Last Updated : 11 Sep, 2018 12:33 PM

 

Published : 11 Sep 2018 12:33 PM
Last Updated : 11 Sep 2018 12:33 PM

துணைக் கல்வி: பாடத்திட்டம் இல்லை; கல்வி உண்டு

பொதுவாக இந்தியாவைப் போலவே பாடம், எழுத்துத் தேர்வு என்றே இயங்கும் அமெரிக்கக் கல்வி முறைக்கு, ‘ஐயோவா பிக்’ திட்டம் புதிய ஊக்கத்தை உருவாக்கியுள்ளது. வளரிளம் பருவத்து மாணவர்கள் தாங்கள் வாழும் சமூகத்துக்கும் நகரத்துக்கும் பங்களிப்பு செய்யும் களப்பணிக் கல்வி முறை இது.

2012-ம் ஆண்டில் செடார் ரேபிட்ஸ் நகரவாசிகள் சிலர் பேசிக்கொண்டி ருந்தபோது, “ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும்?” என்ற கேள்வியைத் தங்களுக்குள் எழுப்பிக்கொண்டனர். இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டடைவதற்காக, பில்லி மேடிசன் புராஜக்ட் என்ற திட்டம் ஒன்றைத் தொடங்கினர்.

இன்னும் நிறைய மேம்படுத்தலாம்

உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்கள், தலைவர்கள் சேர்ந்த 65 பெரியவர்கள் ஒரு நாள் முழுவதும் பள்ளிக்குச் சென்று தங்கள் நேரத்தைச் செலவிட்டனர். பாடப் புத்தகங்கள், ஆசிரியர் உரைகள், மதிய நேரம், பள்ளி மணி, பாத்ரூம் செல்ல அனுமதி என எல்லா விதிமுறைகளையும் அவர்கள் பின்பற்றினர். அந்த நாளின் முடிவில் அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. ஒவ்வொரு பங்கேற்பாளரும் சொன்ன பதிலின் சுருக்கம் இதுதான். “இன்னும் நிறைய மேம்படுத்தலாம்”.

அந்த 65 பெரியவர்களும் சேர்ந்து கற்றலை மேலும் அர்த்தமுள்ளதாக்க முடிவு செய்தனர். 2013-ம் ஆண்டின் இறுதியில் ‘ஐயோவா பிக்’ என்ற திட்டம் 12 மாணவர்களுடன் தொடங்கியது. தற்போது இதில் 2,017 மாணவர்கள் உள்ளனர்.

கைகோத்த உள்ளூர் அமைப்புகள்

பள்ளியோ பாடத்திட்டமோ இதில் கிடையாது. இத்திட்டத்தில் இணையும் மாணவர்கள் தங்கள் பள்ளியில் குறைவான நேரத்தைச் செலவிடுவார்கள். அதிக நேரத்தை ‘ஐயோவா பிக்’-க்குச் செலவிடுவார்கள். வர்த்தகம், தொண்டு, அரசுக் கொள்கை சார்ந்த நூறு உள்ளூர் நிறுவனங்கள் மாணவர்களுடன் சேர்ந்து உள்ளூர் பிரச்சினைகளை நேரடியாகத் தீர்க்கும் பாடத்திட்டம் இது.

செடார் ரேபிட்ஸ் நகரத்தில் ஒருவருக்கொருவர் எதிரிகளாகப் பாவித்துக்கொண்ட பள்ளிகளிலிருந்து மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர்.

“மாணவர்கள் சேர்ந்து தங்கள் வேலைத்திட்டத்தை முடிவுசெய்ய வேண்டும். படிப்படியாக அவற்றைப் பிரித்துக் கொள்ள வேண்டும். பணியில் முன்னேற்றத்தைக் காண்பதற்கான கருவிகளை அவர்கள் உருவாக்க வேண்டும். ஒரு வேலையை முடிக்கும் பொறுப்பை அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்” என்கிறார் ‘ஐயோவா பிக்’கின் நிறுவனர்களில் ஒருவரான ட்ராய் மில்லர்.

இத்திட்டத்தின் சார்பில் பயன்பெற்ற பள்ளி மாணவர்கள் 500 பேர் பட்டதாரிகளாக ஆகியுள்ளனர். ‘ஐயோவா பிக்’ திட்டத்தில் அவர்கள் பெற்ற அனுபவம் அவர்களது கல்லூரிச் சேர்க்கைக்கு மிகவும் உதவியுள்ளது. அதில் ஒரு மாணவன் அமெரிக்காவின் கௌரவம் மிக்க ஏர் ஃபோர்ஸ் அகாடமியின் தேர்வுப் பட்டியலில் இருப்பதாக ட்ராய் மில்லர் கூறுகிறார்.

கோடை வேலைகள் எனப்படும் ‘சம்மர் ஜாப்’களில் ஐயோவா பிக் திட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பு தரப்படுகிறது. “இந்த ஆண்டு உயர்நிலைப் பள்ளியில் ஜூனியராக இருக்கும் எங்கள் மாணவருக்கு யுனிவர்சிட்டி ஆஃப் ஐயோவா ஹாஸ்பிடலில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. அவன் 17 இளங்கலைப் பட்டப்படிப்பு படித்தவர்களையும் 13 முதுகலைப் பட்டப்படிப்பு முடித்தவர்களையும் தாண்டி இந்த வேலையைப் பெற்றுள்ளான். எங்கள் திட்ட அனுபவம் இல்லையெனில் அவன் இந்த இன்டர்ன்ஷிப்பை பெற்றிருக்க மாட்டான்” என்கிறார் ட்ராய்.

புதுப்பிக்கப்படும் கற்றல் முறை

இதே திட்டத்தில் பயிற்சிகளைப் பெற்ற ஐசக், நீர்மூழ்கிக் கருவிகளை வடிவமைத்திருக்கிறான். அதோடு தனது பள்ளியில் குழந்தைப் பருவத் துயரங்களால் பாதிக்கப்பட்ட ஜூனியர் மாணவர்களுக்கான பயிற்சிகளை உருவாக்கி இருக்கிறான். ஆளற்ற விமானங்களையும் வடிவமைத்திருக்கிறான். 15 வயதான ஐசக், நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ‘ஐயோவா பிக்’ திட்டத்தின் அடிப்படையில் கோடிங், போட்டோஷாப், இணையதள வடிவமைப்பு, ஆளற்ற விமான வடிவமைப்பைச் சொல்லிக் கொடுக்கிறான். இதன்மூலம் ஓரளவு வருமானத்தையும் பெறுகிறான்.

“ஒரு பயிற்சியாளராக வேலை தருபவர்களின் விருப்பங்களை நான் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான திறன்களை மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அவர்களில் பலர் பெற்றோர் இல்லாதவர்கள். வறுமை, பொருளாதாரம், இனரீதியான பிரச்சினைகள் நிறைய உள்ள இந்தப் பள்ளியில் பயிற்றுவிப்பதற்காக, நிறைய சம்பளம் தரும் பள்ளியை நான் விடவேண்டியிருந்தது.” என்கிறார் கோனலி.

சம்பிரதாயமான வகுப்பறைக் கல்வியில் கற்றல் என்பது எவ்விதப் புதுப்பித்தலுமின்றி எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கும் நிலையில், 'ஐயோவா பிக்' போன்ற பயிற்சிகளால் கற்றல் என்னும் செயல்முறை தினசரி புதுப்பிக்கப்படுகிறது. அத்துடன் தாங்கள் வாழும் சமூகம், இயற்கைச் சூழல், தேவைகளையும் சிறுவயதிலேயே மாணவர்கள் தெரிந்துகொள்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x