Last Updated : 10 Jun, 2016 12:46 PM

 

Published : 10 Jun 2016 12:46 PM
Last Updated : 10 Jun 2016 12:46 PM

நகரை மாற்றும் தானியங்கி கார்கள்

ஓட்டுநர் இல்லாமல், மென்பொருள் வழிகாட்டுதலில், சென்சார்கள் உதவியுடன் இயங்கும் தானியங்கி கார்களுக்கு நாம் தயாராக இருக்கிறோமா? கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தானியங்கி கார் தொடர்பான ஆய்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தானியங்கி கார் கருத்தாக்க நிலையிலிருந்து முன்னேறி, இப்போது ஆய்வுகளும், வெள்ளோட்டப் பரிசோதனைகளும் தீவிரமாகி இருக்கின்றன.

இந்த கார்கள் சாலையில் விபத்துகளைக் குறைக்கும், தனிநபர் போக்குவரத்தையும், பொதுப்போக்குவரத்தையும் தலைகீழாக மாற்றிவிடும் எனும் ரீதியில் வல்லுநர்களின் கருத்துகள் உள்ளன.

தானியங்கி கார்கள் ஓட்டுநர்களுக்கு விடை கொடுப்பதற்கு முன்னர் பல முக்கிய சவால்களையும், பரீட்சைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கின்றன.

குறுக்கே வரும் மனிதர்களையும், எதிர்பாராமல் வரும் விலங்குகளையும் அவற்றால் சமாளிக்க முடியுமா? உள்ளே அமர்ந்திருப்பவர்களைக் காப்பாற்றுவதா? நடைபாதையில் நின்றிருப்பவர்கள் உயிரைக் காப்பாற்றுவதா? என முடிவெடுக்க வேண்டிய நெருக்கடியான நிலையில் இவை என்ன செய்யும்? இன்னும் எண்ணற்ற கேள்விகளை உள்ளடக்கியே ஆய்வுகள் நடக்கின்றன.

நடைமுறையில் இந்த கார்கள் பயன்பாட்டுக்கு வருவது என்பது விரைவாக நிகழ்ந்தாலும் அல்லது தள்ளிப்போனாலும், இனி வருங்காலம் தானியங்கி கார்களுக்கானது என்பது நிச்சயம்.

அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த பென்சா எனும் வடிவமைப்பு ஆலோசனை நிறுவனம் மூன்றாம் இடம் எனும் தலைப்பில் இதற்கான வரைவை வெளியிட்டுள்ளது.

வருங்கால நகரங்கள் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்துள்ள இந்த வரைவுத் திட்டம் நம்ப முடியாத பல வருங்கால மாயங்களை விவரிக்கிறது.

அவற்றில் ஒன்று, தானியங்கி கார்கள் சாலைப் போக்குவரத்தை மட்டுமல்ல, நடைபாதைகளையும் மாற்றிவிடும். இந்த கார்களுக்கான செயல்பாட்டு விதிகள் முற்றிலும் வேறு என்பதால் தானியங்கி கார்களை நிறுத்திவைக்க இடம் தேவைப்படாது.

ஆகவே நிறுத்துவதற்கென ஒதுக்கப்படும் இடத்தைப் பிற தேவைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். நகரங்களில் இப்படி விடுவிக்கப்படும் இடம் நகரத் திட்டமிடலுக்கு வரப்பிரசாதம்.

இந்த அம்சம் குறைந்த விலை வீடுகளைச் சாத்தியமாக்கும் என சுட்டிக்காட்டுகிறது பென்சாவின் வரைவு. தொழில்நுட்பத்தின் விளைவாக ஏற்கனவே அலுவலகச் சூழலின் வரம்பும், வரையறையும் கரையத் தொடங்கியுள்ளன.

இப்போது அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே கவனிக்கலாம். வரும் காலத்தில் காரில் இருந்த படியேவும் கவனிக்கலாம். ஆம், காரோட்டும் கவலை இல்லை என்பதால், பின் சீட்டில் அமர்ந்து லேப்டாப்பில் அலுவலகப் பணியில் மூழ்கிவிடலாம்.

ஆக அலுவலகச் சூழலுக்கான எல்லைகள் மாறுபடுவதால், கட்டிடங்களுக்கும் சாலைகளுக்கும் இடையிலான வெளியின் தன்மையும் மாறும் என்கிறது இந்த வரைவு.

தானியங்கி கார்கள் மின்சக்தியால் இயங்கக் கூடியவை. விபத்தை ஏற்படுத்தாது. சத்தமும் போடாது. எனவே இந்த காரை அழைப்பதற்கான விசையை அழுத்திவிட்டு, அவை வந்து சேரும் வரை நடைபாதையிலே காத்திருக்கலாம்.

வாகனங்கள் மோதிவிடும் என்ற அச்சம் இல்லாமல், இரைச்சலும் இல்லாத சூழலில் நின்றுகொண்டிருக்கும்போது, இந்த வெளி உட்கார்ந்துகொள்ளவும் ஏற்றதாக இருக்காதா என்று இந்த வரைவு கேட்கிறது.

நடைபாதைகள் மீதான நெருக்கடி குறையும் சூழலில் அவற்றைச் சந்திக்கும் இடங்களாகவும், காபி மையங்களாகவும் மாற்றிக்கொள்ளலாம் எனும் விதமாக இதற்கான பதில் விரிகிறது.

இந்த எண்ணங்களின் அடிப்படையில் பென்சாவின் எதிர்கால நகரத்துக்கான சித்திரம் அமைகிறது. இது பற்றிய பாஸ்ட்கோடிசைன் இணையதளக் கட்டுரை: >https://www.fastcodesign.com/3060466/self-driving-cars-could-revolutionize-our-sidewalks-too இதே போல, வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில், மூத்த குடிமக்களுக்குத் தானியங்கி கார்கள் வரப்பிரசாதம் என்று ஜே. மேத்யூஸ் எனும் பத்திரிகையாளர் விவரித்துள்ளார்.

வயதானவர்களுக்கு கார் ஓட்டுவதில் உள்ள சங்கடங்களையும், சவால்களையும் தானியங்கி கார்கள் போக்கிப் போக்குவரத்தை எளிதாக்கும் என்று அவர் சந்தோஷப்படுகிறார்: >https://www.washingtonpost.com/opinions/a-self-driving-car-will-be-my-godsend/2016/06/03/57da67a4-2028-11e6-8690-f14ca9de2972_story.html

இதே நாளிதழில் வெளியான மற்றொரு கட்டுரை கார்கள் மட்டும் அல்ல, டிரக்குகளும் தானியங்கிமயமாகும் என்கிறது. இன்னும் பல மாற்றங்களைக் குறித்து விவரிக்கிறது இந்தக் கட்டுரை. ஆக, தானியங்கி கார்கள் சாத்தியமாகும்போது அவை பணியிடம் முதல் கலாச்சாரம் வரை எல்லாவற்றையும் அடியோடு மாற்றும் வாய்ப்பு இருப்பதால் நாமும் அவற்றுக்கு ஏற்பத் தயாராவதுதான் முறை.

மற்றத்தையும், தாக்கத்தையும் மனதில் கொள்வதோடு, அவற்றோடு வரக்கூடிய புதிய வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு நாமும் செயல்பட்டால், புதிய சேவைகளும், தீர்வுகளும் சாத்தியமாகும். நாம் தயாராக இருக்கிறோமா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x