

பாரா மெடிக்கல் பி.எஸ்.சி. ரேடியாலாஜி அண்டு இமேஜிங் டெக்னாலஜி படிப்பில் மூன்று ஆண்டு பட்டப் படிப்பும், ஆறு மாதம் இன்டன்ஷிப்பும் கட்டாயம். இது சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று அரசுக் கல்லூரிகளில் உள்ளது. தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் படிக்கலாம்.
அரசுக் கல்லூரிகளில் பாரா மெடிக்கல் கவுன்சலிங் மூலம் சேர்க்கை நடக்கிறது. தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்புவோர் இதற்குத் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
மனிதனை உச்சி முதல் உள்ளங்கால் வரை பரிசோதனை செய்ய நவீன மருத்துவக் கருவிகள் ஏராளமாக வந்துவிட்டன. அவற்றைப் பற்றிய படிப்பு இது. இத்துறை மேன்மேலும் வளர்ந்து வருவதால் இதை முடிப்பவர்களுக்கு பெரும் வரவேற்பு காத்திருக்கிறது. சுய தொழிலில் விருப்பம் உள்ளவர்கள் ஸ்கேன் நிலையம் அமைக்கலாம்.
பி.எஸ்.சி. ரேடியோ டெக்னாலஜி தெரபிக்கு மூன்று ஆண்டு பட்டப் படிப்புடன் ஆறு மாதம் இன்டன்ஷிப் கட்டாயம். சென்னை மருத்துவக் கல்லூரியில் மட்டுமே இப்பாடப் பிரிவு உள்ளது. ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.1200 மட்டுமே. தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் படிக்க ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். புற்றுநோயாளிகளுக்கு ரேடியோ தெரபி அளிப்பது தொடர்பான பட்டப்படிப்பு இது. புற்றுநோய் சிறப்பு மருத்துவமனைகள் பெருகி வருவதால், இதைப் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு தாராளமாகக் கிடைக்கும்.
பேச்சுலர் ஆஃப் ஆக்குபேஷனல் தெரபிக்கு நான்கு ஆண்டு பட்டப் படிப்புடன் ஆறு மாதம் இன்டன்ஷிப் கட்டாயம். இந்த பட்டப் படிப்பு அரசுக் கல்லூரிகளில் இல்லை. தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.28 ஆயிரம் வரை செலவாகிறது. மூளை மற்றும் உடல் திறன் குறைபாடு உள்ளவர்களைப் பராமரித்து, அவர்களது செயல் மற்றும் சிந்தனைத் திறனை மேம்படுத்துதல் தொடர்பான பட்டப் படிப்பு இது.
பி.எஸ்.சி., ஆப்தோமெட்ரி நான்கு ஆண்டு பட்டப் படிப்பு. கண் மருத்துவர்களுக்கு உதவியாளராக பணிபுரியலாம். கண் கண்ணாடி கடை வைக்க விரும்புவோரும் படிக்கலாம். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் சில பிரபல தனியார் கண் மருத்துவமனை நிறுவனங்களில் இப்படிப்பு உள்ளது. கண் கண்ணாடி துறை வளர்ச்சி அடைந்து வருவதால் இப்படிப்பை முடித்தவர்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பு நிச்சயம்.