Last Updated : 18 Sep, 2018 11:46 AM

 

Published : 18 Sep 2018 11:46 AM
Last Updated : 18 Sep 2018 11:46 AM

இணையவழிக் கல்வி: வரலாற்றில் நிலைக்கலாம்

நம் தாத்தாவைப் பற்றியோ பாட்டியைப் பற்றியோ நம் சிறு வயது குறும்புகள் பற்றியோ வீட்டின் மூத்தவர்கள் நம்மிடம் சொல்லும்போது மெய்மறந்து கேட்கிறோம். பள்ளிகளில் வரலாற்று வகுப்புகள் பலருக்கு லயிப்புக்குப் பதில் அலுப்பையே ஏற்படுத்துகின்றன. வீட்டில் கதையாகத் தோன்றும் வரலாறு, பள்ளிகளில் தரவுகளாக மாறுவதே அதற்கான காரணம் என்றும் சொல்லலாம்.

பெருந்தலைவர்களும் முக்கிய நிகழ்வுகளும் போர்களும் மட்டும் வரலாறு அல்ல. சாமானியர்களும் அவர்களின் வாழ்வும் அதில் நிகழ்ந்த சாதாரணச் சம்பவங்களும் அதில் உள்ளடங்கியுள்ளன. கடந்த பல தலைமுறைகளின் வாழ்வே இன்று நாம் படிக்கும் வரலாறு. இன்றைய நமது வாழ்வும் நாளைய வரலாற்றில் அடங்கும். நாம் படிக்கும் எல்லாப் புனைகதைகளுக்கும் அச்சாரம் இந்த வரலாறுதான். நாம் பார்க்கும் எல்லாத் திரைப்படங்களுக்கும் அச்சாரம் இந்த வரலாறுதான்.

வரலாற்றின் சுவாரசியமான அம்சங்கள் எல்லாம் பெரும்பாலும் வாயில் நுழையாத பெயர்களுக்குள்ளும் இடங்களுக்குள்ளும் அலுப்பூட்டும் ஆண்டுகளின் எண்களுக்குள்ளும் ஒளிந்துகொள்கின்றன. மதிப்பெண்களின் பின் ஓடும் நமக்கும் அந்தச் சுவாரசியமான கதைகளைத் தேடிப் படிக்க நேரமும் இல்லை, விருப்பமும் இல்லை.

ஆன்லைனில் இருக்கும் வகுப்புகளோ, வரலாற்றின் சுவாரசியமான பக்கங்களுக்கு ஊடாக அலுப்பூட்டும் தரவுகளை நம்முள் எளிதாகக் கடத்திவிடுகின்றன. அத்தகைய வகுப்புகளில் ஒன்றே https://www.futurelearn.com/courses/categories/history-courses

சலிப்புக்குப் பதில் வியப்பு

இந்த இணைய வகுப்பில் இருக்கும் வரலாறு சம்பந்தமான பாடங்கள் உங்களை வரலாற்று ஆய்வாளராக மாற்றும் அளவுக்குச் செறிவானவை. இதில் உள்ள அனைத்துப் பாடங்களும் ஒரு மாதத்துக்குள் படித்து முடிக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இதில் இருக்கும் எல்லாப் பாடங்களும் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களால் நடத்தப்படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சி பற்றிய வகுப்பில் இருக்கும் பாடங்களும் அதன் உட்கூறுகளும் சலிப்புக்குப் பதில் வியப்பை ஏற்படுத்துவது இதன் கற்பிக்கும் திறனுக்குச் சிறு சான்று.

கட்டுக்கதையில் இருந்து விடுபட

ரோமானியக் குடியரசு பற்றிய வகுப்புகள் சுவாரசியத்தில் பாகுபலிக்குச் சவால்விடும் விதமாக உள்ளன. தொன்மைக்கால 'நலமும் வளமும்' குறித்த வகுப்புகள் நம் முன்னோர்களின் மேன்மையையும் நாம் அதிலிருந்து இன்று எவ்வளவு தூரம் விலகி நிற்கிறோம் என்பதையும் நமக்கு உணர்த்துகின்றன. 

இலக்கியத்தில் நிலவும் நாயக அம்சம் குறித்த அலசல், வரலாறு எவ்வாறு திரைப்படங்கள் மூலமாகவும் இலக்கியங்கள் மூலமாகவும் கடத்தப்படுகின்றன என்ற புரிதலை நமக்கு அளிக்கின்றன.

‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தில், வடிவேலு தன்னை உடல் வலுமிக்கவராகப் படம் வரைந்துவைப்பதும் அதற்கு அவர் சொல்லும் காரணமும் எந்த அளவு உண்மை என்பதை இந்த வகுப்பு நமக்கு உணர்த்துகிறது. ஒரு கப்பலில் 60,000 யானைகளை ஏற்றினார்கள், ஆமையின் ஓட்டைப் படகாகப் பயன்படுத்தினார்கள் என்பது போன்றவற்றை ஒத்த பல புனைவுகளுக்குப் பின் ஒளிந்திருக்கும் மனிதனின் சுயநலமும் நாயக வழிபாடும் இந்த வகுப்பில் அலசி ஆராயப்படுகின்றன.

ஆராய்ச்சியாளர் ஆகலாம்

ஜப்பானியக் கலாச்சாரம், புகழ்பெற்ற கவிஞர்களின் கவிதைகள் குறித்த அலசல், நேற்றைய இன்றைய நாளைய நகரங்கள், கால்பந்தின் வரலாறு, உலகப்போருக்குப் பின் மருத்துவத்தில் ஏற்பட்ட முன்னேற்றம், ரோமானியர்களின் வாழ்க்கை, குடும்ப வரலாற்றை ஆராயும் முறை, இங்கிலாந்தின் வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கிய பல வகுப்புகள் நம்மை வரலாற்றுப் பித்தனாக்கும் வண்ணம் உள்ளன.

வரலாற்றைத் திரிப்பது காலங்காலமாக நடந்துவரும் ஒரு செயல். வரலாறு பல புனைவுகளால் இன்றும் நிரம்பி வழிகிறது. ஒரு தேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளரால்தான் எது உண்மை எது பொய் என்பதைப் பிரித்துப் பார்க்க முடியும். காலந்தோறும் அத்தகைய தேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள்.

தங்கள் ஆராய்ச்சியின் அடிப்படையில் அவற்றைத் தொகுத்து வரலாறாக நமக்கு அவர்கள் வழங்கி வருகிறார்கள். சிறியதும் பெரியதுமாக அவற்றில் இன்றும் பல பிழைகள் உள்ளன. இன்றைய தலைமுறை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தங்களால் இயன்ற மட்டும் அந்தப் பிழைகளை நிவர்த்தி செய்கிறார்கள். இந்த ஆன்லைன் வகுப்புகள் உங்களையும் அத்தகைய ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக மாற்றக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x