Last Updated : 24 Sep, 2013 04:02 PM

 

Published : 24 Sep 2013 04:02 PM
Last Updated : 24 Sep 2013 04:02 PM

நான் இசை இயக்குநர் ஆகணும்

வினித். 14 வயது. கையில் தகர டப்பா கிடைத்தால் தட்டிப் பார்ப்பான். தாளங்கள் தானே வரும். அவனது விரல்கள் தட்டி தட்டி எழுப்பும் இசையின் ஓசை அக்கம்பக்கத்தினரை அசர வைக்கும். பார்த்தால், அவன் மன வளர்ச்சி குன்றிய குழந்தையாக இருந்து மீண்டு வருபவன் என்பது யாருக்கும் தெரியாது.

பிளாஸ்டிக் கேனில் தொடங்கி மேஜை, கதவு, பீரோ போன்ற எல்லாமே அவனுக்கு இசைக்கருவி தான். மேஜையில் இரண்டு விரல்களை அழுத்தித் தேய்த்து 'உருமி'ச் சத்தத்தைக்கூட தத்ரூபமாக எழுப்புகிறான். ரசித்துக் கொண்டே இருக்கலாம் அவனது விரல்கள் மீட்டும் ஜாலத்தை!

வினித்தைத் தேடி மதுரை திருமங்கலம் தாலுகா அச்சம்பட்டிக்குச் சென்றோம்.

'என் ஃபிரெண்டைப் போல யாரு மச்சான்' பாடலுக்கு டப்பாவாலேயே மியூசிக் போட்டுக் கொண்டிருந்தான். அதை அவனது அம்மா பாக்கியலட்சுமியும் அப்பா பால்பாண்டியும் மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். தங்கைகள் சுவைதாவும், ஹரிணியும் அண்ணன் அடிக்கிற அடியில், டப்பா நகர்ந்துவிடாதபடி பிடித்துக் கொண்டிருந்தார்கள். மகனின் இசை ஜாலத்தை ரம்மியமாய் ரசித்துக் கொண்டே பாக்கியலட்சுமி பேசத் தொடங்கினார்.

"பிறந்தப்ப புள்ள அழவேயில்ல. பிள்ளைக்கு மன வளர்ச்சி கம்மியா இருக்குன்னு அப்ப எனக்கு தெரியாது. 6 மாசத்துக்கு அப்புறம்,'என்ன உன் பிள்ளை இன்னும் தலை சுமக்கலை... குப்புற விழலை... தவழலை...?' னு எல்லாரும் கேட்க ஆரம்பிச் சிட்டாங்க. கால் ரெண்டும் சூம்பிப் போச்சு. எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருப்பான். திட்டினாக்கூட அழத் தெரியாது. அள்ளிச் சாப்பிடத் தெரியாது. வாயில் காரமா எதையாவது வச்சிட்டா துப்பக் கூடத் தெரியாது. கண்ணீர் கொட்டும். ஆனா, வாய் சிரிச்சுக்கிட்டே இருக்கும்.

நடக்க ஆரம்பிச்சதும், ஆர்வமா விளையாடப் போனப்ப மத்த பசங்க இவன ஒதுக்க ஆரம்பிச்சாங்க. . சிலர் கிண்டல் பண்ணுனாங்க. அவங்க மேல கல்லெடுத்து எறிஞ்சிடுவான். 'இந்தப் பிள்ளையைப் பெத்துப் போட்டுட்டு நீ எல்லாம் இன்னும் உசிரோட இருக்க?' னு அக்கம் பக்கத்துல மானக்கேடாத் திட்டுவாங்க. ஒரு நாள் மனசொடிஞ்சு பூச்சி மருந்தக் குடிச்சிட்டேன்’’ -சொல்லும் போதே அவர் குரல் நடுங்குகிறது. கண்ணீர் கசிகிறது.

நிதானித்துத் தொடர்ந்தார். "நான் மருந்தக் குடிச்சிட்டேன்னதும் இவனோட டீச்சருங்க லதாவும், சரஸ்வதியும் வந்தாங்க. 'ஏம்மா இப்படிப் பண்ணுன? நீ இல்லைன்னா அவன் நிலைமை என்ன ஆகும்னு கொஞ்சம் நினைச்சுப் பாரு. எந்தச் சூழ்நிலையிலும் தப்பான முடிவுக்குப் போகாத. வினித்தை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பு.. நாங்க பார்த்துக்கறோம்'னு சொன்னாங்க. 'இல்லை டீச்சர். அவனுக்கு இன்னமும் அள்ளிச் சாப்பிடத் தெரியாது. கால் கழுவத் தெரியாது'ன்னு சொன்னேன். 'நீங்களே இப்படிச் சொன்னா எப்படி? மதியம் வந்து சாப்பாடு ஊட்டுங்க. வர முடியாத நாட்கள்ல நாங்க ஊட்டி விடுறோம்' னு சொல்லி, அவனைப் பிள்ளையைப் போல பாத்துக்கிட்டாங்க. பேச கத்துக் கொடுத்தாங்க. சிறப்பு பயிற்றுனர்களையும், பிஸியோதெரபிஸ்ட்டையும் வர வெச்சி, பயிற்சி கொடுத்தாங்க். கொஞ்சம் கொஞ்சமா தேறிட்டு வரான்.

