Last Updated : 23 Dec, 2016 10:27 AM

 

Published : 23 Dec 2016 10:27 AM
Last Updated : 23 Dec 2016 10:27 AM

மொழி கடந்த ரசனை 14: தேவதைகளின் உலகத்திலிருந்து...

குறிப்பிட்ட ஒரு திரைப்படத்துக் கான வரவேற்பானது, திரைக்கதை, இசை, நடிப்பு ஆகியவற்றைக் கடந்து, அந்தத் திரைப்படம் வெளியாகும் காலம், பண்பாட்டுச் சூழல், அப்போதைய சமூக நிலை போன்றவற்றையும் சார்ந்தது. பெண்ணியச் சிந்தனையை மையப்படுத்தித் தமிழில் எடுக்கப்பட்டு வெற்றியடைந்த ‘நானும் ஒரு பெண்’ என்ற படம் இந்திக்குப் போனது. தலைப்பு, செட், தயாரிப்பாளர், இயக்குநர், முக்கிய நடிகர்கள், பாடல் வரிகள், மெட்டுக்கள் ஆகிய அனைத்தும் அப்படியே தக்க வைக்கப்பட்டு அதே காலகட்டத்தில் இந்தியில் ‘மே பீ லடுக்கி ஹூம்’ (நானும் பெண்தான்) என்னும் படமாக மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், அது அங்கு வெற்றியடையவில்லை.

பாலிவுட்டில் கண்ணதாசன்

ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்திப் படம் தோல்வியடைந்தாலும், அதுவரை இந்தி உலகம் நன்றாக அறியாத, கண்ணதாசனின் கவித்திறனையும் இந்தியாவின் தலை சிறந்த பின்னணிப் பாடகர்களின் ஒருவரான பி.பி ஸ்ரீனிவாஸின் குரல் இனிமையையும், எஸ்.வி. ரெங்காராவின் குணசித்திர நடிப்பாற்றலையும் இந்தியா முழுவதற்கும் இந்தப் படம் எடுத்துக்காட்டியது.

ஏவிஎம் நிறுவனம் தயாரித்த 18 படங்களுக்குக் கதாசிரியராக விளங்கிய, தமிழ் மொழி அறிந்த ராஜேந்திர கிஷன், இந்திப் படத்தின் பாடலாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் விளங்கினார். கண்ணதாசன் எழுதி ஆர். சுதர்சனம் இசை அமைத்த ‘கண்ணா கருமை நிறக் கண்ணா’ என்ற காலத்தால் அழியாத பாடலையும் ‘பூப்போல பூப்போல பிறக்கும்’ என்ற மென்மை உணர்வு மிக்க பாடலையும் கருத்தும் உணர்வும் சிதையாமல் இந்தி மொழிக்குள் கொண்டுவருவதில் வெற்றியடைந்தார்.

தன் நெருங்கிய நண்பரான ஏ.ஏஸ்.பி. அய்யர் என்பவரின் வற்புறுத்தலின் பேரில் ‘பொத்து’ என்ற வங்காள நாடகத்தைப் பார்த்த ஏவி மெய்யப்பன், அதன் கதையைத் தழுவி, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் எடுத்த படம் இது.

கருமை என் தவறா?

நாயகி எத்தனை நற்குணங்கள் உடையவளாக இருந்தும் அவளது கறுப்பு நிறத்தால் படும் அவதிகளையும் சொல்லும் படம். எவரும் தன்னைச் சரியாகப் புரிந்துகொள்ளாத வேதனையில் விஜயகுமாரி, கருமை நிறக் கண்ணன் எனப் போற்றப்படும் கிருஷ்ண பகவானைப் பார்த்து, ‘கறுப்பாக இருக்கும் உன்னை எல்லோரும் பார்க்க விரும்பும்போது கறுப்பாக இருக்கும் என்னை மட்டும் எவரும் கண் கொண்டு காண ஏன் விரும்பவில்லை?’ என்று கேட்பார். கதைச் சூழலை ஒட்டி எழுந்தாலும் அதையும் கடந்து நிற்கும் கண்ணதாசனின் இந்தச் சிந்தனையை ராஜேந்திர கிஷன் அச்சு பிசகாமல் மொழி மாற்றம் செய்துள்ளார்.

