Last Updated : 24 Aug, 2016 10:50 AM

 

Published : 24 Aug 2016 10:50 AM
Last Updated : 24 Aug 2016 10:50 AM

வாண்டு பாண்டு: விளையாட்டுக்கு ஒரு தினம்!

வாண்டு: ஹாய் பாண்டு, எப்போ உன்னை மைதானத்துக்கு வரச் சொன்னேன். இவ்ளோ லேட்டா வர?

பாண்டு: முன்னாடியே வந்திருப்பேன். டி.வி.யில ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். அதான் வர முடியலை.

வாண்டு: என்னை விளையாடுறதுக்கு வரச் சொல்லிட்டு, நீ டி.வி.யில் உட்கார்ந்திட்டியா?

பாண்டு: நான் பார்த்ததுக்கூட விளையாட்டு சம்பந்தமான நிகழ்ச்சிதான்பா.

வாண்டு: அப்படி என்ன விளையாட்டு நிகழ்ச்சி?

பாண்டு: ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு நாள் வருதாம். அதைப் பத்திய ஒரு நிகழ்ச்சிதான்.

வாண்டு: ஓ... தேசிய விளையாட்டு நாள் வருதா? அதைப் பத்தி என்ன சொன்னாங்க?

பாண்டு: தேசிய விளையாட்டு நாள் ஏன் கொண்டாடுறோம்னோ சொன்னாங்கப்பா? இந்தியாவுல தலைச்சிறந்த ஹாக்கி வீரராக இருந்தவர் தியான் சந்த். அவரோட பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ம் தேதியைத்தான் தேசிய விளையாட்டு நாளா கொண்டாடுறோம்னு சொன்னாங்க. 2012-ல் இருந்துதான் இந்தத் தினத்தை இந்தியாவுல கொண்டாட ஆரம்பிச்சிருக்காங்க.

வாண்டு: ஒரு தினம் கொண்டாடுறாங்கன்னா, அதுக்கு ஒரு காரணம் இருக்கணுமே. தேசிய விளையாட்டு தினம் கொண்டாட என்ன காரணமா?

பாண்டு: பொதுவா எல்லாத் தினங்களுமே அதுசம்பந்தமா விழிப்புணர்வு ஏற்படுத்ததான் கொண்டாடுறாங்க. தேசிய விளையாட்டு தினம்கூட அதுக்காகத்தான் கொண்டாடடுறாங்க. விளையாடுறதனால விளையாட்டுத் திறன் மட்டும் வளர்றதில்லை. ஆரோக்கியமும் வளருமில்லையா? அதை ஊக்குவிக்கிறதுக்குத்தான் இந்த நாளை இந்தியாவுல கொண்டாடுறாங்க.

வாண்டு: தேசிய விளையாட்டு நாளன்னைக்கு என்ன பண்ணுவாங்களாம்?

பாண்டு: தேசிய விளையாட்டு நாள்லதான் விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் கொடுக்குறாங்கப்பா. விளையாட்டுகள்ல சாதனை படைச்ச வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்குத் துரோணாச்சாரியார் விருதுன்னு பல விருதுகளை நம்ம குடியரசுத் தலைவர் கொடுப்பாரு. அதுவும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளை ஊக்குவிக்கிறதுக்காகத்தான்.

வாண்டு: நாமத்தான் எப்பவுமே விளையாட்டுன்னு கதின்னு இருப்போம். விளையாட்டு தினத்தன்னைக்குக் கொஞ்சம் கூடுதலா விளையாடிடுவோம்.

பாண்டு: ம்… விளையாடிடுவோம்.

வாண்டு: அப்புறம், முட்டை வடிவத்துல ஒரு டாக்ஸியைப் பிரான்சுல அறிமுகப்படுத்தியிருப்பதை டி.வி.யில பார்த்தியாப்பா? பார்க்கவே வேடிக்கையா இருந்துச்சு.

பாண்டு: பார்த்தேனே. அதைப் பத்தி நான் சொல்றேன். நம்ம ஊரு மாதிரி பிரான்சுல டிராபிக் ஜாம் ரொம்ப கிடையாதுப்பா. இருந்தாலும் டிராபிக் இல்லாமல் தண்ணியில மிதந்து போறதுக்காக இந்த முட்டை டாக்ஸியை அறிமுகப்படுத்தியிருக்காங்க.

வாண்டு: டிராபிக்கைக் குறைக்க அறிமுகப்படுத்தி யிருக்காங்களா? ரொம்ப நல்ல விஷயம்தான்.

பாண்டு: பிரான்ஸ்ல ரைன் நதியிலத்தான் இந்த முட்டை வடிவ டாக்ஸியை அறிமுகப்படுத்தியிருக்காங்க. நீருக்குள்ள மிதந்து கிட்டே வேகமாகப் போகும். மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்துல போகுமாம். தண்ணி உள்ளே வராத அளவுக்கு இதை முட்டை மாதிரியும் ஹெலிகாப்டர் போலவும் வடிவமைச்சிருக்காங்க. இதுல 5 பேர் போகலாமாம். இந்த முட்டை டாக்ஸியில போக நம்மள மாதிரிச் சின்னப் பசங்க நிறைய ஆர்வம் காட்டுறாங்களாம்.

வாண்டு: இந்த விஷயத்தைப் படித்த நமக்கே அது மேலே அவ்ளோ ஆசை வருது. நேரா பார்த்தா சின்னப்பசங்களுக்கு ஆர்வம் வராதா?

பாண்டு: ம்… சரிப்பா, நான் வந்ததே லேட்டு. இதுல வேறப் பேசிக்கிட்டு இருக்கோம். வா.. விளையாடுவோம்.

வாண்டு: ஆமா, ஓடு...ஓடு...

.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x