Published : 14 Dec 2013 12:57 PM
Last Updated : 14 Dec 2013 12:57 PM

ஆன்லைன் தேர்வு நடத்தி 8 மாதம் ஆகியும் முடிவை வெளியிடாத டி.என்.பி.எஸ்.சி.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர், செயல் அதிகாரி பதவிகளுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தி 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் டி.என்.பி.எஸ்.சி. இன்னும் முடிவை வெளியிடாததால் தேர்வு எழுதிய பி.எல். பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்துகின்ற போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள் அதிகபட்சம் 6 மாதங்களுக்குள் வெளியிடப்படுவது வழக்கம். இந்த நிலையில், தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடும் வகையில் ஆன்லைன் தேர்வு முறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியது.

குறைந்த பதவிகள் உள்ள தேர்வுகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்ப தாரர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் ஆன்லைன் தேர்வை நடத்தி முடிவை விரைவாக வெளியிடலாம் என்று திட்டமிடப்பட்டது. பொதுவாக, தொழில்நுட்ப பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வருவதால் அத்தகைய தேர்வுகளை முழுவதும் ஆன்லைனில் நடத்திடவும் டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்தது.

அந்த வகையில், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் 4 உதவி ஆணையர் பணியிடங்களையும், 8 செயல் அதிகாரி (கிரேடு-1) பணியிடங்களையும் நிரப்புவதற்காக கடந்த மார்ச் 30, 31-ம் தேதிகளில் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பி.எல். பட்டப் படிப்பு ஆகும். காலியிடங்கள் குறைவாக இருந்ததாலும், பி.எல். கல்வித்தகுதி என்றதாலும் ஏறத்தாழ 8 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். பொது அறிவு, இந்து சமயம், சட்டம் ஆகிய 3 தேர்வுகளுமே முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே நடந்தது.

ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டதால் எப்படியும் ஒரு மாதத்துக்குள் முடிவை வெளியிட்டுவிடுவார்கள் என்று தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்தனர். 8 மாதங்கள் கடந்தனவே தவிர தேர்வு முடிவு வந்தபாடில்லை. யு.பி.எஸ்.சி. நடத்தும் ஆன்லைன் தேர்வுகளுக்கான முடிவு அதிகபட்சம் 3 மாதங்களுக்குள்ளாகவே வெளியிடப்பட்டுவிடுகின்றன. இத்தனைக்கும் யு.பி.எஸ்.சி. தேர்வுகள் தேசிய அளவில் நடத்தப்படுபவை.

ஆனால், ஒரு மாநிலத்துக்குள் 5 ஆயிரம் பேருக்கு அல்லது 10 ஆயிரம் பேருக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தி 8 மாதங்களுக்கு மேலாகியும் முடிவுகள் வெளியிடப்படாதது தேர்வு எழுதியவர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எல்.ஐ.சி. நிறுவனம் உதவி நிர்வாக அதிகாரி பணிக்காக நடத்திய ஆன்லைன் தேர்வு முடிவை இரண்டே மாதத்தில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு விரைவாக இல்லாவிட்டாலும் 3 மாதங்களுக்குள் வெளியிட உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தேர்வர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x