Published : 27 Mar 2017 10:17 AM
Last Updated : 27 Mar 2017 10:17 AM

உன்னால் முடியும்: செலவுக்கான மகிழ்ச்சி இரட்டிப்பாகும்

தனிநபர்கள் தங்களது கலைத் திறமையை தொழிலாக மாற்றுவதற்கு ஒரு காலகட்டம் வேண்டும். அதன் தொடக்கத்தில் இருக்கிறார் ராம்குமார். சிற்பம் மற்றும் உருவங்கள் அச்சு தொழி லில் பலரும், பல வகையில் ஈடுபட்டாலும் அதை வித்தியாசமான நினைவுப் பொரு ளாக மாற்றும் முயற்சிகளில் இவர் ஈடு பட்டுள்ளார். இவரது அனுபவம் இந்த வாரம் ‘`வணிகவீதி’’-யில் இடம்பெறுகிறது.

"நான் செய்துவரும் அச்சுவார்ப்பு கலை நமக்கு புதியது அல்ல, ஆனால் அதைக் கொண்டு என்ன செய்கிறோம், எதற்கு பயன்படுத்துகிறோம் என்பதிலிருந்துதான் நான் வித்தியாசப்படுகிறேன்.

தங்களுக்கு பிடித்தமான உருவத்தை அச்சு எடுத்து பிரேம் செய்து வைப்பது இங்கு புழக்கத்துக்கு வரவில்லை. இதை இங்கு யாரும் செய்து தரவில்லை. நான்தான் முதன்முதலில் குழந்தைகளின் கைகள், கால் பாதங்கள், திருமண தம்பதிகளின் கைகள் இணைந்திருப்பது போன்றவற்றை உள்ளது உள்ளபடியே அச்சு எடுத்து அதை காலாகாலத்துக்கும் ஞாபகம் வைத்துக் கொள்வதுபோல் உருவங்களாக அளிக்கிறேன்,’’ என்று குறிப்பிடுகிறார்.

"சென்னைதான் சொந்த ஊர். பிஎஸ்சி விஸ்காம் படித்தேன். ஆனால் சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவது, மெழுகு சிற்பங்கள் செய்வதில் ஆர்வம் அதிகம். இந்த நிலையில் படித்து முடித்ததும் ஒரு அனிமேஷன் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பிறகு துபாயில் ஒரு நிறுவனத்தில் அனிமேஷன் வேலை கிடைக்க அங்கு சென்றேன். 2014ல் அந்த வேலை ஒப்பந்தம் முடிந்து சென்னை வந்து வேறு வேலை தேடத் தொடங்கினேன்."

``இப்போது நான் செய்து கொண்டிருக்கும் இந்த அச்சு வார்ப்பு நினைவு உருவங்களை துபாயில் சில இடங்களில் பார்த்திருக்கிறேன். அங்கு குழந்தைகள், பெரியவர்களின் கைகளை நினைவுகளாக வைத்திருந்தார்கள். இதே போல எனது குழந்தைக்கும் செய்து வைத்துக் கொள்ள ஆசை. சென்னையில் இதை செய்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என தேடினால் இதை செய்து தருபவர்கள் எவரும் இல்லை.’’

"அச்சு வார்ப்பை பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மாவில் உருவம் செய்து தருவதற்கு இருக்கிறார்கள். ஆனால் இதை செய்யக் கூடிய மாவு தனியானது. கிட்டத்தட்ட கற்களுக்கு சமானது. எளிதில் உடையாது. நீண்ட காலம் இருக்கும். மேலும் குழந்தைகளின் தோல்களுக்கு தீங்கும் விளைவிக்காது. ஆனால் வேலையோ மிக நுணுக்கமாக இருக்க வேண்டும். இரண்டு மாத குழந்தையின் கைகளை அச்சு எடுக்கிறோம் என்றால், அதன் கை ரேகைகள் வரை மிக துல்லியமாக இருந் தால்தான் உயிரோட்டமாக இருக்கும்"

"என் குழந்தைக்கு துபாயில் அச்சு எடுத்து செய்ததுடன், இதை எப்படி செய்கிறார்கள் என்பதையும் அங்கு தெரிந்து கொண்டேன். சென்னை வந்ததும் இதற்கான மூலப்பொருளை வாங்கி நானே வீட்டில் செய்து பார்க்கத் தொடங்கினேன். அச்சு எடுத்து உருவம் செய்து கொண்டாலும், அதன் மேல் பெயிண்ட் அடிக்கும்போது ரேகைகள் அழிந்துவிடும். இதனால் பல கட்ட சோதனைகளுக்கு பிறகுதான் நேர்த்தியான வடிவம் கிடைத்தது. அவ்வப்போது வரும் சந்தேகங்களை விஸ்காம் படித்தபோது கிடைத்த கல்லூரி பேராசிரியர், ஓவிய நண்பர்கள் பலரிடமும் கேட்டு தெரிந்து கொண்டேன்."

"போட்டோ மூலம் ஞாபகங்களைச் சேமிப்பதன் அடுத்த கட்ட வளர்ச்சிதான் உருவங்களில் ஞாபகங்களைச் சேமிப் பது. இங்கு இது குறித்த அறிமுகம் பரவலாக இல்லை என்பதால் பழைய வாடிக்கையாளர்களைப் பார்த்து புதிய வர்களும் வருகிறார்கள். இப்போது சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன. வெளிநாடுகளில் தங்கள் உறவினர் இல்லங் களில் இவற்றை பார்த்திருப்பவர்கள்தான் இப்போது என் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்."

"ஒரு வாடிக்கையாளர் தன் குடும்பத்தினரின் கைகளுடன் சேர்த்து தங்கள் வளர்ப்பு பிராணியான நாயின் கால்களையும் உருவம் செய்து வாங்கினார். இதுபோன்ற அச்சுகளை செய்வது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. சென்னை தவிர பெங்களூருவிலிருந்தும் அழைக்கிறார்கள். விரைவில் இதற்காக தனியாக ஸ்டூடியோ தொடங்கும் முயற்சி யில் உள்ளேன்,’’ என்றார்.

நினைவுகளைச் சேமிப்பதற்கு நாம் நிறைய செலவு செய்கிறோம். இதுபோன்று புதுமையான வழியாக இருந்தால் செலவுக் கான மகிழ்ச்சி இரட்டிப்பாகலாம்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x