Published : 24 Jan 2014 00:00 am

Updated : 06 Jun 2017 18:42 pm

 

Published : 24 Jan 2014 12:00 AM
Last Updated : 06 Jun 2017 06:42 PM

நிஜமும் நிழலும்: வழிவிட மறுக்கும் வரி விலக்கு!

பொங்கல் பண்டிகை கோலிவுட்டுக்குக் கசப்பைக் கொடுத்திருக்கிறது. அஜித் நடிப்பில் ‘வீரம்’, விஜய் நடிப்பில் ‘ஜில்லா’ ஆகிய இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் வசூலை வாரிக் குவித்திருக்கின்றன. ஆனால் இந்தப் படங்களுக்குத் தமிழக அரசின் கேளிக்கை வரிவிலக்கு கொடுக்கப்படவில்லை. இதில் திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும்தான் மிகவும் கசந்துபோனார்கள் என்று கூறப்படுகிறது.

ஒரு படத்துக்குத் தரப்படும் கேளிக்கை வரிவிலக்கில் தயாரிப்பாளருக்குக் கிடைக்கும் சலுகையைக் காட்டிலும், இவர்களே அதிகமாகப் பயன்பெற்றுவந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இனி பெரிய பட்ஜெட் படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதில்லை என்று தமிழக அரசு முடிவெடுத்துவிட்டதன் விளைவாகவே அஜித், விஜய் படங்களுக்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இதே அளவுகோல்தான் ரஜினியின் கோச்சடையானுக்கும் என்ற தகவலும் கிடைக்கிறது.


“20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஒரு படத்துக்கு வரிவிலக்கு கொடுக்கிறது என்றால், அந்தப் பலனை மக்கள்தான் அனுபவித்து வந்தார்கள். வரிவிலக்கு கொடுக்கப்பட்ட படத்தின் டிக்கெட்டுகள் பாதி விலைக்கு கவுண்டரில் விற்கப்படும். நானெல்லாம் சிறுவனாக இருக்கும்போது ‘தண்ணீர் தண்ணீர்’ படத்தை இப்படி வரிவிலக்கில்தான் போய் பார்த்தேன். இன்று 15 கோடி 30 கோடி என்று சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் நடிக்கும் சினிமாக்களுக்கு எதற்காக அரசு வரிவிலக்கு தரவேண்டும்? அவர்களது படங்கள் என்ன சமூக சீர்திருத்தக் காவியமா? அரசு மறைமுகமாக எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை சரிதான்” என்கிறார் இளம் திரைப்பட இயக்குநரான கண்ணன்.

யாருக்கு பாதிப்பு?

“அரசு வரிவிலக்கால் முன்னணி நடிகர்களின் சம்பளமும், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட ஒரு படத்தின் முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளமும் எக்குத்தப்பாக உயர்ந்ததே தவிர, அதில் எங்களுக்கு கிடைக்கும் பலன் என்பது வெறும் 2 சதவீதம் மட்டும்தான். பெரிய படங்களுக்குத் தரப்படும் வரிவிலக்கு நிறுத்தப்படும்போது, அத்தகைய படங்களின் தயாரிப்பாளர்கள், இனி பெரிய ஹீரோக்களுக்குத் தன்னிச்சையாகக் கொட்டிக்கொடுப்பதைக் கட்டுக்குள் கொண்டுவர வாய்ப்பு இருக்கிறது. இதனால் அரசு பெரிய படங்களுக்கான கேளிக்கை வரிவிலக்கை அடியோடு நிறுத்தினால் சினிமா ஆரோக்கியமாக இருக்கும்” என்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் திருச்சி தர்.

தமிழக அரசின் இந்த அதிரடியான முடிவுக்குப் பின்னால் சின்னப் படங்கள் கேளிக்கை வரிவிலக்கு பெறுவதில் இருந்த கடந்த காலப் போராட்டம் முக்கிய காரணமாகி இருக்கிறது. தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்குக் கேளிக்கை வரிவிலக்குக் கொடுப்பது என்ற முறையை கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்தார்கள். ஆட்சி மாறி அ.தி.மு.க. வந்ததும் வரிவிலக்குக்கான காரணிகள் மாற்றி அமைக்கப்பட்டன. தமிழ் என்பதோடு, வன்முறை, பண்பாடு, முதலீட்டு அளவு முதலான காரணங்களும் சேர்க்கப்பட்டன. இதன் பிறகு ஒவ்வொரு படமும் அந்த வரிவிலக்கைப் பெற படாத பாடு படவேண்டியிருந்தது உண்மை என்கிறார்கள் வரிவிலக்குப் பெற முட்டி மோதிய பல சின்ன பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள்.

