Last Updated : 07 Aug, 2016 11:17 AM

 

Published : 07 Aug 2016 11:17 AM
Last Updated : 07 Aug 2016 11:17 AM

எங்க ஊரு வாசம்: மலைக்கவைக்கும் மறு வீட்டுச் சீர்!

கல்யாணம் பேசி முடித்த கையோடு தாலி செய்யும் வேலையும் தொடங்கிவிடும். அந்தக் காலத்தில் ஒரு பவுன் பன்னிரெண்டு ரூபாய். தாலி என்பது அரக்கு வைத்துச் செய்யும் சிறிய பிள்ளையார் தாலிதான். அதை ஐந்து ரூபாய்க்குள் செய்து முடித்துவிடலாம். ஆனால் ஐந்து ரூபாய்க்குக்கூட வழியில்லாமல் மக்கள் தவித்திருக்கிறார்கள். ரூபாய் நோட்டுகளும், சில்லறைகளும் கண்ணால் பார்க்க முடியாத அரிய பொருட்களாக இருந்திருக்கின்றன.

காலை எட்டு மணிக்குப் போய் பொழுது லேசாக இருட்டும்வரை காடுகளில் வேலை பார்த்தால் பெண்களுக்குச் சம்பளமாக நலணாவும் ஆண்களுக்கு ஒரு ரூபாயும் கொடுத்திருக்கிறார்கள்.

அப்போது வருடத்துக்கு ஒரு பிள்ளையாகப் பெற்றதால் ஒவ்வொரு வீட்டிலும் அண்டியும் சவலைகளுமாக ஏழு, எட்டு பிள்ளைகள் இருப்பார்கள். மருத்துவ வசதி இல்லையென்பதால் கண் தெரியாத, கால் உடைந்த பெரியவர்கள் எந்த வேலையும் செய்ய முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பார்கள். இதனால் கல்யாணச் செலவு மக்களைத் திணறடித்தது.

தாலி செய்வதே பெரிய காரியமாக இருக்க, அர்ச்சனைப் பானை ஏழு, ஒன்பது என்று முளைக்கொட்டுகள் வேறு செய்ய வேண்டும். இந்த அர்ச்சனைப் பானை இரண்டு குடம் தண்ணீர் பிடிக்கிற அளவுக்குப் பெரியதாக இருக்கும். அந்தப் பானையைச் சுற்றி வெள்ளையடித்து கலர் கலராகக் கோலம் போடுவார்கள். பானைக்குள் சங்கு, கரண்டா என்று இரண்டு பொருட்களை போட்டுவைப்பார்கள். தாலி கட்டியதும் மணமக்கள் போட்டி போட்டாவது பானைக்குள் கைவிட்டு அந்தப் பொருட்களை எடுக்க வேண்டும். இந்த முளைக்கொட்டுகள் என்பது சிறிய பூந்தொட்டிகள் போல இருக்கும். அதற்கும் நிறம் உண்டு. அதில் வைக்கோல் வைத்து, பானையைச் சுற்றிவைத்து ஆசாரிகள் அழகுபடுத்துவார்கள். இதுபோன்ற கல்யாண வேலைகளில் ஆசாரிகளுக்கும் பங்கு உண்டு.

குலசாமி வழிபாடு

இனி கோயில்களுக்கெல்லாம் பொங்கல் வைக்க வேண்டும். முதலில் மேற்கு மலைத்தொடர்ச்சியின் வனங்களில் உள்ள அவரவர் குல தெய்வங்களுக்குத்தான் வைப்பார்கள். அதுவும் இந்தப் பொங்கலைக் கல்கூட்டிய அடுப்புகளில் வைக்கக் கூடாது. புது அடுப்பில்தான் வைக்க வேண்டும். அடுப்பு மட்டும் புதிதாக இருந்தால் போதாது. புதுப் பானை, புதுத் துடுப்பு, புது அகப்பை என்று எல்லாமே புதிதாக இருக்க வேண்டும். அதனால் செட்டியார்கள் புது அடுப்புகளையும், புதுப் பானைகளையும் பெரிய பெரிய கூடைகளில் வைத்து வாய்க்கால்களையும் வரப்புகளையும் தாண்டி மிகவும் கவனமாக நடந்துவருவார்கள். பானைகளை சுமந்து வரும்போது கல் தடுக்கியோ, கால் தடுக்கியோ இந்தக் கூடையோடு விழுந்துவிட்டால் அவ்வளவுதான். செட்டியாருக்கான நஷ்டம் ஒரு பக்கம் என்றால் கல்யாண வீட்டுக்காரர்கள் வையும் வசவைச் சொல்லி முடியாது. சிலர் இப்படிப் பானை உடைந்தது சமனத்தடை (சகுனத்தடை) என்று கல்யாணத்தையேகூட நிறுத்திவிடுவார்கள்.

