Published : 15 Jan 2015 09:25 AM
Last Updated : 15 Jan 2015 09:25 AM

திரை விமர்சனம் - ஐ

உடல் வலிமையோடு இருக்கும் ஒருவனை தந்திரமாக ஒரு கும்பல் உருக்குலைக்கிறது. அவன் மனவலிமையோடு திருப்பி அடிக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும்?

லிங்கேஸ்வரன் (விக்ரம்) சென்னை யில் குடிசை மாற்று வாரியக் குடியிருப் பில் வசிக்கும் சாமானிய இளைஞன். ஆணழகன் பட்டம் பெறத் துடிப்போடு முயற்சி செய்கிறான். மாடலிங் துறையில் கொடிகட்டிப் பறக்கும் தியா (எமி ஜாக்சன்) மீது அவனுக்குக் கொள்ளைப் பிரியம்.

ஆணழகன் போட்டியில் வென்று உள்ளூர் மாடலிங் உலகில் நுழையும் விக்ரமுக்கு எமியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. எமி ஒரு நெருக்கடியில் சிக்கிக்கொள்ள, அதற் காக உதவும் விக்ரம் விரைவில் சிறந்த மாடலாக உருவெடுக்கிறார். விக்ரம் – எமி விளம்பர ஜோடி பெரும் புகழ் பெறுகிறது. வணிக உலகின் சூதாட்டத்தில் விக்ரம் பகடைக்காயாக உருட்டப்பட... அவர் வாழ்க்கை சின்னா பின்னமாகிறது. தன்னைச் சீரழித்துத் தன் காதலைப் பறித்தவர்களை விக்ரம் பழிவாங்குவதும், காதலனை அடையாளம் காண முடியாத காதலி என்ன செய்தாள் என்பதும்தான் மீதிக் கதை.

பொங்கலோடு சேர்த்து தீபாவளியும் சேர்த்துக் கொண்டாடவைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். எதை எடுத்தாலும் பெரிதாக யோசிப்பதும், வழக்கமான அளவுகோல்களை தாண்டி புதிய உயரம் காட்டுவதும் ஷங்கரின் பலம். ‘ஐ’-யிலும் அதைச் செய்து காட்டி இருக்கிறார். ‘காமிக்ஸ்’ புத்தகமாகப் படிக்கக் கூடிய ஒரு எளிமையான கதையைத் தனக்கே உரிய பிரம்மாண்ட கற்பனையோடு சொல்லியிருக்கிறார். சமூகத்துக்கு வழக்கமாக கொடுக்கிற ‘மெஸேஜ்’ மட்டும் இதில் இல்லை.

கதாநாயகனின் வாழ்வைச் சிலர் அழித்தலும் அதற்குக் கதாநாயகன் பழிவாங்குவதும் புதிய கதைக்களமல்ல. ஆனால் அது என்ன பாதிப்பு, அதை நாயகன் எப்படி எதிர்கொண்டு திருப்பி அடிக்கிறான் என்று யோசித்த விதத்திலும் வித்தியாசப்படுகிறது ‘ஐ’!

அனல் அரசு அமைத்துள்ள ஜிம் சண்டைக் காட்சிகள் உக்கிர சக்கரம். சீனாவில் நடக்கும் சண்டை அந்த பாணி படங்களுக்கே உரிய வேடிக்கை கலவை. (பாராட்டுக்கள்: சீனக் கலைஞர் பீட்டர் மிங்). ரயிலின் மேல் நடக்கும் சண்டைதான் அநாவசியமாகவும், நம்பகத்தன்மை இல்லாமலும் தெரிகிறது.

கோரத் தோற்றத்தைக் கண்ணாடியில் பார்த்து விக்ரம் குமுறும் இடம்... விக்ரமின் உருவம் படிப்படியாக மாறும் விதம்... ஒரு நடிகனின் அர்ப்பணிப்பும், தொழில்நுட்பத்தின் நேர்த்தியும் கூட்டணி போட்டு கலக்கி எடுக்கும் காட்சிகள். சீனாவில் எடுக்கப்பட்ட காட்சிகள், பி.சி.ராமின் கேமிரா ஜாலத்தில் அழகோ அழகு. படத்தின் ஒரு பலவீனம் அதன் நீளம். அதோடு வில்லன் யார் என்பதை முதலிலே யூகித்துவிட முடிகிறது.

