ஜெயமுண்டு பயமில்லை : 28-03-14
ஒரு வகுப்பில் ஆசிரியர், ‘‘பசுமாட்டை எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்?’’ என்று கேட்டார். எல்லோரும் கையைத் தூக்கினர். ‘‘சரி, நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். பசுவின் காதுகள் அதன் கொம்புக்கு முன்னால் உள்ளதா, பின்னால் இருக்கிறதா? அதன் கண்களும் காதுகளும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறதா அல்லது கண்கள் மேலே இருக்கிறதா? தவறாகச் சொன்னால் அபராதம்’’ என்றார். உயர்த்திய கைகள் எல்லாம் ஒவ்வொன்றாக இறங்கிவிட்டன. ஒருவன் மட்டும் கையைத் தூக்கி விடையை சரியாகச் சொன்னான். அவன் சரியாகச் சொன்னதற்குக் காரணம் அவன் பலமுறை பசு மாடு படம் வரைந்திருக்கிறான்.
நாம் ஓவியர்களிடமிருந்து ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் சில விஷயங்களை மிக நுணுக்கமாகக் கவனிப்பார்கள். பொதுவாகவே கலைஞர்களிடம் கூர்ந்த கவனிப்பு அதிகம் இருந்தாலும் ஓவியர்களிடம் ஒருபடி அதிகமாகவே இருக்கும்.
நாம் ஒரு வீட்டுக்குப் போய்வருகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அந்த வீட்டைப் பற்றி விவரிக்கச் சொன்னால் மேலோட்டமாகச் சொல்வோம். சுவர்களின் நிறம் கேட்டால் சிலருக்கு நினைவிருக்காது. ஜன்னல்கள் எங்கிருந்தன என்றால் பலர் கவனித்திருக்க மாட்டார்கள். ஜன்னல்களில் 2 கதவுகளா, 4 கதவுகளா என்றால் ஓடிவிடுவார்கள். பலருக்குத் தங்கள் வீட்டைப் பற்றிக் கேட்டாலே தெரியாது.
ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் கைதேர்ந்த திருடர்கள் புதிதாகத் தொழிலில் சேருபவர்களுக்குப் பயிற்சிகள் அளிப்பார்கள். அதன்படி அவர்கள் புதிதாக ஹோட்டல் போன்ற ஒரு இடத்துக்குச் சென்றுவர வேண்டும். பின்னர் அங்கிருந்த சேர், டேபிள் முக்கியமாகக் கல்லாப் பெட்டி போன்றவற்றை குருவிடம் துல்லியமாக விவரிக்க வேண்டும்.
கொள்ளையர்கள் பலருக்கும் இதுபோன்ற திறமை இருப்பதைக் காவலர்களிடம் கேட்டால் சொல்வார்கள். அதற்காகக் கொள்ளையடிப்பதைச் சொல்லித்தரும் படிப்புகள் எங்கிருக்கின்றன என்று விசாரிக்காதீர்கள். ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன். இதுபோன்ற காட்சிப்புலன் நினைவுத்திறன் (Visual memory) சிலருக்கு அபாரமாக இருக்கும்.
ஸ்டீஃபன் வில்ட்ஷைர் (Stephen Wiltshire) என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த கட்டிடக் கலை நிபுணர். அவர் ஒருமுறை ஒரு நகரத்தின் மீது ஹெலிகாப்டரில் பறந்து சென்றால் பின்னர் அந்த நகரக் காட்சிகளை மிகத் துல்லியமாக வரைவார். அவரது படங்கள் லட்சக்கணக்கான டாலர்களுக்கு ஏலம் போகின்றன. இத்தனைக்கும், குழந்தையாக இருக்கும்போது அவருக்குச் சரியாகப் பேச்சுகூட வராமல் ஆட்டிசம் கோளாறால் சிறிது பாதிக்கப்பட்டிருந்தார்.
நம் நினைவில் இருக்கும் முக்கால்வாசி விஷயங்கள் நம் கண்கள் மூலமே நம்மிடம் வந்தடைகின்றன. அப்படிப்பட்ட புலனான காட்சிப்புலன் நினைவுத்திறனை மேம்படுத்துவது மிக அவசியம். அது பற்றிப் பின்னர் பார்ப்போம்.
-மீண்டும் நாளை...
