Last Updated : 07 Feb, 2017 10:40 AM

 

Published : 07 Feb 2017 10:40 AM
Last Updated : 07 Feb 2017 10:40 AM

பள்ளிக்கூடங்களில் கற்றது என்ன?

பள்ளிக்கூட அளவில் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படும் பாடங்களை, அவர்கள் எந்த அளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய வழி காணப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017-18 பட்ஜெட் உரையின்போது குறிப்பிட்டிருக்கிறார். இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு நடவடிக்கை. ஆனால், இதை அரசு எப்படிச் செய்யப் போகிறது என்று அறிய கல்வித்துறை சார்ந்தவர்கள் ஆவலாக இருக்கின்றனர். இத்திட்டம் மத்திய அரசின் ஆதரவில் நடைபெறும் பள்ளிகளுக்கானது.

இடை நிற்றல் இல்லாமல் பள்ளிக்கல்வி அளிப்பது இப்போது வழக்கமாகி வருகிறது. எட்டாவது வகுப்புவரை அல்லது பத்தாவது வகுப்புவரை ஆண்டுத் தேர்வுக்குப் பிறகு மாணவர்களை அதே வகுப்பில் நிறுத்தாமல் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற்றதாக அனுப்பி வைக்கின்றனர். உயர்நிலை வகுப்புவரையிலாவது அனைவரும் படிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே இது மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் பல மாநிலங்களில் மாணவர்களின் கல்வித் திறன் குறைவாக இருப்பது அவர்களை ஆய்வு செய்யும்போது தெரிகிறது.

தீர்வு காண புதிய கண்டுபிடிப்புகள்!

2016-17 நிதியாண்டின்போது கல்வித்துறைக்கு மத்திய அரசு ரூ.72,934 கோடி ஒதுக்கியது. 2017-18 நிதியாண்டில் இது ரூ.79,686 கோடியாக உயர்த்தப்படுகிறது. இதில் ரூ.46,356 கோடி பள்ளிக் கல்வித் துறைக்கும் எழுத்தறிவு இயக்கத்துக்குமானதாகும். உயர்நிலைக் கல்விக்கு ரூ.33,329 கோடி ஒதுக்கப்படுகிறது.

“ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கூடங் களில் மாணவர்கள் பெறும் கல்வியின் தன்மை பற்றி ஆய்வு செய்யப்படும். அறிவியல் பாடங்களுக்கு முக்கியத் துவம் தரப்படும். உள்ளூரில் அல்லது மாநிலத்தில் கிடைக்கும் திறனைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் புத்தாக்கங்கள் ஊக்குவிக்கப்படும். நாட்டின் பின்தங்கிய பகுதிகளில், உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க தனி நிதியம் உருவாக்கப்படும்.

அனைவருக்கும் கல்வி கிடைக்கவும் பாலின சமத்துவம் நிலவவும், மனிதவள தரத்தில் முன்னேற்றம் காணவும் அரசு துணை நிற்கும். தகவல் தொழில்நுட்ப உதவியுடன் கற்றலில் மாற்றம் காண உதவப்படும். கல்வியில் பின் தங்கியவை என்று அடையாளம் காணப் பட்ட 3,479 வட்டாரங்களில் கவனம் செலுத்தப்படும்” என்று நிதியமைச்சர் ஜேட்லி பட்ஜெட் உரையில் கூறினார்.

“கல்வியின் எல்லா பரிமாணங்களிலும் தரத்தைக் கூட்டுவதுதான் அரசின் நோக்கம். கற்றதன் பலனை அறிவதும் ஆசிரியக் கல்வியில் சீர்திருத்தமும் முக்கியமான அம்சங்கள் என்று நாங்கள் ஏற்கெனவே தீர்மானித்திருக்கிறோம்” என்று மனித ஆற்றல் வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பிறகு நிருபர்களிடம் பேசுகையில் இதை விவரித்தார்.

கல்விச் செலவு வெறும் கணக்கா?

ஆனால், கல்வி நிபுணர்கள் இது எப்படி சாத்தியம் என்று ஐயப்படுகின்றனர். மாணவர்கள் என்ன படித்துத் தெரிந்துகொண்டார்கள் என்பது ‘முடிவில்’ கவனம் செலுத்துவதுதானே தவிர, ‘வழிமுறையில்’ அக்கறை காட்டுவதல்ல. கல்விக்காகும் செலவுகள் என்பது வெறும் கணக்குகள்தான் என்கிறார் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வி நிபுணர் சவ்மன் பட்டாசார்ஜி. உயர் நிலைக் கல்வியில் கண்டுபிடிப்பு என்று எதைக் கூறுகிறார்கள் என்று புரிந்துகொள்வது கடினம் என்றும் கூறுகிறார். கல்விக்கான ஒதுக்கீட்டைப் பார்க்கும்போது 10 சதவீதம் அதிகரித்துவிட்டதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

