Published : 30 Aug 2016 09:59 AM
Last Updated : 30 Aug 2016 09:59 AM

உண்மையைத் தேடிய ஆசிரியர்

செப்டம்பர் 5: ஆசிரியர் தினம் | சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்

பேச்சாளர், எழுத்தாளர், தத்துவ அறிஞர், குடியரசுத் தலைவர், நிர்வாகி என்ற பன்முகத் தன்மைகளைத் தாண்டி ஆசிரியர்க்கெல்லாம் ஆசிரியர் என்று மதிக்கப்படுபவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.

“உண்மையாக வாழ்தல் - எளிமையாக வாழ்தல் - களங்கமற்று இருத்தல் - உள்ளங்கனிந்திருத்தல் - மகிழ்வுடனிருத்தல் - கவலையையும் அபாயத்தையும் எதிர்த்து வாழ்தல் - வாழ்க்கையை நேசித்தல் - இறப்புக்கு அஞ்சாதிருத்தல் - அழகுக்காக உழைத்தல் - இறப்பின் துயர்களால் சூழப்படாதிருத்தல் - உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு இவரைப் போன்று வாழ்ந்தவர்களும் இல்லை. வாழக் கற்றுத் தந்தவர்களும் இல்லை” என்று மகாத்மா காந்தி இவரைப் பற்றிக் கூறினார்.

கல்வியையும் அறிவையும் ஞானத்தையும் வெவ்வேறு படிநிலைகளில் விளங்கவைத்த பெருமை ராதாகிருஷ்ணனுக்கு உண்டு. சிறிய அளவில் கடைப்பிடிக்கப்படும் மவுனத்துக்குக் கூட அறிவை அடுத்தகட்ட ஞானத்தை நோக்கி நகர்த்தும் வல்லமை உண்டு என்பதை அவர் வலியுறுத்தினார்.

உண்மையின் தேடல் ஒருபுறம், சமூக மேன்மையை நாடுதல் மறுபுறம் எனக் கல்விக்கு இரண்டு தன்மைகள் இருக்க வேண்டும். மனிதனின் ஆன்மிக ஆற்றலைச் செழுமைப்படுத்தும் பணியையும், தன்னம்பிக்கையுடன் கூடிய ஒத்திசைவையும் கல்வி வழங்கவேண்டும் என்றார்.

சர்வதேச மேடையில் இந்திய ஆசிரியர்

1908-ல் எம்.ஏ. படிப்புக்காக ராதாகிருஷ்ணன் சமர்ப்பித்த ‘தி எதிக்ஸ் ஆஃப் தி வேதாந்தா அண்ட் இட்ஸ் மெட்டாஃபிஸிக்கல் பிரீசபோஸிஷன்ஸ்' (‘The ethics of the Vedanta and its metaphysical presuppositions’) என்கிற ஆய்வேடு அவரது முதல் நூலாக வெளியானது. 1911-ல் சென்னை மாநிலக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் ஆனார். அவர் இந்தியத் தத்துவ வகுப்பெடுக்கும் முறையால் ஈர்க்கப்பட்டுப் பிற கல்லூரி மாணவர்களும் மாநிலக் கல்லூரிக்கு வந்து அவருடைய உரையை ஆர்வத்தோடு கேட்பார்கள்.

1918 முதல் 1920 வரை மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1920-ல் கல்கத்தா பல்கலைக் கழகத்துக்குப் பணியாற்றப் புறப்பட்டபோது அவர் அமர்ந்திருந்த குதிரை ரதத்தை அவருடைய மாணவர்களே பிரியத்துடன் இழுத்துச் சென்றனர்.

1927-ல் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்திய அவர் 1931-ல் அதன் துணைவேந்தரானார். 1936 முதல் 1938 வரையிலான மூன்று ஆண்டுகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கீழ்த்திசைச் சமயங்கள் பிரிவில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1939-ல் வாரணாசிப் பல்கலைக்கழகத் துணைவேந்தரானார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கும் துணைவேந்தராக இருந்துள்ளார்.

கல்விக்கும் தேசத்துக்கும் வழிகாட்டி

ஆசிரியரின் மகத்துவத்தை இந்தியச் சமூகம் உணரவைத்தவர் அவர். சமஸ்கிருத வாக்கியங்கள் விரவப் பெற்ற அவருடைய ஆங்கிலச் சொற்பொழிவுகள் கேட்பவரை ஈர்க்கும் காந்தத் தன்மை வாய்ந்தவை. ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அவர் ஆற்றிய உரையான ‘உலக நாகரிகத்தை வளர்த்ததில் தத்துவத்தின் பங்கு' ,லண்டன் - மான்செஸ்டர் பல்கலைக்கழகங்களில் ஆற்றிய உரைகள் ‘ஓர் இலக்கியவாதியின் பார்வையில் வாழ்க்கை' (An idealist view of life) என்ற தலைப்பில் நூல்களாக வெளிவந்தன.

வேறுபாடுகளைத் திறந்த மனப்பான்மையோடு ஏற்றுக்கொள்வதே மக்களாட்சியின் மாண்பாகக் கருதிய அவர், ஜவஹர்லால் நேருவின் கோரிக்கையை ஏற்று இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரானார். இதன் மூலம் அரசியல் சாராத, தத்துவப் பேராசிரியர் ஒருவர் முதன்முறையாக இப்பதவியில் அமர்ந்தார்.

தனது 21 வயதில் தத்துவப் பிரிவில் ஆசிரியப் பணியைச் சென்னை மாநிலக் கல்லூரியில் தொடங்கிய ராதாகிருஷ்ணனின் ஆசிரியப் பணியானது 40 ஆண்டுகள் நீண்டது. 1909 முதல் 1948 வரை மாணவர்களிடம் சர்வதேச அளவில் உரையாடிக் கொண்டே இருந்தவர்.

இன்று சர்வ பள்ளிகளிலும் பெருமளவு மறக்கப்பட்ட ஆளுமையான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் என்கிற அந்த அறிஞரின் பங்களிப்புகளும் செயல்பாடுகளும் இன்றைய இளம்தலைமுறையினருக்கு ஒரு மெய்யான சொர்க்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x