Last Updated : 27 Sep, 2016 11:00 AM

Published : 27 Sep 2016 11:00 AM
Last Updated : 27 Sep 2016 11:00 AM

ஆங்கிலம் அறிவோமே - 128: ஆங்கிலத்தில் இடி இடிக்கலாமா?

சில வார்த்தைகள் ஓரே அர்த்தம் தருபவையாகத் தோன்றலாம். உதாரணமாக, NOVICE STRANGER ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் அ டிநாதம் ஒன்று என்றாலும் முக்கிய வேறுபாடும் உண்டு.

Strange என்றால் அறிமுகம் ஆகாத அல்லது பரிச்சயமற்ற அல்லது வினோதமான என்று அர்த்தம். Stranger என்றால் புதியவர்; அறிமுகம் ஆகாதவர்.

Novice என்ற வார்த்தையை ‘குறிப்பிட்ட தொழி லுக்குப் புதியவர்’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம்.



Preposition இல்லையென்றால்கூட வாக்கியங்களின் அர்த்தங்கள் புரிந்துவிடும் என்று நினைப்பதாக ஒரு வாசகர் குறிப்பிட்டார்.

அது எப்படி? I come Mumbai என்றால் மும்பையிலிருந்து வருகிறீர்களா? அல்லது மும்பைக்கு வருகிறீர்களா? From அல்லது to போட்டால்தானே விளக்கம் கிடைக்கும்?

இந்த இடத்தில் முன்பு ஒரு வாசகர் கேட்டது நினைவுக்கு வருகிறது. He is angry with me என்றாலும், he is angry because of me என்றாலும் அர்த்தம் ஒன்றுதானா என்று கேட்டிருந்தார். இல்லை. He is angry with me என்றால் என்னிடம் அவர் கோபமாக இருக்கிறார் என்று அர்த்தம். He is angry because of me என்றால் என்னால் அவருக்குக் கோபம் என்று அர்த்தம். நான் ஏதோ செய்ததன் காரணமாக அவருக்கு வேறு யாருடனோகூடக் கோபம் வந்திருக்கலாம்.

Prepositionகளின் அவசியத்தை உணர வேண்டுமானால் கீழே உள்ள வாக்கியங்களுக்கிடையே இருக்கும் வேறுபாடுகளை உணருங்கள்.

A ball is on the table.

A ball is behind the table.

A ball is over the table.

A ball is near the table.

A ball is instead of the table.



“Impulse மற்றும் instinct ஆகிய வார்த்தைகளுக்கிடையே என்ன வித்தியாசம்?” என்று கேட்கிறார் ஒரு வாசகர்.

Instinct என்பது இயல்பாக உங்களுக்குத் தோன்றக்கூடிய ஒன்று. Intution என்பதை இதனுடன் இணை சேர்க்க முடியும். நீங்கள் காரோட்டிச் செல்கிறீர்கள். இரு பாதைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தப் பாதையில் சென்றால் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் என்று வேறெந்த ஆதாரமும் இல்லாமல் நீங்கள் முடிவெடுத்தால் அது instinct அதாவது உள்ளுணர்வு.

Impulse என்றால் உங்களுக்குப் பிடித்த ஒன்றைச் சட்டென்று நீங்கள் செய்ய முடிவெடுப்பது. கடைக்குப் போகிறீர்கள். வாங்க நினைத்த பொருள்களை வாங்கி விட்டீர்கள். ஆனால் கண்ணில் படும் வேறு சில பொருள்களையும் - அவை உங்களுக்குத் தேவையோ, இல்லையோ வாங்கினால் அது impulse, அதாவது உந்துதல்.

Impulse என்பது திடீரெனத் தோன்றிச் செயல்படும் அவசரச் செயல்.

I had a sudden impulse to tell the woman travelling with me in the bus that I loved her.



கத்தரிக்கோல், சீப்பு ஆகியவற்றின் பெயர்களைச் சொன்னால் எந்தத் தொழிலாளி உங்கள் நினைவுக்கு வருவார்? Hair dresser.

தீயணைப்பு வாகனம் என்றால்? Fire Fighter.

இப்போது கீழே உள்ள பொருட்களைக் குறிப்பிட்டால் உங்கள் மனதில் தோன்றும் தொழிலாளி யார் என்பதைக் குறிப்பிடுங்கள்.

(1) மாவு, சர்க்கரை, மைக்ரோஅ வன்

(2) அட்டை, கோந்து

(3) ஸ்க் ரூடிரைவர், ரென்ச் (wrench), க்ரீஸ் கன்ஸ் (Grease guns)

(4) ரம்பம், உளி, ஸ்க் ரூக்கள், சுத்தியல்

(5) டெலஸ்கோப்

Croupier என்பது யார் தெரியுமா? சூதாட்டக் கிடங்குகளில் பல மேஜை விளையாட்டுகள் இருக்கும். அந்த விளையாட்டுகளை ஒழுங்கமைப்பவர்களைத்தான் இப்படிக் குறிப்பிடுவார்கள்.

மேலே கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் இதோ. (பொருத்தமான மாற்று பதில்களும் இருக்கக் கூடும்).