இது இப்படியிருக்க, புது அடுப்பு, புதுப்பானை வாந்த உடனே இரண்டு ஆண்களின் துணையோடு இரண்டு, மூன்று பெண்கள் பொங்கலுக்குண்டான பொருட்களையெல்லாம் தலைச் சுமையாக சுமந்துகொண்டு காட்டுக்குள் இருக்கும் குல தெய்வத்துக்குப் பொங்கல் வைத்துவிட்டு வருவார்கள். பிறகு ஊரைச் சுற்றியிருக்கும் தெய்வங்களுக்கெலாம் பொங்கல் வைப்பதோடு ஊர் அம்மனுக்கும் பால் பொங்கல் வைக்க வேண்டும். எந்தக் குத்தம் வந்தாலும் சாமிக் குத்தம் வந்துவிடக் கூடாதல்லவா! அதனால்தான் இப்படி ஓடி, ஓடி எல்லா தெய்வங்களுக்கும் பொங்கல் வைக்க, ஊர்ப் பெண்களின் குலவைச் சத்தத்தில் ஊரே மூழ்கிக் கிடக்கும். புதுப் பானை, அடுப்பு கொண்டுவந்த செட்டியார் வேலை முடிந்ததும் ஆசாரிகள் வேலை தொடங்கிவிடும்.

ஆசாரிகள் வந்து ஊருக்குள் ஒரு குரல் கொடுத்துவிட்டு அங்கே இருக்கும் வேப்ப மரத்தடி, புளிய மரத்தடியில் உட்கார்வார்கள். அவர்கள் தச்ச ஆசாரி என்பதால் அவர்களுக்கு முன்னால் பெரிய, பெரிய சிரட்டைகளும் (கொட்டாங்கச்சி), பிஞ்சைகளில் வெட்டிப்போட்ட மரத்துண்டுகளும் குவியலாக வந்து குவியும்.

காரணம் புதுப் பெண்ணுக்குச் சீர் வரிசை கொடுத்துவிடுவதற்காக அஞ்சறைப் பெட்டி, உப்பு மறவை, மோர் கடையும் மத்து, உட்கார்வதற்கான சிறிய பலா, பயறு வகைகளின் நெற்றுகளைக் குத்துவதற்காக முத்துலக்கை, சிறிய குறுங்கட்டில் என்று இத்தனையும் செய்ய வேண்டுமே. சிலர் பெரிய கட்டிலும் செய்துகொடுப்பார்கள்.

களைகட்டும் கருப்பட்டி வியாபாரம்

தச்ச ஆசாரி பக்கத்திலேயே கொல்ல ஆசாரி உட்கார்ந்திருப்பார். அவருக்கான வேலை அரிவாள்மணை, மரம் வெட்டுவதற்கான வெட்டரிவாள், கதிர் அறுப்பதற்கு பண்ணரிவாள், களை சொறண்டி, களைக் குச்சி, வம்பட்டி, சிணுக்கொரி, பணியாரச் சட்டி, தோசைக் கல், தானியம் அளக்க மரக்கால், நாழி (படி), கொத்து நாழி, உழக்கு, ஆழாக்கு (கால் படி) செரப்பான் என்று சீதனப் பொருட்களைச் செய்துதருவார். புதுப் பெண்ணுக்கு இவற்றைச் சீதனமாகக் கொடுக்கவில்லை என்றால் பெரிய அவமானமாகிவிடும். இதனால் சில பெண்கள் புகுந்த வீட்டில் வாழாமல் வந்துவிடுவதும் உண்டு.

அடுத்து நாடார்கள் பெரிய பெரிய கடாப் பெட்டிகளில் கருப்பட்டியைச் சுமந்துகொண்டு வருவார்கள். கல்யாணத்தின்போது மட்டுமல்ல, அதையடுத்துவரும் விருந்தாளிகளுக்கு காபி போட, பானகம் கொடுக்க, மறு வீடு போகும் மகளுக்கு எள்ளுருண்டை, புட்டு மாவு என்று பலகாரம் செய்ய என்று அனைத்துக்கும் கருப்பட்டி வேண்டுமே. தவிர கல்யாணம் முடிந்த மறுநாள் மாப்பிள்ளையைச் சேர்ந்த தாயாதிகாரார்களுக்கு புது ஓலைப் பெட்டியில் முப்பது பணியாரம்வரை சுட்டுக்கொண்டுபோய் கொடுக்கவும் கருப்பட்டி தேவை. அதோடு கல்யாணத்துக்கு சோறு ஆக்கித் தட்டவும், காய்கறிகளை நறுக்கிப் போடவும் புது ஓலைப் பாய்கள் வேண்டும். அதையும் நாடார்தான் கொண்டுவருவார். இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக கல்யாணத்துக்கான போளைப் பெட்டி வேண்டும். இந்தப் போளைப் பெட்டியில்தான் கல்யாணச் சாமான்களான சேலை, சந்தனம், குங்குமம், தாலி எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு போக வேண்டும்.

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x