Published : 23 Feb 2014 12:00 AM
Last Updated : 23 Feb 2014 12:00 AM

என்ன செய்யக் காத்திருக்கிறோம்?

காபி குடிப்பதில் தொடங்கி, கொட்டாவி விடுவதுவரை புகைப்படம் எடுத்து நாம் ஃபேஸ் புக்கில் பதிவிடுகிறோம். ஜாஸம் என்கிற பெண்ணும் ஃபேஸ் புக் கணக்கைத் துவங்கினாள். அதற்கு அவளுக்குக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா? கொடூரமான மரணம். சிரியாவின் ராக்கா நகரில்தான் இந்தக் கொடுமை நடந்திருக்கிறது. அந்தப் பெண்ணின் பெயர் ஃபேட்டம் அல் ஜாஸம். இஸ்லாம் போராட்டக் குழுவினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் அடக்குமுறைகள் மிகக் கடுமையானவை. அங்கே ஃபேஸ் புக் கணக்கு துவங்குவது என்பது நடத்தைக் குற்றமாகப் பார்க்கப்படுகிறது.

ஈராக்கைத் தலையகமாகக் கொண்டு இயங்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த போராட்டக் குழுவினரால் வலுக்கட்டாய மாக நீதி மன்றத்தின் முன் நிறுத்தப் பட்டாள் ஜாஸம். நீதிபதியும் அவள் ஃபேஸ் புக் கணக்குத் துவங்கியது குற்றம்தான் என்றார். அதற்குத் தண்டனையாக அவளைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று தீர்ப்பும் அளித்தார். ஒரு மனித உயிரின் மீது பிரயோகிக்க இதற்கு மேலும் வன்முறை இருக்கிறதா?

தொடரும் வன்முறை

இன்று பெண்ணுரிமை குறித்துப் பேசவும் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் எத்தனையோ பெண்ணிய இயக்கங்களும் தன்னார்வலர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் பெண்கள் மீதான வன்முறை யின் வீச்சு குறைவதாகத் தெரியவில்லை. பதிவு செய்யப்படுகின்ற வன்முறைகளின் எண்ணிக்கையே மலைப்பூட்டுவதாக இருக்கும்போது, பதிவுசெய்யப்படாத வன்கொடுமைகளை நினைத்துப் பார்க்கவும் முடிவதில்லை.

உலகம் முழுவதுமே பெண்கள், இன்னொரு பாலினமாக நடத்தப்படாமல் இரண்டாம் பாலினமாகவே ஒடுக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது கட்டற்ற வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள். ஆண்களுக்குச் சரியென்று அனுமதிக்கப்படும் பல விஷயங்கள் பெண்களுக்குத் தவறென்று மறுக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் ஆண்கள் துணையுடன்தான் பெண்கள் வெளியே வர வேண்டும் என்றும் அழகு சாதனப் பொருட்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் சில கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட இருந்தன. ஆனால் மக்களின் எதிர்ப்பால் அவை ஈடேறவில்லை. தற்போது பெண்களை அடிக்க அனுமதிக்கும் சட்டம் ஒன்றை அமல்படுத்துவது குறித்து ஆப்கானில் விவாதித்து வருகிறார்களாம்.

என்ன நடக்கிறது இந்த உலகில் என்றே புரியவில்லை.

காரணம் என்ன?

பெண்கள் மீதான கொடுமைகள் நடக்கும் போதெல்லாம் குரல் கொடுத்துக் கொதித்து எழுவதும், அதற்குப் பிறகு அவரவர் வேலைகளில் மூழ்கிப் போவதுமாக இருக்கிறோம். குற்றம் இழைத்தவர்களுக்குத் தண்டனை தர வேண்டும் என்று கொதிக்கிறோம். ஆனால் அந்தக் குற்றத்துக்கான தோற்றுவாய் எது என்று தெரிந்துகொள்ளும் முனைப்போ, அதைத் தடுப்பதற்கான முயற்சியோ நம்மிடம் போதிய அளவு இருக்கிறதா?

