

பொற்கோவில் வளாகத்துக்கு வெகு அருகில், அடைசலான போக்குவரத்தைக் கடந்து சென்றால் சாலையின் திருப்பத்தில் ஜாலியன் வாலாபாக் என்ற பலகை பளிச்சிடுகிறது. சுமார் மூன்றடி அகலமுடைய குறுகலான பாதையின் உள்ளே நுழைந்து செல்லும்போதே, இந்த ஒற்றை வழியையும் அடைத்துவிட்டுத்தானே, அன்று ஜெனரல் டயர் நம் நாட்டு அப்பாவி மக்களைச் சுட்டுத் தள்ள உத்தரவிட்டார் என்ற எண்ணம் தோன்றி, மனத்துக்குள்ளே ஒரு தார்மீகக் கோபத்தை ஏற்படுத்துகிறது.
ஜாலியன் வாலாபாகில் எதற்காக அத்தனை பேர் அன்று கூடினார்கள்? அவர்கள் மீது ஏன் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது? சற்றே பின்னோக்கிப் போவோம்.
ஒற்றுமையைக் குலைக்க
1919 பிப்ரவரியில் கொண்டுவரப்பட்ட ரவுலட் சட்டத்தின்படி விடுதலைப் போராட்ட வீரர் எனச் சந்தேகிக்கும் எவரையும் விசாரணை இன்றிக் கைது செய்து, காலவரையறையின்றிச் சிறையில் அடைக்கலாம். இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்த காந்தியடிகள், ஒத்துழையாமை இயக்கத்தை அறிவிக்க, நாடெங்கும் தேச பக்தி கொழுந்துவிட்டு எரிந்தது.
1919 ஏப்ரல் 10, ராம நவமியன்று, அமிர்தசரஸில் இந்துக்களும், முஸ்லிம்களும் ஏராளமாகப் பங்கேற்க, ஒரு ஊர்வலம் நடந்தது. இதனைப் பொறுத்துக் கொள்ளமுடியாத ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்த டாக்டர் சத்யபால், டாக்டர் சைபுதீன் கிச்சுலு இருவரையும் கைது செய்தனர். இது பஞ்சாப் முழுவதும் பெரிய கிளர்ச்சியைத் தோற்றுவித்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைக்குத் துப்பாக்கிதான் பதில் சொன்னது. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, மறுநாள் ஜலந்தரிலிருந்து வந்த ஜெனரல் ரெஜினால்டு டயர், அமிர்தசரஸ் நகரின் சட்டம் ஒழுங்கைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவெடுத்தார்.
தப்பிக்க வழி இல்லை
ஏப்ரல் 13 , சீக்கியர்களுக்குப் புனித தினம். அன்று ஊரின் பொது இடமான ஜாலியன் வாலாபாகில் ஒரு கண்டனக் கூட்டத்துக்கு ஏற்பாடானது. சுற்று வட்டாரத்திலிருந்து சுதந்திர தாகம் கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். மாலை சுமார் நாலரை மணிக்குக் கூட்டம் தொடங்கியது. ஒரு மணி நேரத்தில் ஜெனரல் டயர் 150 சிப்பாய்களோடு வந்திறங்கினார். முன்னறிவிப்பு ஏதுமின்றி, மக்களை நோக்கிச் சுட உத்தரவிட்டார். பெண்களும், குழந்தைகளும், மற்றவர்களும் உயிர் தப்பிக்க முண்டியடித்துக் கொண்டு ஓடினார்கள்.
ஜாலியன் வாலாபாக் என்பது சுற்றிலும் வீடுகள், சுவர்கள் சூழ்ந்த குறுகலான ஒற்றை நுழைவுப் பாதை மட்டுமே கொண்ட நாற்கர வடிவ நிலப்பகுதி. எனவே, மக்களால் அங்கிருந்து தப்பித்துச் செல்ல வழி இல்லாமல் போனது. துப்பாக்கிச் சூட்டில் மட்டுமின்றி நெரிசலில் சிக்கியும் பலர் மரணமடைந்தனர்.
கிணற்றைப் பார்த்தே ஆக வேண்டும்
அப்போது 379 பேர் இறந்ததாகவும், 1,337 பேர் காயமுற்றதாகவும் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் படிக்கும்போதே மனம் பதறுகிறது. ஆனால், வெறும் பத்து நிமிடத்தில் 1,650 ரவுண்டு குண்டுகள் சுடப்பட்டதில், 1,500 பேர் மரணமடைந்ததாகவும், 3,000-த்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் பதிவுசெய்துள்ளனர். அப்போது பஞ்சாபின் துணை ஆளுனராக இருந்த மைக்கேல் ஓ டுவையர் “உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் எனக்கு உடன்பாடானதே” என்று ஜெனரல் டயருக்குத் தந்தி அனுப்பினார்.
