Last Updated : 13 Jan, 2014 07:17 PM

 

Published : 13 Jan 2014 07:17 PM
Last Updated : 13 Jan 2014 07:17 PM

மாறிவரும் வாழ்வியலில் மறையாத பொங்கல் சீர்வரிசை

இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் வாழ்வியலிலும், பொங்கல் சீர்வரிசை வழங்கும் முறை கிராமப்புறங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தமிழர்களின் ஒவ்வொரு விழா, சடங்குக்குப் பின்னணியிலும் பாரம்பரியமும், வரலாறும் இணைந்து கிடக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் பொங்கல் பண்டிகை. அக்காலத்தில் உழவுக்கு உதவி செய்த இயற்கை, காளைகள் என அனைவருக்கும் நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் இந்நாளே தமிழர்களின் முதன்மையான திருநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. புத்தாடை அணிந்து, பொங்கல் சமைத்து, செங்கரும்பு சுவைத்து, உற்றார் உறவினரோடு கூடி மகிழும் இந்தப் பண்டிகையின் ஓர் அங்கம்தான் சீர்வரிசை.

தமிழர்களின் பாரம்பரியம்

திருமணமாகிச் சென்ற பெண்கள், கணவரின் வீட்டில் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடத் தேவையான அத்தனை பொருள்களையும் தாய் வீட்டில் இருந்து சீர்வரிசையாக அனுப்பி வைக்கும் வழக்கம் தமிழரிடத்தில் பாரம்பரியமாக இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சில குடும்பங்களில் ஆண்டுதோறும் சீர் கொடுப்பர். சில குடும்பங்களில் திருமணமான முதல் ஆண்டு கொண்டாடும் தலைப்பொங்கலுக்கு மட்டும் சீர் வரிசை கொடுப்பர்.

என்னென்ன பொருள்கள்

அந்தக் காலத்தில் கட்டுக்கட்டாய் கரும்புகள், மூட்டை மூட்டையாய் பச்சரிசி, வெல்லம், உப்பு, மஞ்சள், காய்கறிகள், வாழைத்தார், மண்பானைகள், புத்தாடைகள் மற்றும் பொங்கல் வைப்பதற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் தலைச்சுமையாய் நடந்து சென்றோ, குதிரை மற்றும் மாட்டு வண்டிகளில் கொண்டு சென்றோ மகளின் வீட்டில் பெற்றோர் அளித்து வந்தனர். குழந்தை பிறந்தால் பயன்படுமே என்பதற்காக கறவை மாடுகளையும் சிலர் சீராகக் கொடுப்பர். அதைப் பெற்றுக் கொள்ளும் மகள், இந்தப் பொருள்களை தனது குடும்பத்துக்கு மட்டும் வைத்துக் கொள்ளாமல் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பர்.

பணமாக மாறிய சீர்வரிசை

ஆனால் கால மாற்றத்தின் விளைவால் இன்று அந்த நிலை மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. ‘இவ்வளவு பொருள்களையும் கொண்டு வந்தால் எங்கு வைப்பது, யாரிடம் கொடுப்பது. அதற்குப் பதிலாக சீர் கொடுக்க ஆகும் செலவை அப்படியே பணமாகக் கொடுத்து விடுங்கள். தேவையானவற்றை நாங்களே வாங்கிக் கொள்கிறோம்’ என மகளோ, மருமகன் குடும்பத்தினரோ கேட்டுப் பெறும் நிலை நகர்ப்புறங்களில் உருவாகிவிட்டது. இதனால் உறவுகளுடனான நெருக்கமும் குறைந்து விடுகிறது.

மணம் வீசும் கிராமங்கள்

ஆனால் கிராமப்புறங்களில் மண்பானைக்குப் பதில் பித்தளை பாத்திரங்கள், மரப் பொருள்களுக்கு பதில் பிளாஸ்டிக் மற்றும் இரும்புப் பொருள்கள் போன்ற சிற்சில மாற்றங்களுடன் இந்த வழக்கம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆண்டுக்கான பொங்கல் சீர் கொடுக்கும் முறை மதுரை மாவட்ட கிராமங்களில் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சோழவந்தான் அருகேயுள்ள விளத்தான் கிராமத்தில் வசிக்கும் மகள் கலாவுக்கு கொடுப்பதற்காக, ஆட்டோவில் சீர்வரிசை கொண்டு சென்ற அவரது தாயான காமாட்சிபுரத்தைச் சேர்ந்த ராணியிடம் பேசினோம். ‘காலங்காலமா இருக்கிற வழக்கப்படி என் மகளுக்கு சீர் கொடுக்கப் போறோம்.

பொங்கல் வைச்சு, சாப்பிடுற வரைக்கும் என்னென்ன பொருள்கள் தேவையோ அது எல்லாத்தையும் கொடுக்கிறோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x