“கிருஷ்ணா ஓ காலி கிருஷ்ணா துனே ஏ க்யா கியா கைஸே பதலா லியே” என்ற, தமிழ்ப் பாடலின் அதே மீட்டரில் அமைந்த இந்திப் பாடலின் பொருள்:

கிருஷ்ணனே ஓ கிருஷ்ணனே

நீ என்ன செய்து விட்டாய்,

இந்த நிறத்தை எனக்குத் தந்து.

எப்படி என்னை மாற்றிவிட்டாய்

எல்லோரும் கருமை நிறக்

கடவுளைப் பூஜிக்கிறார்கள்

ஆனால் கருமை நிற மனிதர்களை

வசை பாடுகிறார்கள்

புல்லாங்குழலின் இசையில் நீ லயித்திரு

யாரோ அநீதியில் ஆட்படுவது

பற்றி உனக்கென்னை?

என் கருமையான முகத்தை

மறைக்க முடியவில்லை

என் உள்ளம் எத்தனை வெள்ளை

என்பதைக் காட்ட முடியவில்லை.

எனக்கு நல்ல உள்ளத்தைத் தந்ததாய்

ஆனால் அதை உணர்ந்துகொள்ளும்

நல்ல பார்வையை

ஏன் உலகத்திற்குத் தரவில்லை?

இரண்டு குரல்கள்

இந்தியில் இந்தப் பாடலை மிகச் சிறப்பாகப் பாடிய லதா மங்கேஷ்கரைவிடத் தமிழ்ப் பாடலைப் பாடிய பி.சுசீலாவின் குரல் அதிக உணர்வுபூர்வமாக இருந்தது. கருமை நிறத்தின் தாக்கம் தென்னிந்தியாவில் அதிகம் என்பதுதான் இதற்குக் காரணமா எனத் தெரியவில்லை.

‘பூப்போல, பூப்போல பிறக்கும்’ என்று தொடங்கும் பாடல் அதே மெட்டில் ‘சந்தா ஸே ஹோகா வோ பியாரா, பூலோ ஸே ஹோகா வோ நியாரா’ என்று இந்தி அவதாரம் எடுத்தது. தமிழில் டி.எம்.சவுந்தர்ராஜனும் பி.சிசீலாவும் பாடிய இந்தப் பாடலை இந்தியில் பி.பி.நிவாஸும் லதா மங்கேஷ்கரும் பாடினார்கள். லதாவுக்கு இணையான பி.பி. ஸ்ரீனிவாஸின் தெளிவான இந்தி உச்சரிப்பு அனைவரையும் வியக்கவைத்தது. தலத் முகமது, முகமது ரஃபி ஆகியோரின் மென்மையான குரல் வளமை இந்திப் பட உலகினரை மயங்கவைத்தது. இந்தப் பாடலின் பொருள்:

சந்திரனை விட எழிலாக இருக்கும்

அது மலர்களை விட மென்மையாக இருக்கும்

ஜம் ஜம்மென்று குதித்து விளையாடும்

நம்முடைய அந்தக் குட்டிக் குழந்தை

மலரும் மொட்டு போல இருக்கும்

அதன் மழலை கிளியின் குரல் போல

அப்பா அம்மா அப்பா என நாம்

அந்த நிலாவைக் கட்டிக்கொள்வோம்

சிப்பிக்குள் உள்ள முத்து போல மறைந்துள்ள

அந்தக் குழந்தை தேவதைகளின் உலகத்திலிருந்து

வந்துகொண்டிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x