பூங்காவுக்குள் சிக்கிய மக்கள், தப்பித்துச் செல்ல வழியில்லாமல், கிணற்றுக்குள்ளே குதித்தார்கள் என்று பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்தில் படித்த செய்தி நினைவுக்கு வர, அந்தக் கிணற்றைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. இன்று வற்றிக் கிடக்கும் அந்தக் கிணறு, அன்று சுமார் 120 பேர்களைப் பலிவாங்கியதாக ஒரு தகவல். அங்கே ‘தியாகிகள் கிணறு’ என்று பெயர்ப் பலகை பொருத்தப்பட்டுள்ளது.
அணையா ஜுவாலை
ஜாலியன் வாலாபாகின் உள்ளே ஆங்காங்கே தரையில் சிறு பிரமிட்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவற்றில் “இந்த இடத்தில் இருந்துதான் மக்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார்கள்” என்று பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் பெரிய செங்கற்களாலான சுவரில் ஆங்காங்கே வெள்ளை நிறத்தில் சதுர வடிவக் கட்டங்கள் உள்ளன. அவற்றின் உட்புறத்தில் குண்டடிபட்ட துளைகளைப் பார்க்கும்போது மனம் கசிகிறது.
இன்று பசுமையான ஒரு பூங்காவாக இருந்தாலும், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் கருமையான பக்கத்தின் பதிவுதான் ஜாலியன் வாலாபாக். அங்கே உயிர் நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையில் அரசு ஒரு அணையா ஜுவாலையை அமைத்துள்ளது. பார்வையாளர்கள் பலர் அங்கே சில விநாடிகள் மவுனமாக நின்று அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இன்று பசுமையான ஒரு பூங்காவாக இருந்தாலும், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் கருமையான பக்கத்தின் பதிவுதான் ஜாலியன் வாலாபாக். அங்கே உயிர் நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையில் அரசு ஒரு அணையா ஜுவாலையை அமைத்துள்ளது. பார்வையாளர்கள் பலர் அங்கே சில விநாடிகள் மவுனமாக நின்று அஞ்சலி செலுத்துகிறார்கள்.
“அங்கே கூடியிருந்த மக்களைக் கலைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமில்லாமல், இந்திய மக்கள் மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்தவே நான் அப்படிச் சுட உத்தரவிட்டேன்”. இது விசாரணை கமிஷன் முன்பு ஜெனரல் டயர் அளித்த வாக்குமூலம். ஆனால், ஜெனரல் டயர் முன்னறிவிப்பு ஏதுமின்றி, அத்து மீறி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக விசாரணை கமிஷன் குறிப்பிட்டது.
பிரிட்டனுக்குத் திரும்பிய ஜெனரல் டயர், 1927-ல் பக்கவாத நோய்க்குள்ளாகி, பேச்சுத் திறன் இழந்து, இறந்தார். பஞ்சாப் துணை ஆளுநராக இருந்து, படுகொலைக்கு ஆதரவு தெரிவித்த மைக்கேல் ஓ டுவையர் லண்டன் திரும்பிய பிறகு, அவரை நுட்பமாகக் கண்காணித்து, ஜாலியன் வாலாபாக் சம்பவத்துக்குப் பின் 21 ஆண்டுகள் கழித்து, சுட்டுக்கொன்றார் பஞ்சாபைச் சேர்ந்த வீரர் உத்தம் சிங். அவருக்குப் பிரிட்டிஷ் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது.
“உத்தம் சிங் செய்தது அறிவற்ற செயல்; ஆனால் வீரம் மிக்கது” என்று குறிப்பிட்டார் காந்தியடிகள்.
அந்த நாள்
பிரிட்டிஷ் ஆட்சியின்போது, ஜெனரல் டயர், ஜாலியன் வாலாபாகில் கூடிய அப்பாவி இந்தியர்களைச் சுட்டுப் படுகொலை செய்ய உத்தரவிட்டார். அந்தக் கொடூரமான சம்பவம் நடந்த ஜாலியன் வாலாபாக், பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் நகரத்தில், பொற்கோவிலுக்கு அருகில்தான் உள்ளது. 1919 ஏப்ரல் 13 அந்தப் படுகொலை நடந்தது. எனவே, ஆண்டுதோறும் ஏப்ரல் 13 ஜாலியன் வாலாபாக் தினமாக அனுசரிக்கப்பட்டு, அன்று உயிர் நீத்த அப்பாவி இந்திய மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
கட்டுரையாளர்,
எழுத்தாளர் - மூத்த பத்திரிகையாளர்.