

சூரிய ஆற்றலுக்கு உலக வங்கி உதவி
சூரிய மின்சக்தியை உருவாக்கும் இந்தியாவின் திட்டத்துக்காக, உலக வங்கி ஒரு பில்லியன் டாலர் நிதியுதவியை கடந்த ஜூன் 30-ம் தேதி அறிவித்துள்ளது. இத்திட்டத்துக்காக அதிகபட்சமாக நிதியுதவி பெறும் நாடாக இந்தியா திகழ்கிறது.
சூரிய ஆற்றல் பூங்காக்களுக்கான உள்கட்டுமானம், புதுமையான சூரிய மின்சக்தி உற்பத்தித் தொழில்நுட்பங்கள், சோலார் ரூஃப்டாப் டெக்னாலஜி மற்றும் சூரிய மின் ஆற்றல் கடத்தும் நிலையங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். உலக வங்கிக் குழுமத்தின் தலைவரான ஜிம் யாங் கிம் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்த போது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அப்பயணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் தொழில்நுட்பங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாகப் பேசினார். சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி என்ற பெயரில் இந்தியாவின் தலைமையில் 121 நாடுகள் இணைந்திருக்கும் கூட்டணியின் நிதியுதவிப் பங்காளியாகவும் இருக்கும் ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார்.
ஏவுகணைத் தொழில்நுட்ப ஏற்றுமதியில் இந்தியா
ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் 35-வது நாடாக இந்தியா கடந்த ஜூன் 27-ல் இணைந்தது. இந்த அமைப்பின் உறுப்பினராக மாறியதன் மூலம் அதிதொழில்நுட்ப ஏவுகணைத் தொழில்நுட்பங்களை இந்தியாவும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அணு ஆற்றல் தொழில்நுட்பத்தை வர்த்தகம் செய்வதற்கான விதிமுறைகளை வகுக்கும் நியூக்ளியர் சப்ளையர்ஸ் க்ரூப் (என்எஸ்ஜி)-ல் இந்தியா இணைவதற்கு சென்ற வாரம் சீனா தடைவிதித்தது.
இந்நிலையில் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றியாக இந்த இணைவு பார்க்கப்படுகிறது. ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பு (எம்டிசிஆர்), ஜி-7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றால் 1987-ல் உருவாக்கப்பட்டது.
எதிர்காலத்தைக் கணித்த அறிவியலாளர் மரணம்
21-ம் நூற்றாண்டின் சமூக, பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்கள் எப்படி யிருக்கும் என்பதை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்து உலகம் முழுவதும் வாசகர்களை உலுக்கிய புத்தகம் ‘ஃப்யூச்சர் ஷாக்’. இதன் ஆசிரியர் ஆல்வின் டாஃப்ளர் ஜூன் 30 அன்று காலமானார். அவருக்கு வயது 87. கணிப்பொறி மற்றும் இணையத் தொழில்நுட்பத்தின் வருகையைக் கணித்த எதிர்காலவியலாளர் அவர்.
1980-ல் அவர் எழுதிய ‘தி தேர்ட் வேவ்’ நூலில் மின்னஞ்சல்கள், ஆன்லைன் சேட் ரூம்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களையும் அவர் கணித்திருக்கிறார். சோவியத் அதிபராக இருந்த மிக்கேல் கோர்பசேவ், சீனப் பிரதமர் ஷாவ் சியாங் போன்ற தலைவர்கள் அவரது எதிர்காலவியல் கணிப்பைக் கண்டு வியந்து நேரில் பார்த்து ஆலோசனை களைக் கோரியுள்ளனர்.
கணம்தோறும் நம்மை ஆக்கிரமிக்கும் தகவல் யுகத்தை ‘இன்ஃபர்மேஷன் ஓவர்லோட்’ என்று கணித்தவர் ஆல்வின் டாஃப்ளர்.
நாடக ஆளுமையின் மறைவு
கேரள நாடக உலகில் செவ்வியல் மரபையும், நாட்டுப்புறக் கூறுகளையும் வெற்றி கரமாக இணைத்த முன்னோடியான காவலம் நாராயண பணிக்கர் ஜூன் 26 அன்று காலமானார். அவருக்கு வயது 88. இந்திய காவிய மரபின் அடிப்படையில் புதிய நாடகப் பயிற்சியை உருவாக்கிய இவர் கவிஞர் மற்றும் பாடலாசிரியரும் கூட. இவர் காளிதாசன் மற்றும் பாசன் ஆகியோரின் சமஸ்கிருத காவியங்களை மொழி பெயர்த்து நாடகங்களாக்கியுள்ளார்.
அவருடைய சாகுந்தலம், கர்ணபாரம் மற்றும் விக்ரமோர்வசீயம் போன்ற சமஸ்கிருத நாடகங்கள் புகழ்பெற்றவை. கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தைச் சேர்ந்த காவலம் ஊரைச் சேர்ந்த இவர் சோபனம் என்னும் நாடகக் குழுவின் நிறுவனர் மற்றும் இயக்குனர். காவலம் நாராயணப் பணிக்கரின் கலைப் பங்களிப்புகளுக்காக பத்மபூஷண் கவுரவத்தை மத்திய அரசு அளித்துள்ளது.
ஏழாவது ஊதியக் குழு அறிக்கைக்கு ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு, ஜூன் 29 அன்று, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பலன்பெறுவார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை சம்பளம் மறுநிர்ணயம் செய்யப்படும்.
நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தன் அறிக்கையை மத்திய அரசிடம் கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. இதன்படி மத்திய அரசு ஊழியர்கள் 23.5 சதவீத ஊதிய உயர்வைப் பெறுவார்கள். இதனால் அரசுக்குக் கூடுதலாக 1.02 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும்.
இதன் மூலம் தொடக்கநிலைப் பணியாளர்களின் அடிப்படை ஊதியம் 7 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரமாக அதிகரிக்கும். உயர்மட்ட அமைச்சரவைச் செயலர்களின் மாத அடிப்படை ஊதியம் 90 ஆயிரத்திலிருந்து 2.5 லட்சம் ரூபாயாக உயரும். எனினும் ஊதியக் குழுவின் அறிக்கையில் திருப்தி இல்லை என்று சொல்லி மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.