Last Updated : 07 Sep, 2018 10:38 AM

 

Published : 07 Sep 2018 10:38 AM
Last Updated : 07 Sep 2018 10:38 AM

தமிழ்நாட்டின் ஷேக்ஸ்பியர்!

சங்கரதாஸ் சுவாமிகள் 151-வது பிறந்த தினம்: செப்டம்பர் 07

காட்சிமொழியால் மேன்மைபெறும் கலை, திரைப்படம். அதற்கு அவசியப்படாத பாடல்களையும் ஆடல்களையும் தமிழ் சினிமா இணைப்பாகப் பெற்றுக்கொண்டது தமிழ்க் கூத்து மரபில் இருந்துதான். நாட்டியம், நாடகம் ஆகிய இரண்டின் கலவையாக நிகழ்த்தப்பட்டது கூத்துக் கலை. 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும் அது திறந்தவெளியில், தெருக்களில் நிகழ்த்தப்பட்டது.

அதனால் ‘தெருக்கூத்து’ என்று அழைக்கப்பட்டது. தெருக்கூத்தில் நிகழ்த்துக் கலைஞர்களாக இருந்தவர்களைக் ‘கூத்தாடிகள்’ என்று சிறுமைப்படுத்திய காலம் ஒன்று இருந்தது. அத்தகைய சிறுமையிலிருந்து மட்டுமல்ல; தெருக்கூத்திலிருந்து நாடகத்தைப் பிரித்தெடுத்து, அதன் வடிவத்தைத் தனிமைப்படுத்தி, அதை அரங்கக் கலையாக மேடைக்கு இடம்பெயர்த்து வளர்த்தெடுத்தவர்தான் தமிழ் நாடகத்தின் ‘தலைமை ஆசிரியர்’ என்று போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள்.

கூத்தில் கதாபாத்திரங்களின் பேச்சுமொழி பாடல்களாகவும் உடல்மொழி நடனமாகவும் இருந்த காலத்தில், தாம் எழுதி அரங்கேற்றிய நாடகங்களில் பாடல்களை இசைப் பாடல்களாக மாற்றியதோடு எளிய உரையாடலையும் போதிய அளவுக்குப் புகுத்தியவர். நடன அசைவுகளுக்கு மாற்றாக தோரணைகள், முகபாவங்களுடன் கூடிய உரையாடுதல் ஆகியவற்றைப் புகுத்தி பார்வையாளர்களுக்குப் புதிய நாடக அனுபவத்தைத் தந்தவர்.

அரங்கமொழியின் தந்தை

சங்கரதாஸ் சுவாமிகள் தனது 24 வயதில் நாடகத் துறைக்குள் வந்தபோது தெருக்கூத்து என்ற நிலையிலிருந்து நாடகம் மாறவில்லை. முன்னோர் வகுத்துத் தந்திருந்த நாடக இலக்கணத்தின் உத்தி மற்றும் அமைப்பு முறைகள் நடிகர்கள் மற்றும் நாடக ஆசிரியர்களால் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக மேடை அமைப்பு, திரைச்சீலை அமைப்பு, காட்சி அமைப்பு சார்ந்து சீர்திருத்தங்கள் தேவைப்பட்டன. அதை உணர்ந்து, மேடை நாடகம் எவ்வாறு இருக்க வேண்டும் என அமைத்துக் காட்டினார். அவ்வகையில் அரங்கமொழியின் வழிகாட்டியாக சங்கரதாஸ் சுவாமிகள் போற்றப்படுகிறார்.

புகழ்பெற்ற நடிகர்களாக இருந்த பலரும் கட்டுப்பாடு ஏதுமின்றிப் பலபொருள் தொனிக்கும் பாடல்களை இட்டுக்கட்டிப் பாடியும் வசனங்களைச் சொந்தமாகப் பேசியும் சொந்தக் கருத்துகளைப் புகுத்தியும் மனம்போன போக்கில் நடித்து கதாபாத்திரத்தின் மாண்புக்குப் பங்கம் ஏற்படுத்தி வந்தனர். இப்படி மீறப்பட்ட நாடக ஒழுங்குகளை முறைப்படுத்த நினைத்த சங்கரதாஸ் சுவாமிகள், பெரிய நடிகர்களோடு இதுபோன்ற சீர்திருத்த முயற்சிகளுக்காக மல்லுக்கட்டுவது வீண் என்று நினைத்தார்.