மூணாப்பு படிக்கிறப்ப செயல்வழிக்கற்றல் முறை வந்துச்சி. அதுக்காக போட்டிருந்த டேபிளில் காலி வாட்டர் கேனை டப்பு டொப்புன்னு தட்டிக்கிட்டே இருந்திருக்கான். ’செய்யாதடா’ன்னு டீச்சர் கண்டிச்சிருக்காங்க. கேக்காம மறுபடி மறுபடி தட்டிருக்கான். அப்ப பிரபலமா இருந்த திருப்பதி ஏழுமலை வெங்கடேசாங்கிற பாட்டுக்கு அழகா தாளம் போட்டிருக்கான். அப்ப தான் இத்தனை நாளா வினித் சும்மா தட்டலை... மியூசிக் தான் போட்டிருக்காங்கற விஷயம் டீச்சர்களுக்குத் தெரிஞ் சிருக்கு. அவங்க இதை என்கிட்டச் சொன்னப்ப, 'ஆமாம் டீச்சர்.. வீட்லயும் அப்படித்தான். எப்பவும் எதையாச்சும் தட்டிக்கிட்டுத் தான் இருப்பான். சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது டி.வி.யில நல்ல பாட்டு போட்டா, பாதியிலேயே எந்திருச்சி, எச்சிக்கையோட மியூசிக் போட ஆரம்பிச்சிடுவான். அவனை எப்படியாச்சும் திருத்துங்க டீச்சர்'ன்னு சொன்னேன். 'திருத்தவெல்லாம் வேணாம், அவனை என்கரேஜ் பண்ணுங்க.. அது போதும்' னு சொன்னாங்க.

ஆனாலும், தரையிலயும், கதவுலயும் அவன் கையால தட்டும் போது கவலையா இருக்கும். ஏற் கெனவே அவனுக்கு கையில பலம் கிடையாது. 'கை வலிக்கும்டா தம்பி'ன்னு சொன்னா அவனுக்குப் புரியாது. நம்ம எதாச்சும் பாட்டு பாடுனா, அத உள்வாங்கி மியூசிக் போடுவான். அப்பத் தான் என் பிள்ளையோட திறமை எனக்கே புரிஞ்சுது" - மெய்சிலிர்க்கிறார் பாக்கியலட்சுமி.

“தம்பி, உங்களோட ஆசை எல்லாம் சொல்லுங்க?” என்று வினித்திடம் கேட்டேன். "டிரம்ஸ் கத்துக் கணும். அப்புறம் புல்லாங்குழல் ஊதணும். அப்புறம் இந்தா... இப்படி இப்டிச் செய்வோமே... (வய லின் வாசிப்பது போல் செய்து காட்டுகிறான்) அதைக் கத்துக்கிடணும். இதை எல்லாம் கத்துக்குடுக் கிறதுக்கு ஒரு நல்ல வாத்தியார் வேணும். ஆமா, அடிக்காத வாத்தியார் வேணும். அப்புறம், இளை யராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி பெரிய மியூசிக் டைரக்டர் ஆகணும். நான் கத்துக்கிட்டத நிறைய பேருக்குச் சொல்லிக் கொடுக்கணும்" என்றான் சிரித்துக் கொண்டே.

அங்கிருந்து கிளம்பும்போது, கோவில்பட்டி மாரிச்செல்வியின் நினைவு வந்தது. மனவளர்ச்சி குன்றிய மாரிச்செல்வியால் தனக்கு அவமானமாக இருப்பதாகச் சொல்லி பெற்ற தாயே அவளை தீவைத்துக் கொன்ற கொடூரம் கடந்த ஆண்டு நடந்தது. நல்ல தாயும் ஆசிரியர்களும் கிடைத்திருந்தால் வினித்தைப் போல மாரிச்செல்வியும் சாதித்திருப்பாள் தானே?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x