Last Updated : 24 Feb, 2017 10:16 AM

 

Published : 24 Feb 2017 10:16 AM
Last Updated : 24 Feb 2017 10:16 AM

மொழி கடந்த ரசனை 22: இனி வருமோ இந்த அழகான இரவு

பிரிவினைக்கு முற்பட்ட இந்தியாவில் எடுக்கப்பட்ட அனைத்து சிறந்த திரைப்படங்களும் மூன்று மொழிகளுக்கே உரியவை. வங்காளம், இந்தி, தமிழ் என்ற வரிசையில் அமைந்த அப்படங்கள் மொழிமாற்றம், தழுவல், தாக்கம் ஆகிய ஏதோ ஒன்றின் மூலம் மற்ற மொழி ரசிகர்களையும் சென்றடைந்தன. இது இந்தியத் திரை வரலாற்றில் குறிப்பிடத்தக்க பிரத்யேக அம்சம். அப்படி மொழிமாற்றம் செய்யபடும் படத்தின் பாடல் வரிகளும் இசை மெட்டுகளும் மூல வடிவிலேயே இடம்பெயர்வது அரிதாக நிகழும் அபூர்வ நிகழ்வு.

இந்திய விடுதலை வரை, இதில் முன்னணியில் இருந்த வங்காள மொழி, தன் முதன்மை இடத்தை, பின்னர் நிகழ்ந்த வணிக மாற்றங்களால் இந்தி மொழியிடம் இழந்துவிட்டது. சிறந்த வங்காளக் கலைஞர்கள் பம்பாய்க்குக் குடிபெயர்ந்ததன் மூலம் இந்த மாற்றம் நிகழ்ந்தது.

மொழி கடந்த ரசனையாக இப்படி அமைந்த ஒரு திரைப்படம் 1964 -ல் ராஜ் கோஸ்லா இயக்கத்தில் வெளியான ‘வோ கோன் தீ’ (அவள் யாராக இருந்தாள்) என்ற இந்தித் திரைப்படம். குரு தத்தின் சீடராகத் திரை உலகில் நுழைந்த, நல்ல குரல் வளம் மிக்க பாடகர். வித்தியாசமான இயக்குநர்.

ஹாலிவுட் உலகின் ஜார்ஜ் கக்கர் போன்று, பல சிறந்த நடிகைகளை அறிமுகப்படுத்திய இவர், சாதனா, மும்தாஜ், நூதன், வகிதா ரஹ்மான் போன்ற சிறந்த கலைஞர்களின் வெற்றிக்கு அடிகோலியவர். வித்தியாசமான சூழலில் அமைந்த இவரது பல பாடல் காட்சிகளுக்கு இவரது இசைப் பின்புலம் ஒரு காரணமாக விளங்கியது.

பெருமை சேர்த்த படம்

‘வோ கோன் தீ’ என்ற இந்திப் படம் ‘யார் நீ’ என்ற பெயரில் தமிழிலும் ‘ஆமெ எவரு’ என்ற பெயரில் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ‘உளவியல் திகில்’ வகை சார்ந்த ராஜ் கோஸ்லாவின் மூன்று வெற்றிப் படங்களில் முதலாவது படம் இது. (மற்றவை: மேரா சாயா, அனிதா). இந்தப் படம், நடிகை சாதனா, இசை அமைப்பாளர் மதன்மோகன், பாடகி லதா மங்கேஷ்கர், பாடலாசிரியர் ராஜா மெஹதி அலி கான் ஆகிய அனைவரையும் அகில இந்திய நட்சத்திரங்களாக ஆக்கிய பெருமைக்கு உரியது.

மெஹதியின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்றான, ‘லக் ஜா கலே கீ ஃபிர் யே ஹஸ்ஸின் ராத் ஹோ நா ஹோ’, வித்தியாசமான பாணியில் அமைந்த, ‘ஜோ ஹம்னே தாஸ்த்தான் அப்னே சுனாயீ தோ ஆப் கியோன் ரோயீ’, இப்படத்தில் அடிக்கடி ஒலிக்கும் ‘ பர்ஸே நயனே ரிம்ஜிம் ரிம்ஜிம்’ ஆகிய மூன்று பாடல்களையும் பாடியவர் லதா மங்கேஷ்கர்.