“வீட்டுச் சூழலில் படிப்புக்குத் தடையாக இருக்கும் அம்சங்கள் நீக்கப்பட்டாலே கல்வித் தரம் கூடும். பள்ளியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை மாணவர்கள். அவர்களுடைய வீட்டுக் கலாசாரத்துக்கும் கல்வி நிலையக் கலாசாரத்துக்கும் நிறைய வேறுபாடுகள். வீடுகளில் குழந்தைகளின் உணவுக்கும், நோயாளியாக இருக்கும் பட்சத்தில் மருத்துவத்துக்கும்தான் முதல் கவனம் செலுத்துவார்கள். இதே மாணவர்கள் நவோதய வித்யாலயங்கள் போன்ற உறைவிடப் பள்ளிக்கூடங்களில் சேர்ந்தால் அவர்களுடைய இவ்விரு பிரச்சினை களையும் பள்ளி நிர்வாகமே கவனித்துக் கொண்டுவிடும்” என்று சுட்டிக்காட்டுகிறார் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியரும் பள்ளிக் கல்வித் துறை நிபுணருமான அரவிந்த் மிஸ்ரா.

தொழில் கல்வி, வேலை

பள்ளிக் கல்வி, தொழில் பயிற்சிக் கல்வி (ஐ.டி.ஐ.) ஆகியவை முடித்த இளைஞர்களின் கல்வி வீணாகாமலும் அவர்கள் உடனடியாக வேலைவாய்ப்பைப் பெறவும் ரூ.6,200 கோடி மதிப்பில் 2 திட்டங்களை அறிவித்துள்ளார் நிதியமைச்சர் ஜேட்லி. வாழ்வியல் திறன் ஊக்குவிப்புக்காக, தொழில் திறனை வளர்த்துக் கொள்ளத் தேவைப்படும் கல்வியறிவைப்பெறவும் ரூ.4,000 கோடியில் முதல் திட்டம் அமல்படுத்தப்படும். அடுத்ததாக, பெற்ற திறனை வளப்படுத்தவும் தொழிற்சாலைகளுக்கேற்ற மதிப்பு கூட்டிய பயிற்சியைப் பெற ரூ.2,200 கோடி செலவில் அடுத்த கட்டப் பயிற்சி அளிக்கப்படும் என்றார் ஜேட்லி. இதற்காக, ‘பிரதான் மந்திரி கௌஷல் கேந்திரம்’ என்ற தொழில்திறன் பயிற்சி மையங்கள் நாட்டின் 600 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று 2017-18 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘சங்கல்ப்’ என்னும் தொழில்திறன் பயிற்சி திட்டத்துக்கு ரூ.4,000 கோடி ஒதுக்கப் படுகிறது. வேலைவாய்ப்பு சந்தையில் உடனடியாக வேலையில் அமர்த்திக் கொள்வதற்கு ஏற்ற தொழில் திறன் பயிற்சி 3.5 கோடி இளைஞர்களுக்கு அளிக்கப்படவிருக்கிறது. இதற்கு அடுத்த கட்டமாக 2017-18-ல் ரூ.2,200 கோடி செலவில், தொழில் பயிற்சி நிறுவனங்களில் (ஐ.டி.ஐ.) பயிலும் மாணவர்கள் உடனடியாக வேலையில் சேருவதற்கேற்ற பயிற்சியைப் பெற தனிக் கவனம் செலுத்தப்படும். அத்துடன் தொழில் நிறுவனங்களுடன் கூட்டாக கட்டாயத் தொழில் பழகும் பயிற்சி திட்டமும் வலுப்படுத்தப்படும் என்று ஜேட்லி கூறியுள்ளார்.

3 முக்கிய அறிவிப்புகள்

சில இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களையும் இந்திய மேலாண்மைக் கழகங்களையும் தொடங்க மத்திய அரசு உத்தேசித்திருக்கிறது. இதற்காகக் கடந்த ஆண்டைவிட கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக நிறுவனமான எய்ம்ஸ்-ஐ குஜராத்திலும் ஜார்க்கண்டிலும் புதிதாகத் தொடங்கவிருக்கிறது. அத்துடன் 3 முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

1. பல்கலைக்கழக நிதி நல்கை ஆணையம் திருத்தியமைக்கப்படும்.

2. உயர் கல்விக்கூடங்களில் மாணவர்களைச் சேர்க்க தேசிய அளவில் பொதுத் தேர்வு நடத்த சுயேச்சையான சொந்த வருவாயில் செயல்படும் முகமை ஏற்படுத்தப்படும்.

3. பள்ளிக்கூட மாணவர்கள் பள்ளியில் கற்றுக்கொண்டதை சோதித்து அறிய அமைப்பு உருவாக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x