(1) Baker

(2) Book Binder

(3) Car Mechanic

(4) Carpenter

(5) Astronomer



“I bought a pen. It writes well’’ எனும்போது ஏற்கெனவே குறிப்பிட்ட பேனா என்பதால் அதை it என்ற pronoun ஆல் குறிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மழையைப் பற்றி ஏற்கனவே குறிப்பிடாதபோதும் it rains என்கிறார்களே இது சரியா?”

மேலே உள்ளது ஒரு வாசகரின் சந்தேகம். It rains என்று குறிப்பிடக் கூடாது என்றால் வேறெப்படிக் குறிப்பிடலாம்? The rain rains எனலாம். கொஞ்சம் விநோதமாக இருக்கிறது இல்லையா?

இப்படி noun, verb ஆகிய இரண்டாகவும் ஒரே வார்த்தை அடுத்தடுத்து ப் பயன்படுத்தப்பட்டால் நாம் it என்று அந்த noun-ஐக் குறிக்கிறோம். The thunder thunders என்பதற்குப் பதிலாக, it thunders என்பதும் இப்படித்தான்.



“Hackneyed’’ என்றால் என்ன?

மிகமிக அதிகமாகப் பயன்பட்டுவிட்ட என்று அர்த்தம். Overused. Hackneyed, Cliche வார்த்தைகளும் வாக்கியங்களும் சலிப்பை அளிக்கக் கூடியவை.

சில எடுத்துக்காட்டுகள். Hackneyed வாக்கியங்களில் பாதி அளிக்கப்பட்டிருக்கிறது. மீதியை நீங்கள் உடனடியாகக் கண்டுபிடித்து விடுவீர்கள்.

# அரசியலில் நிரந்தர நண்பருமில்லை …

# நான் போகாத கோவில் இல்லே …

# உங்களால் நான் ….

# பழம் நழுவி …



Taken back என்றாலும் taken aback என்றாலும் ஒரே பொருளா? என்ற கேள்விக்கு இல்லவே இல்லை என்பதுதான் பதில்.

ஏதோ ஒன்று உங்களைத் திடுக்கிட வைக்கிறது என்றால், you are taken aback எனலாம்.

கடந்த கால நிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் மூழ்கிப்போய்விட்டீர்கள் என்றால் you are taken back to the past.

ஒரு வாசகரின் கேள்வி இது:

“ஒரு நண்பர் என்னிடம் பேசும்போது ‘not intensive’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அதாவது மிக ஆழமாக அல்ல என்ற பொருளில் இதைப் பயன்படுத்தினார். உடனே ‘extensive’ என்ற வார்த்தை எனக்கு நினைவுக்கு வந்தது. இந்த வார்த்தையை ‘மிகவும் விரிவாக’ என்ற பொருளில்தான் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டு:- Extensive search. இப்போது எனக்கு extensive என்பதும் intensive என்பதும் எதிர்ச்சொற்கள் இல்லையா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது” என்கிறார்.

Extensive என்றால் பெரிய அளவில் என்று பொருள் கொள்ளலாம். It is an extensive garden. There is an extensive amount of proof.

Intensive என்றால் குறுகிய கால கட்டத்தில் ஒன்றின்மீது மிக அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது என்று அர்த்தம். I joined an intensive English course. Following information of a likely terrorist attack, the baggage of all passengers was subjected to intensive search.

விவசாயத்தைப் பொறுத்தவரை extensive farming என்றால் குறைவான மூலதனம் மற்றும் விவசாயிகளைக் கொண்டு பெரிய பரப்பளவில் நடைபெறுகிற சுமாரான அளவிலான விவசாயம். Intensive farming என்றால் குறைந்த நிலப்பரப்பில் ரசாயன மற்றும் தொழில்நுட்ப உதவியோடு செய்யப்படும் அதிக உற்பத்தி கொண்ட விவசாயம். எனவே வாசகர் not intensive என்பதற்கு அளித்த பொருள் (ஆழமல்லாத) என்பது சரிதான். Extensive என்றால் மிகவும் detail ஆன என்பது அர்த்தமல்ல. மிகவும் பரவலான என்றுதான் பொருள். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் intensive probe நடத்தினார் என்றால் கிடைத்த சாட்சியங்களை மிகவும் கவனத்துடன் ஆழமாக ஆராய்ந்தார் என்று அர்த்தம். அவர் நடத்தியது extensive probe என்றால் மிகப் பரவலாகக் குற்றம் தொடர்பான பல பகுதிகளிலும் உள்ள சாட்சியங்களை விசாரிக்கிறார் என்று பொருள்.

சிப்ஸ்

# Hoard என்றால் பதுக்குதல். Horde என்றால் என்ன?

அது கூட்டத்தைக் குறிக்கும் ஒரு சொல். A horde of cheerful cricket fans.

# In and out தெரியும் என்றால் என்ன அர்த்தம்?

அது Ins and outs. அதாவது எல்லாத் தகவல்களும். As an eye witness he knows the ins and outs of the accident.

# “Please stop the bus. I want to get down here” என்று கூறுவது சரியா என்று யோசனையாக இருக்கிறது.

மிகவும் யோசித்தால் அடுத்தடுத்த bus stopகளைக் கோட்டைவிட வேண்டியதுதான்! இப்போது, ஆங்கிலத்துக்கு வருவோம். I want to get off from the bus என்பது சரியான பயன்பாடு.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x