இந்தப் பாடல்கள் அதே உணர்வுடன், அச்சு மாறாமல், இசை, குரல் மட்டுமின்றி மொழியிலும் மாற்றம் கண்டது ஒரு விந்தை. அந்த விந்தையை நிகழ்த்தியவர் இந்தி மொழி அறியாவிடினும் தன் சிந்தையின் திறனால் அதைச் செய்து காட்டும் சொல் தச்சன் கண்ணதாசன்.

ஒரே உருவம் கொண்ட இரண்டு பெண்களை மர்மமான சூழலில் மாறிச் சந்திக்கும் நாயகன் குழப்பத்தின் உச்சிக்குத் தள்ளப்படுகிறான். படித்த மருத்துவரான அவன் குழப்பத்தைப் போக்கி அவனைத் தன்வயப்படுத்தும் காட்சிக்காக எழுதப்பட்ட பாடல் இது. காட்சிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதுடன் காட்சியின் பின்புலம் தாண்டியும் வாழ்க்கையின் நிலையை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. பின்னணியில் ஒலிக்கும் வயலின் இசை உட்பட அனைத்து இசை அம்சங்களும் தமிழில் அப்படியே தக்க வைக்கப்படுள்ளன. இந்தி நடிகை சாதனாவுக்கு இணையான அழகுடைய ஜெயலலிதா, மர்மமான, விட்டேத்தியான பார்வையை நன்றாக வெளிப்படுத்தும் மனோஜ் குமாருக்கு இணையான ஜெய்சங்கர் ஆகியவை இப்படத்தின் தமிழ் வடிவான ‘யார் ‘நீ’ படத்தின் சிறப்பு அம்சங்கள்.

‘லக் ஜா கலே’ என்றால், (கழுத்தில் படர்ந்துகொள்) என்னைக் கட்டிக்கொள் என்று பொருள். அவ்வரிகளுடன் தொடங்கும் அப்பாடலின் பொருள்:

அணைத்துக்கொள் என்னை அன்பே

அழகான இந்த இரவு இனி வருமோ வராதோ

ஒருவேளை இந்த ஜென்மத்தில் நம் சந்திப்பு

மீண்டும் ஏற்படுமோ ஏற்படாதோ

நல்வாய்ப்பாக இந்த நாழிகை கிட்டியுள்ளது

நன்கு ஆசை தீரப் பார்த்துக்கொள் அருகில் வந்து

பின்பு இந்தப் பேறு உனக்குக் கிட்டுமோ இல்லையோ

ஒருவேளை இந்த ஜென்மத்தில் நம் சந்திப்பு

மீண்டும் ஏற்படுமோ ஏற்படாதோ

வா என் அருகில் வர மாட்டேன் இனி அடிக்கடி

தா உன் தோளை அழுதுகொள்கிறேன்

தாரை தரையாகக் கண்ணீர் வடித்து

இனி என் விழிகளில் அழுவதற்குக் கண்ணீர்

இருக்குமோ இல்லாது போகுமோ

அணைத்துக்கொள் என்னை அன்பே

அழகான இந்த இரவு இனி வருமோ வராதோ

திரைப்படத்தின் பாடல் காட்சிக்கு முழுவதுமாகப் பொருந்தக்கூடிய வரிகளாக விளங்குவதுடன், தனியாகப் பார்க்கும்போதும் வாழ்க்கையின் பிற சூழல்களுக்கும் ஏற்ற கருத்துகளாகத் திகழும் பாடல்களை இயற்றும் திறன் படைத்த ராஜா மெஹதி அலி கானின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று இது. படம் வெளிவந்து 53 வருடங்கள் ஆகியும் இன்றும் அநேகமாக தினமும் வானொலியில் ஒலிப்பரப்பாகும் இப்பாடலை லதா மங்கேஷ்கர் தவறாமல் அவரது இசை நிகழ்ச்சிகளில் பாடுவார்.

தமிழில், இந்தப் பாடல், ‘பொன்மேனி தழுவாமல்’என்பதாக அமைந்தது. இந்திப் பாடலின் இசை, வயலின் பின்னணி உட்பட, முழுவதுமாகத் தமிழில் தக்க வைக்கப்பட்டிருந்தது. இத்தகைய இசையுடன் கண்ணதாசனின் எழில் வரிகளும் சேர்ந்து இந்தப் பாடலை மறக்க முடியாததாக ஆக்கிவிட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x