ஆப்கானிலோ சிரியாவிலோ இருக்கும் சட்டங்களோ அவற்றை நடை முறைப்படுத்தும் குரூரங்களோ இங்கு இல்லை என்றாலும் பெண் குறித்த பொதுச் சமூகத்தின் அடக்குமுறையின் அடிப்படை அம்சங்களில் உலகம் முழுவதிலும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. பெண்கள் மீதான அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் ஆயிரம் காரணங்கள் அடுக்கப்பட்டாலும் ஆதிக் காரணம் பாலினப் பாரபட்சம்தான். பெண்ணை ஆணைவிடவும் தாழ்ந்தவளாகக் கருதும் போக்குதான்.

குடும்பத்தின் பங்கு

ஆண் என்றால் வரவு, பெண் என்றால் செலவு என்பது பிறப்பில் இருந்தே போதிக்கப்படுகிறது. ஆணை அரசாளவும் பெண்ணை அடங்கி நடக்கவும் பழக்கப்படுத்துகிறோம். மகளுக்குக் கார் பொம்மையும் மகனுக்குக் கரடி பொம்மையும் வாங்கித் தருகிற அப்பாக்கள் எத்தனை பேர்? மகளுக்கு வண்டி ஓட்டவும் மகனுக்கு தோசை சுடவும் கற்றுத் தருகிற அம்மாக்கள் இருக்கிறார்களா?

எங்கே தொடங்குகிறது இந்த இழிநிலை? கள்ளிப்பாலுக்கும் நெல் மணிக்கும் தப்பிப் பிழைக்கிற பெண்களின் பிறப்பிலேயே அதுவும் பிறந்துவிடுகிறதா? இல்லை வளரும்போது, ‘ஆம்பிளை மாதிரி எதுக்குக் குதிச்சு விளையாடிக்கிட்டு இருக்கே. அடக்க ஒடுக்கமா உட்கார்ந்து விளையாடு’என்று கண்டிக்கப்படும் மழலைப் பருவத்தோடு சேர்ந்து வளர்கிறதா? அதிகமாகப் படித்தால் வரன் கிடைக்காது என்று பாதியிலேயே படிப்பு நிறுத்தப்படும்போது செழித்தோங்கிக் கிளைகள் பரப்புகிறதா? அப்படியே படித்து வேலைக்குச் சென்று குடும்ப பாரத்தைப் பகிர்ந்துகொண்டாலும், ‘சம்பாதிக்கிற திமிரு’ என்று குட்டு வாங்குகையில் வேரூன்றி விழுதிறக்குகிறதா? எப்படி வந்து தொலைக்கிறது இந்த ஆண்-பெண் சமநிலையின்மை?

இப்படி ஒரு பிம்பத்தைக் கட்டமைப்பதில் பெண்களின் பங்கும் இருக்கத்தான் செய்கிறது. தன் மகனின் மனதில் நீ உயர்ந்தவன் என்கிற நினைப்பை விதைக்கிற அம்மாக்கள், மகளிடம் நீ யாருக்கும் அடிமையில்லை என்று சொல்லத் தவறிவிடுகிறார்கள். படிப்பு, விளையாட்டு என அனைத்திலும் மகனுக்குச் சலுகை தருகிற இடங்களில் எல்லாம் மகளுக்குத் தண்டனையையே தருகிறார்கள். வீட்டுக்குள் தன் சகோதரிகளைவிட உயர்வாக நடத்தப்படுகிறவன், சமூகத்தில் தன்னைச் சுற்றியுள்ள பெண்களை எப்படித் தனக்குச் சமமாக நடத்துவான்? ஆண், பெண் இருவரும் சமம் என்பதைக் குழந்தைப் பருவத்தில் இருந்தே சொல்லித் தருவதுதான் சிக்கலின் முடிச்சு அவிழ்வதற்கான ஆரம்பப் புள்ளி.

குடும்பத்தில் நிகழ்கிற மாற்றம்தான் ஒட்டுமொத்த சமூக மாற்றத்திற்கான அடிப்படை. குழந்தைகளை ஆண், பெண் பேதமின்றி வளர்ப்போம். அப்போதுதான் வரும் தலைமுறையிலாவது பெண்களை, ஒரு படி கீழே வைத்துப் பார்க்கும் அவல நிலையை மாற்ற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x