அதனால் சிறுவர்களுக்குத் தொடக்கம் முதலே நாடகத்தைப் பயிற்றுவித்து, ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக்க அசலான புதிய நாடகக் கலைஞர்களை உருவாக்குவதே தமிழ் நாடகத்தின் எதிர்காலத்துக்கு நலமாக அமையும் என்ற முடிவுக்கு வந்தார். 1918-ம் ஆண்டு ‘மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபை’யை நிறுவி சிறுவர்களுக்கு நாடகக் கலையைப் பயிற்றுவிக்கத் தொடங்கினார். அந்தச் சபையில் உருவான நூற்றுக்கும் அதிகமான கலைஞர்கள்தாம் பின்னாளில் நாடக உலகிலும் திரையுலகிலும் சாதனைகள் பல படைத்தனர். அவர்களில் டி.கே.எஸ். சகோதரர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

உரையாடலை உயர்த்திப் பிடித்தவர்

சிறுவர்களுக்குப் பயிற்சி அளித்து நாடகத்தில் புதிய தலைமுறையை உருவாக்கிய அதேநேரம், தனது சீர்த்திருத்தங்களை மதித்து ஏற்ற நடிகர்களின் வேண்டுகோளை ஏற்று, கொச்சைப் பாடல்கள், வசனங்களைப் பாடி பேசி நடிப்பதிலிருந்து வெளியே வர, அவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் கவிதை நயம் வழிந்தோடும் இசைப் பாடல்களை எழுதித் தந்து அவர்களை மடைமாற்றினார்.

முதலில் உரையாடல்களில் ஒழுங்கு முறையைக் கொண்டுவந்தவர், கட்டுப்பாடில்லாமல் வசனம் பேசும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இசைப் பாடல்கள், உரையாடல், நாடகப் பிரதியின் வடிவத்தைச் சீரமைத்து அதன் நேரத்தை நான்கில் இரண்டு பங்காகச் சுருக்குதல் என மூன்று தளங்களில் சங்கரதாஸ் சுவாமிகளின் பங்களிப்பு இருந்ததால் கூத்து என்ற நிலையிலிருந்து முழுமை நோக்கிப் பயணிக்கும் நிகழ்த்துக் கலை வடிவமாகத் தமிழ் நாடகம் மறுமலர்ச்சி பெற்றது.

தமிழ்த் திரைக்கு உதவிய பிரதிகள்

24-ம் வயதில் கணக்கர் வேலையை விட்டுவிட்டு நாடக உலகுக்கு வந்தவர். 30 ஆண்டுகளே நாடக உலகில் இடையறாது இயங்கினாலும் இவர் நிகழ்த்திச் சென்றிருக்கும் சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி சரித்திரம், வள்ளி திருமணம், அரிச்சந்திர மயான காண்டம், கோவலன் சரித்திரம், இராம ராவண யுத்தம், வீரபாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன், சித்திராங்கி விலாசம், நளதமயந்தி உள்ளிட்ட 60-க்கும் அதிகமான நாடகப் பனுவல் பிரதிகளை அவர் எழுதியிருக்கிறார்.