அடக்கப்பட்ட அங்குசம்

லஞ்ச ஊழலுக்கு எதிரான கதையம்சத்துடன் எடுக்கப்பட்ட ‘அங்குசம்’ என்ற சின்ன பட்ஜெட் படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு பெற சம்பந்தப்பட்ட துறையிலும், அதன் அமைச்சர் பொறுப்பு வகித்தவர் சார்பாகவும் 5 லட்சம் லஞ்சம் கேட்டார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டது. “லஞ்சத்துக்கு எதிராகப் படமெடுத்துவிட்டு நான் எப்படி லஞ்சம் கொடுக்க முடியும்?” எனப் பேட்டியளித்திருந்தார் அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான மனுகண்ணன். இவரது பேட்டி அரசுத் தரப்புக்குக் கோபத்தை ஏற்படுத்த, இவரது படத்துக்கு முன் தேதியிட்டு வரிவிலக்குக் கொடுத்ததோடு, அவர்மீது வழக்கும் தொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அரசே கோபம் கொண்டுவிட்டது என்பதால் இவரது படத்தை வாங்கவோ திரையிடவோ திரையரங்க உரிமையாளர்கள் அஞ்சுகிறார்களாம்.

மனுகண்ணன் விவகாரத்தில் சர்ச்சை வெடித்துக் கிளம்பியதால் ஒரு நல்லதும் நடந்திருக்கிறது என்கிறார்கள். தற்போது வரிவிலக்குக் கோரும் சிறு முதலீட்டுப் படங்களுக்கு வரிவிலக்கு எளிதாகக் கிடைத்துவிடுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பெரிய முதலீட்டுப் படங்கள் வரிவிலக்குப் பெறுவது கணிசமாகக் குறைந்துவிட்டது. பெரிய முதலீட்டில் படங்கள் எடுத்துவரும் உதயநிதி ஸ்டாலின் தனது படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படாததை எதிர்த்து அரசு மீது பல வழக்குகளைத் தொடுத்திருக்கிறார். இம்முறை தனது ‘கதிர் வேலனின் காதல்’ படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறாராம். ஆனால் இவர் எடுப்பது பெரிய பட்ஜெட் படம் என்று அரசு காரணம் சொல்லிவிடக்கூடும். இதே காரணம்தான் ‘ஜில்லா’, ‘வீரம்’ போன்ற படங்களையும் பாதித்தது என்பதால் உதயநிதி அரசு தனக்கு எதிராகப் பாரபட்சம் காட்டுகிறது என்று சொல்லிவிட முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

ஆங்கிலச் சொல்லால் அவதி

ஆனால் குறைந்த பட்ஜெட் படமெடுத்தாலும் தலைப்பில் ஆங்கிலச் சொற்கள் இடம்பெற்றதால் வரிவிலக்குப் பெற முடியாமல் பல தயாரிப்பாளர்கள் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார்கள். சேரன் இயக்கியிருக்கும் ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’, விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ரம்மி,’ கஞ்சா கருப்பு தயாரித்திருக்கும் ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இந்தப் படங்களின் தலைப்பில் ஆங்கிலம் கலந்திருப்பதைக் காரணம் காட்டியே வரிவிலக்கு மறுக்கப்படுகிறது. இந்தச் சிக்கலைப் பார்த்து, பலரும் மடமடவென்று படத்தின் தலைப்புகளை மாற்றிவருகிறார்கள். வரிவிலக்கு விஷயத்தில் மேலும் பல விதிகள் திருத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் சிறு முதலீட்டுப் படங்களின் தயாரிப்பாளர்கள்.

“தலைப்பு தமிழில் இருக்க வேண்டும் என்பது வரிவிலக்குக்கான முக்கியமான காரணி என்பது தெரிந்திருந்தும் ஆங்கிலச் சொற்களைக் கலந்து தலைப்பு வைப்பவர்களுக்கு வரிவிலக்கு விதிகள் பற்றிக் குறை சொல்லும் உரிமை இல்லை” என்கிறார் எழுத்தாளரும் திரைப்பட விமர்சகருமான தேவிபாரதி. இந்த விதிமுறையுடன் பண்பாட்டுக் காரணிகளையும் சேர்த்ததுதான் நிலைமையைச் சிக்கலாக்குகிறது என்று அவர் கருதுகிறார். பண்பாடு என்பதைத் தெளிவாக வரையறுக்க முடியாது. இதை அவரவர் விருப்பத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் இதைத்தான் எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கருதுகிறார். பெரிய முதலீட்டுப் படங்கள் வரிவிலக்குக் கோருவதில் பொருளில்லை என்று கருதும் அவர், “சிறு முதலீட்டுப் படங்களுக்கான வரிவிலக்கு விதிகளை எளிமைப்படுத்துவதே நம் நியாயமான கோரிக்கையாக இருக்க முடியும்” என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.

பல்வேறு காரணிகளால் திரைத்துறை தள்ளாடிவரும் சமயத்தில் வரிவிலக்கு என்பது பெரிதும் உதவக்கூடியது என்பது வெளிப்படை. இதற்கான காரணிகளை மறுவரையறை செய்து இதிலுள்ள குழப்பங்களையும் சர்ச்சைகளையும் போக்க வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு.ரம்மிஇயக்குநர் கண்ணன்ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கைவீரம்ஜில்லாகோச்சடையான்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

15-days-15-posts

15 நாள்கள் 15 பதிவுகள்!

இணைப்பிதழ்கள்

More From this Author

x