Last Updated : 11 Jun, 2017 01:51 PM

 

Published : 11 Jun 2017 01:51 PM
Last Updated : 11 Jun 2017 01:51 PM

பக்கத்து வீடு: போராடும் அழகு ராணி!

“நான் ஷரிஃபா நலுகோ, எச்ஐவி பாசிடிவ் பெண்” என்று தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார் உகாண்டாவைச் சேர்ந்த 22 வயது இளம் பெண். தன்னைப் போன்று எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டி, இயல்பாக வாழ்வதற்கு வழிகாட்டிவருகிறார்.

அம்மாவுக்கு எச்ஐவி பாதிப்பு இருந்ததால் ஹெச்ஐவி பாசிடிவ்வோடுதான் இந்த உலகத்துக்குள் நுழைந்தார் ஷரிஃபா. ஒன்பது வயதில் மகளிடம் உண்மையைப் புரியவைத்த அம்மா, இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

ஒருநாள் இந்த விஷயம் தாத்தாவுக்குத் தெரிந்தபோது, அம்மாவையும் குழந்தையையும் வீட்டை விட்டு துரத்திவிட்டார். நோய் பாதிப்போடு, உதவி செய்ய யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்தினாலும் தாயும் மகளும் தொடர்ச்சியாக மருந்துகளை எடுத்துக் கொண்டார்கள். தாத்தாவிடமிருந்து கிடைத்த மோசமான அனுபவத்தால் தங்களுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதை இருவரும் வெளியில் சொல்லாமல் வாழ்ந்துவந்தனர். ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.

“வகுப்பு அமைதியாக இருந்தது. நான் மாத்திரை போடுவதற்காக வராண்டாவுக்குச் சென்றேன். மாத்திரையின் மேல் சுற்றப்பட்டிருக்கும் தாள் சலசலவென்று சத்தம் எழுப்பியது. அதைக் கேட்டு என் தோழிகள் வெளியே ஓடி வந்தனர். நான் என்ன சாப்பிடுகிறேன் என்று கேட்டார்கள். ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாமா என்று யோசித்தேன். பொய் சொல்லிச் சொல்லி எனக்கு அலுத்துப் போயிருந்தது. எதற்காகப் பொய் சொல்ல வேண்டும், அதுவும் என் தோழிகளிடம் என்று தோன்றியது. காரணத்தைச் சொன்னேன். எல்லோரும் சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். பிறகு நான் விளையாட்டுக்குச் சொல்வதாக நினைத்தனர். அதுதான் உண்மை என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன். உடனே, உனக்குக் காதலர் இருக்கிறாரா, அவர் மூலம் இந்த நோய் வந்ததா என்று கேட்டார்கள். என் அப்பாவிடமிருந்து என் அம்மாவுக்கும் அம்மாவிடமிருந்து எனக்கும் வந்தது என்றேன். இந்த நோய் குறித்து நான் அறிந்துவைத்திருந்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டேன். பள்ளியில் மற்றவர்கள் என்னை ஒதுக்கி வைத்தாலும் என் தோழிகள் புரிந்துகொண்டார்கள். அதே அன்புடன் பழகினார்கள். அது போதும் எனக்கு” என்கிறார் ஷரிஃபா.

உகாண்டா பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு முடித்த பிறகு, இனி தன்னைப்போல எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்தார் ஷரிஃபா. தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து வேலை செய்தார். இங்கிலாந்து சென்றார். பல்வேறு அமைப்பினருடன் பேசினார். எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகளும் நிதியுதவியும் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். நாடு திரும்பியவர் பாடல்கள், நாடகம் மூலம் எச்ஐவி விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

“எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் தங்கள் நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் அப்படித்தான் ஏற்றுக்கொண்டேன். அதற்குப் பிறகுதான் உண்மையை வெளியில் சொல்லக்கூடிய தைரியம் வந்தது. வாழ்க்கையை எந்தத் தயக்கமும் இல்லாமல் எதிர்கொள்ள முடிந்தது. எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களிடம், ‘நீங்கள் அழகானவர்கள், உங்களிடம் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்தால், பேரழகிகளாக மாறிவிடுவீர்கள்’ என்று சொல்வேன். அதற்கு நானே உதாரணம் என்பேன். தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டதால் தற்போது உயிரிழ்க்கும் ஆபத்திலிருந்து நான் தப்பிவிட்டேன் என்பதையும் சொல்லும்போது பெண்கள் நம்பிக்கைகொள்கிறார்கள்” என்கிறார் ஷரிஃபா.

உகாண்டா கிராமங்களில் வசிக்கும் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்களைக் கண்டறிவது மிகவும் கடினம். சிலருக்குப் பாதிப்பே தெரியாது. தெரிந்தவர்கள் வெளியில் சொன்னால் அவமானம் என்று மறைத்துவிடுவார்கள். அதனால் ஏராளமான பெண்கள் இளம் வயதிலேயே மரணமடைந்துவிடுகிறார்கள். சிலர் மருந்துகளை எடுத்துக்கொள்ள நினைத்தாலும் தொலைதூர கிராமங்களுக்கு மருந்துகள் சென்று சேர்வதில்லை. இவர்களுக்காகவே ஓர் அமைப்பை ஆரம்பித்து, மருந்துகளைக் கொண்டுவந்து சேர்க்கிறார் ஷரிஃபா. இவரது சேவையை அங்கீகரிக்கும் விதத்தில் ‘எச்ஐவி இளைஞர்களுக்கான உகாண்டா நெட்வொர்க்’ 2014-ம் ஆண்டு, அழகு ராணியாக ஷரிஃபாவைத் தேர்ந்தெடுத்தது.

“தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால், எங்களிடம் போதுமான வசதிகள் இல்லை. எங்களால் முடிந்தவர்களுக்கு மருந்துகளைக் கொடுத்து உதவுகிறோம். மற்றவர்களுக்கு உணர்வுபூர்வமான ஆறுதல் அளிக்கிறோம். 2030-ம் ஆண்டுக்குள் எச்ஐவி இல்லாத உகாண்டாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் என் இலக்கு” என்கிறார் ஷரிஃபா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x