சக நடிகர் பாலியல் தொந்தரவு தருகிறார் என்பதற்காக, மாடலிங்குடன் சம்பந்தமே இல்லாதவரை ஏன் எமி தேர்ந்தெடுக்க வேண்டும்? மாடலிங் உலகில் வேறு ஆண்களே கிடையாதா? சர்வதேச அளவில் தொழில் செய்யும் பிசினஸ்மேன் (ராம்குமார்) ஒரு சாதாரண மாடலை காலி செய்வதற்காகத் தீட்டும் திட்டம் எல்லாம் அதிகப்படி. டாக்டரின் வில்லத்தனத்துக்குச் சொல்லப்பட்ட காரணமும் பலவீனமாக உள்ளது. திருநங்கைகள் பற்றிய கரிசனமான பார்வை வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இப்படி சித்தரித்தது சரியா ஷங்கர்?

விளம்பரங்களை வைத்தே வடிவ மைக்கப்பட்டுள்ள ‘ஆயிலா ஆயிலா’ பாடல், ‘மெர்சலாயிட்டேன்’, ‘பூக்களே’, ‘என்னோடு நீ இருந்தால்’ ஆகிய பாடல்கள் ஏ.ஆர். ரஹ்மானின் இசை, பி.சி. ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, ஷங்கரின் கற்பனை வளம் ஆகியவற்றால் வசீகரிக்கின்றன.

சைனா களிமண் போல உடம்பை எத்தனை விதமாக உருமாற்றி இருக்கிறார் விக்ரம்! கட்டுடல் இளைஞன், மாடல் அழகன், கோரத் தோற்றம் என எல்லாவற்றிலும் இயக்குநரின் படைப்பாற்றலுக்கு உருவம் கொடுக்க முழுசாக ஒத்துழைத்திருக்கிறார். ஆக்ரோஷமான சண்டைகள், காதல் காட்சிகளில் காட்டுகிற வசீகரம், சைக்கிள் சண்டையில் சுறுசுறுப்பு என... ஒரு நடிகனுக்கான மெனக்கெடலை தன் பங்குக்கு அசாத்தியமாகச் செய்திருக்கிறார். கோர முகம் கொண்ட விக்ரமின் ஒப்பனையே தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது என்றாலும் அவர் கண்களும் குரலும் உடல் மொழியும் அந்தத் தாக்கத்தைக் கணிசமாகக் கூட்டிவிடுகின்றன.

சென்னைத் தமிழ் உச்சரிப்பில் ஓரளவு தேறுகிறார். ஆனால் அந்தத் தமிழுக்கே உரிய அநாயாசமான ஏற்ற இறக்கம்தான் இல்லை. அவரும் எமியும் சென்னைத் தமிழில் செல்லமாகத் திட்டிக்கொள்ளும் காட்சி ஜிலு ஜிலு. ஆனால் சென்னைத் தமிழ் என்றாலே வசை வார்த்தைகள் மட்டும்தானா?

மாடல் பாத்திரத்தில் எமி ஜாக்சன் அவ்வளவு பொருத்தம். அழகிலும் நடிப்பிலும் மனதைக் கொள்ளை கொள்கிறார். ‘‘நான் அந்த மாதிரி டைப் இல்லை” என உபேன் பட்டேலிடம் காட்டும் கண்டிப்பு, விக்ரமிடம் காட்டும் அன்பு இரண்டையும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். சந்தானம் சிரிக்க வைக்கிறார். ஆனால் தண்ணி வாயா, பன்னி வாயா என்று வசை பாடுவது இன்னும் எத்தனை நாளைக்கு?

உபேன் படேல், சுரேஷ் கோபியும் பாத்திரங்களுக்கு ஏற்ற கச்சிதம். தேவையற்ற நீளம், திரைக்கதையின் பின்பாதி பலவீனங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்... ரசமான விருந்து.

‘ஐ’ந்துக்கு மூன்றே முக்கால்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x