 தற்போது நம் கைக்குக் கிடைக்கும் சங்கரதாஸ் சுவாமிகளின் 18 நாடகப் பிரதிகளைத் திரட்டி ஒரு தொகுப்பாக அளித்திருக்கிறார் பேராசிரியர் வீ.அரசு. சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகப் பிரதிகள் கச்சிதமான வடிவத்துக்குள் இருந்ததால் அவற்றை அடிப்படையாகக் கொண்டே தொடக்க காலத் தமிழ் சினிமா, பக்தி மற்றும் புராணப் படங்களுக்கான திரைக்கதைகளை எழுதிக்கொண்டது. உதாரணத்துக்கு சுவாமிகளின் ‘சதி அனுசுயா’ நாடகப் பிரதியிலிருந்தே ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘சரஸ்வதி சபதம்’ திரைப்படத்தின் திரைக்கதையில் பயன்படுத்தப்பட்ட கல்வியா, செல்வமா, வீரமா என்ற மையக் கருத்து எடுத்தாளப்பட்டது.

தலைசிறந்த மொழிப் புலமை, எதுகையும் மோனையும் வழிந்தோடியபோதும் பாமர மக்களுக்குப் புரியும் வண்ணம் எளிய சொற்களால் ஆன உரையாடல் மற்றும் இசைப் பாடல் மொழியை உருவாக்கினார். தனது எல்லா நாடகங்களிலும் அறக் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து மக்கள் மத்தியில் நாடகத்துக்கு மரியாதையையும் மேன்மையையும் உருவாக்கிக் காட்டினார்.

மக்கள், கூத்தாடிகள் என மலிவாக எண்ணாமல், கலைஞர்கள் என மதிக்கத் தொடங்கியது சங்கரதாஸின் வருகைக்குப் பின்னர்தான். நாடகக் கலைக்கு மரியாதை கிடைக்கத் தொடங்கியதும் அதை நேசித்து அதில் ஆர்வத்துடன் ஈடுபட சமூகத்தின் பல தரப்பினரும் முன்வந்தனர்.

இதனால் சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவர் கூட்டம் அதிகரித்தது. ஜி.எஸ்.முனுசாமி நாயுடு, சாமிநாத முதலியார், சீனிவாச ஆழ்வார், நடேச பத்தர், எம்.ஆர்.கோவிந்தசாமிப் பிள்ளை, சி.கன்னையா, சி.எஸ்.சாமண்ணா, சுந்தரராவ், சூரிய நாராயண பாகவதர், மதுரை மாரியப்ப சுவாமிகள், எஸ்.ஜி.கிட்டப்பா, ஆர்.வி.மாணிக்கம், தி.க.சண்முகம் சகோதரர்கள், கே.சாரங்கபாணி, ஆர்.பாலசுப்பிரமணியம், பாலாம்பாள், பாலாமணி, அரங்கநாயகி, கோரங்கி மாணிக்கம், டி.டி.தாயம்மாள் ஆகியோர் அவருடைய மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் பலர் பின்னாளில் திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார்கள்.

நடிகர், நாடகாசிரியர், இயக்குநர் என எல்லாத் தளங்களிலும் முழுமையாக இயங்கி, நாடகத்துக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட சங்கரதாஸ் சுவாமிகள் நாடக மூவரில் முதன்மையானவர். ‘தமிழகத்தின் ஷேக்ஸ்பியர்’, நாடக உலகின் இமயமலை’ என என்.எஸ்.கிருஷ்ணனால் புகழப்பட்டவர்.

அவரது நினைவைப் போற்றும் வகையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள கலையரங்கத்துக்கு சங்கரதாஸின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மறைந்த இவருக்கு அங்கே நினைவிடம் எழுப்பட்டு, வீதி ஒன்றுக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

 புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகத் துறை இவரது பெயராலேயே இயங்குகிறது. அதே நேரம், தென்னிந்திய நடிகர் சங்கம் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு தமிழகத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு முன்வைத்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன.

இன்னும் எதுவும் நடந்த பாடில்லை.தெருக்கூத்திலிருந்து நாடகத்தைப் பிரித்தெடுத்து, அதன் வடிவத்தைத் தனிமைப்படுத்தி, அதை அரங்கக் கலையாக மேடைக்கு இடம்பெயர்த்து வளர்த்தெடுத்தவர்தான் தமிழ் நாடகத்தின் ‘தலைமை ஆசிரியர்’ என்று போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x