் இருக்க...

கோடையின் உச்சம் அக்கினி நட்சத்திர காலம்தான் என்றிருந்த காலம் மலையேறி விட்டது. இப்போது மார்ச் மாதத்திலிருந்தே வெயிலின் கடுமை தகிக்கிறது. வெளியில் தலை காட்டமுடியவில்லை என்றாலும், அலுவல் வேலை காரணமாக அன்றாடம் பயணித்துதான் ஆக வேண்டும்.

பொதுவாகவே வாகனங்கள் குறிப்பிட்ட காலங்களில் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு ஆளாகக் கூடியவை. குளிர்காலத்தில் வாகனம் ஸ்டார்ட் ஆவதில் பிரச்சினை இருக்கும். மழைக் காலத்தில் சாலைகளில் வழுக்கிச் செல்லும். பிரேக் பிரச்சினை செய்யும். அதேபோல கோடைக் காலத்தில் கடும் வெப்பம் காரணமாக தீப்பிடிக்கும் அபாயம் அதிகம்.

இப்போது கோடை வெயிலில் வாகன பராமரிப்புக்கு சில ஆலோசனைகளைப் பார்க்கலாம்.

பொதுவாகவே எந்த ஒரு வாகனமும் போதுமான இடைவெளியில் சர்வீஸ் செய்யப்படவில்லையென்றால் அது அதீத வெப்பத்தில் பிரச்சினை ஏற்படுத்தும். இதனால் வாகனங்களை குறிப்பிட்ட இடைவெளியில் சர்வீஸ் (Periodic service) செய்வது அவசியமாகும்.

பேட்டரி மிகவும் உறுதியாக பொறுத்தப்பட்டிருக்க வேண்டும். அதில் இடைவெளி இருந்தால் மேடு, பள்ளங்களில் ஏறி இறங்கும்போது தீப்பொறி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பேட்டரி டெர்மினல்களை அவ்வப்போது கவனிக்க வேண்டும்.

இன்ஜின் கம்பார்ட்மென்டில் உள்ள வயரிங் முறையாக இணைக்கப்பட்டுள்ளதா என்று அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். வயரிங் கப்ளரில் (Couplers) தளர்வு இருந்தாலும் தீப்பொறி ஏற்படும்.

இன்ஜின் கம்பார்ட்மென்டில் உள்ள வயரிங்கில் ஏதேனும் பழுது இருந்தால் அதை உடனே சரி செய்ய வேண்டும். அதேபோல வயரிங், இரும்பு பாகத்தின் மீது அதிகம் உராயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரும்பு பாகங்களில் வயர்கள் உரசினால் தீப்பொறி ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்ஜின் ஆயில், டிரான்ஸ்மிஷன் ஆயில், பவர் ஸ்டீரிங் ஆயில், பிரேக் ஆயில் போன்றவற்றில் கசிவு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்றில் கசிவு இருந்தால் உராய்வு ஏற்படும்போது தீப்பொறி பட்டு வாகனம் தீப்பிடிக்க வாய்ப்பு உள்ளது.

இன்ஜினுக்கு பெட்ரோல் அல்லது டீசல் உள்ளிட்டவற்றை எடுத்து வரும் குழாயில் வெடிப்பு இருந்தால் அதை உடனே சரி செய்ய வேண்டும். இல்லாவிடில் இதில் எரிபொருள் கசிந்து தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.

இன்ஜின் பகுதியில் கூலன்ட்-டில் கசிவு மற்றும் கூலன்ட் குழாயில் கசிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ரேடியேட்டருக்கான கூலன்ட் மட்டுமே ஊற்ற வேண்டும். அதிக வெப்பத்தினால் வாகனம் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.

கோடைக் காலத்தில் கார்களில் கட்டாயம் ஏசி உபயோகம் தவிர்க்க முடியாதது. இதனால் ஏசி குழாய்களில் உராய்வு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல கசிவு இல்லாமலும் இருக்க வேண்டும். ஏசி வாயு கசிந்து வெளியேறினால் அது அதிக வெப்பத்தில் தீப்பிடிக்கும் அபாயமும் உண்டு.

ஆல்டர்நேட்டர், ஸ்டார்ட்டர் மோட்டார் வயர், கப்ளர் உள்ளிட்டவை சரியான வகையில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். இவற்றில் உராய்வு ஏற்பட்டாலும் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.

ஏசி-யில் குளிர்ச்சியான காற்றை அளிக்கும் கூலிங் ஃபேன் மற்றும் அதன் மோட்டாரில் மின் கசிவு இருக்கக் கூடாது. வாகனத்தில் கூடுதலாக உதிரி இணைப்புகள் சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றில் வயரிங் பார்த்து அதில் கசிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

டயர்கள் அதிகம் தேய்ந்திருந்தால் அது கோடைக்காலத்தில் வெப்பம் காரணமாக வெடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கார் ஓடும்போது வெடித்தால் காரின் சக்கரம் தரையில் உரசி தீப்பொறி ஏற்பட்டு விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே டயரிலும் கவனம் தேவை.

சவுகரியமான போக்குவரத்துக்காக காரை வாங்குகிறோம். அதேபோல பொருள்களை ஏற்றிச் செல்ல டிரக்கை பயன்படுத்துகிறோம். இவை எல்லாமே உரிய வகையில் பராமரிக்க வேண்டும். அப்போதுதான் அவை நீண்ட காலம் உழைக்கும்.

கடுமையான வெயிலில் நீண்ட தூர பயணம் செல்வதாயிருந்தால் சிறிது இடைவெளி விட்டு பயணத்தைத் தொடரலாம். சாலைகளில் கானல் நீர் போன்ற கோடுகள் தோன்றும். இதைத் தவிர்க்க விசேஷமான குளிர் கண்ணாடிகள் உள்ளன. இவை சற்று விலை அதிகம். பாதுகாப்பு கருதி இவற்றை உபயோகிக்கலாம். பயணம் சிறக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியமே.

(கட்டுரையாளர் டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் துணைத் தலைவராக உள்ளார்.)
- k.srinivasan@tvs.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x