Last Updated : 07 Sep, 2016 11:54 AM

 

Published : 07 Sep 2016 11:54 AM
Last Updated : 07 Sep 2016 11:54 AM

நம்ப முடிகிறதா?- இயற்கை அதிசயங்கள்!

உலகில் இயற்கையாக நடைபெறும் அதிசயங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை பார்ப்போமா?

நமீபியாவில் நமீப் என்ற பெயரில் பாலைவனம் உள்ளது. இந்தப் பாலைவனம் எப்போதும் மூடுபனியால் சூழ்ந்தே கிடக்கிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் வீசும் காற்றிலிருந்து ஈரப்பதம் உருவாகி இப்படி மூடுபனி ஏற்படுகிறதாம்.

l உலகில் அமைதியான எரிமலைகளும்கூட உண்டு. இவை பெரிய சத்தத்துடன் வெடித்து ரகளையெல்லாம் செய்யாது. உள்ளே பொங்கும் காலங்களில் அமைதியாக எரிமலைக் குழம்பை வழியவிட்டுக்கொண்டேயிருக்கும். ஹவாய் பகுதியிலிருக்கும் ‘ஷீல்டு வால்கனோஸ்’ எரிமலை இந்த ரகத்தைச் சேர்ந்ததுதான்.

l ஒரு ஆண்டு முழுவதும் அவ்வப்போது வீசும் மின்னல், பூமியின் மேல் 10 மில்லியன் டன் நைட்ரஜனைத் தள்ளிவிடுகிறது.

l மாலையில் அஸ்தமிக்கும் சூரியன் பூமியில் நமக்கு சிவப்பாகத் தெரிகிறது அல்லவா? அண்டார்டிகாவில் அது பச்சையாகத் தெரியும்.

l விமானத்தில் பயணம் செய்யும்போது வானவில்லை முழு வட்டமாகப் பார்க்க முடியும்.

l நிலத்தைவிட நீர் மெதுவாகவே வெப்பமடையும். குளிர்வதும் அப்படித்தான். அதனாலேயே கோடைக் காலத்தில் நீர், நிலத்தை விடக் குளிர்ச்சியாக இருக்கிறது. குளிர்காலத்தில் நிலத்தைவிட நீர் வெப்பமாக இருக்கிறது.

l அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் படுவேகத்தில் ஏகப்பட்ட நீரை கலக்கிறது. அதனால், அமேசான் நதியின் முகத்துவாரத்திலிருந்து கடலினுள் நூறு மைல்வரை இருக்கும் நீர், நல்ல நீர்தானாம். உப்பு நீரல்ல. அதைக் குடிக்கவும் செய்யலாம்.

l உலர்ந்த காற்றைவிட ஈரப்பதமுள்ள காற்றில்தான் உஷ்ணம் அதிக நேரம் நிலைத்திருக்கும். இதனால்தான் இரவுகளில் வெப்பநாடுகள் மிதமான சூட்டோடு இருக்கின்றன. சுட்டெரிக்கும் பாலைவனங்களில் குளிராகவும் இருக்கின்றன.

l அதிர்ச்சியைத் தாங்குவதில் இரும்புக்கு இணையானது மூங்கில். ஹிரோஷிமாவில் அமெரிக்கா அணுகுண்டுத் தாக்குதலை நடத்திவிட்டுச் சென்ற பிறகு, அந்தப் பகுதியின் நடுவில் மூங்கில் புதர்கள் மட்டும் அப்படியே இருந்தன. வேறு எந்தப் புல் பூண்டும் இருக்கவில்லை.

l பசிபிக் கடல் பகுதியில் ஹவாய் தீவில் உள்ள மவுன்ட் அவாய் என்ற இடத்தில் உலகிலேயே எப்போதும் மழை பெய்துகொண்டேயிருக்கும். இங்கு ஆண்டின் ஆறு நாட்கள் மட்டுமே மழை இல்லாமல் இருக்குமாம்.

l ஜெர்மனியில் ஹெம்லஸ் டார்பர் என்ற ஏரி உள்ளது. இந்த ஏரி மற்ற ஏரிகளிலிருந்து மாறுபட்டது. இதன் மேல்புறத்தில் உள்ள நீர் தேனாக இனிக்குமாம். உள்பக்கம் உள்ள நீரோ வேம்பாகக் கசக்குமாம்.

புல் என்றாலே பச்சை வண்ணத்தில் இருக்கும் அல்லவா? அமெரிக்காவில் கெண்டகி மாநிலத்தில் புல்லின் நிறம் பச்சையும் நீலமும் கலந்ததாக இருக்கும். மண் நீல நிறத்தில் இருப்பதால் புல்லும் நீல நிறமாகவே வளர்கிறது.



நார்வே நாட்டில் ஏப்ரல் மாத கடைசியிலிருந்து ஆகஸ்ட் மாதம்வரை முழு இருளே இங்கு கிடையாது. சூரியன் மறையும் நேரத்தில் காணப்படும் மங்கலான வெளிச்சம் போல எப்போதும் இருக்கும்! நார்வேயின் வடக்குப் பகுதிகளில் கோடையில் இரண்டு மாத காலத்துக்கு சூரியன் முழுவதும் அஸ்தமனம் ஆவதே கிடையாது.

காற்றுதான் சூறாவளியாக வீசும் இல்லையா? ஆனால் நெருப்புகூட சூறாவளி போல சீறியிருக்கிறது தெரியுமா? பிரான்ஸில் மார்ட்டினிக்யூ எனும் தீவு உள்ளது. இந்தத் தீவில் பீலி என்னும் எரிமலை 1902-ம் ஆண்டு வெடித்துச் சிதறியது. அப்போது அந்த மலையில் இருந்து நெருப்புக் கோளம் பயங்கரமாக சூறாவளி காற்று போல சீறிப் பாய்ந்ததாம். அதன் காரணமாக செயின்ட் பியரி என்ற நகரமே எரிந்து பொசுங்கிபோனது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x