

மத்திய அரசின் சமூகப் பாதுகாப்பு திட்டங்களில் ஒன்று தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டம் (Employees provident Fund). ஒரு நிறுவனத்தில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றினால் அந்த ஊழியர்களுக்கு இ.பி.எஃப் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இ.பி.எஃப் திட்டத்தை நிறுவனங்கள் சரியாக பின்பற்றுகின்றனவா? தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் பி.எஃப் பங்களிப்புத் தொகை நிறுவனங்களால் ஒழுங்காக செலுத்தப்படுகிறதா? என்பதை எல்லாம் ஆய்வு செய்வதற்காகவும், தொழிலாளர்களுக்கு பி.எஃப் பணப் பயன்கள் கிடைப்பதில் எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமலாக்க அதிகாரிகள் (Enforcement Officer) பணியில் உள்ளனர்.
தகுதி அடிப்படை
அமலாக்க அதிகாரிகள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யூ.பி.எஸ்.சி) போட்டித்தேர்வு மூலமாக நேரடியாகவும் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதற்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது 30-க்குள் இருக்க வேண்டியது அவசியம். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
என்ன கேட்பார்கள்?
இந்த ஆண்டு இபிஎஃப் அமலாக்க அதிகாரி பணியில் 257 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யூ.பி.எஸ்.சி வெளியிட்டிருக்கிறது. இதற்கு ஜுன் மாதம் 24-ம் தேதிக்குள் ஆன்லைனில் (>www.upsconline.nic.in) விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் பணிக்கு தேர்வுசெய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு அப்ஜெக்டிவ் முறையில் அமைந்திருக்கும். இதில், ஆங்கிலம், இந்திய விடுதலைப் போராட்டம், அண்மைக்கால நிகழ்வுகள் மற்றும் தேசிய அளவிலான முக்கிய பிரச்சினைகள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பொருளாதாரம், பொதுக் கணக்கு நடைமுறைகள், தொழில் உறவுகள் மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்கள், அறிவியல், கணினிப் பயன்பாடு, ரீசனிங், கணிதம், சமூகப் பாதுகாப்பு ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
எழுத்துத்தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். கூடுதல் விவரங்களை யுபிஎஸ்சி இணையதளத்தில் (>www.upsc.gov.in) விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். நேரடியாக அமலாக்க அதிகாரிப் பணிக்கு தேர்வுசெய்யப்படுபவர்கள் பணியில் இருந்துகொண்டே துறைத்தேர்வுகள் எழுதி படிப்படியாகப் பதவி உயர்வும் பெறலாம்.