Last Updated : 18 Sep, 2018 10:28 AM

 

Published : 18 Sep 2018 10:28 AM
Last Updated : 18 Sep 2018 10:28 AM

ஆங்கிலம் அறிவோமே 231: அவர் பாட, மற்றவர்கள் ஓட...

கேட்டாரே ஒரு கேள்வி

ஆங்கிலேயர் ஆட்சியை ‘காலனி ஆட்சி’ என்கிறோமே. நம் நாட்டிலும் பல காலனிகள் உள்ளனவே. ரயில்வே காலனி, ராணுவ காலனி என்பதுபோல். அப்படியானால் காலனி என்பதன் அர்த்தம் குழப்பமாக இருக்கிறதே.

*************

Synonym, Antonym, Anonymous, என்று பல வார்த்தைகளில் ‘onym’ எ​னும் பகுதி இடம்பெறுகிறதே, அதை கவனித்திருக்கிறீர்களா?

‘Onym’ என்பது கிரேக்க மொழியில் இடம்பெறும் ஓர் ஒட்டுப் பகுதி. இதற்குப் பொருள் ‘வார்த்தை’ அல்லது ‘பெயர்’. Synonym என்றால் ஒரே அர்த்தம் கொண்ட வார்த்தை. Antonym என்றால் எதிர் அர்த்தம் கொண்ட வார்த்தை. Anonymous என்றால் பெயர் இல்லாத (அனுப்பியவர் தன்னை யார் என்றே வெளிப்படுத்திக் கொள்ளாமல் கடிதம் அனுப்பினால் அது a​nonymous letter – அதாவது அனாமதேயக் கடிதம்).

A​ptronym என்ற ஒன்று இருக்கிறது. ஒருவருடைய பெயர் அவரது தொழிலுக்குப் பொருந்தும்படி இருந்தால் அதை இப்படிக் குறிப்பிடுவார்கள். இசை ஆசிரியைக்கு சங்கீதா என்று பெயர் இருப்பதைப்போல. சிகையலங்காரக் கடை வைத்திருப்பவருக்கு சிகாமணி என்ற பெயர் இருப்பதைப்போல.

ஆங்கிலத்தில் இப்படி யோசித்தபோது சிலர் நினைவுக்கு வருகிறார்கள். அவர்களின் புகைப்படங்கள்தான் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

*************

Colony என்றால் ஒரு குறிப்பிட்ட இணைக்கும் தன்மை கொண்டவர்கள் (பொதுத் தன்மை கொண்டவர்கள்) வசிக்கும் இடம் எனலாம். Railway colony என்றால் ரயில்வேயில் வேலை செய்பவர்கள் குடியிருக்கும் இடம் என்பதுபோல. எறும்புப் புற்றைக்கூட ‘A colony of ants’ என்று குறிப்பிடுவதுண்டு.

ஆனால், colony என்பதற்கு வேறொரு அர்த்தமும் உண்டு. எங்கோ இருக்கும் ஒரு நாடு தன்னுடைய அதிகாரத்தின் கீழ் வேறொரு தேசத்தை தன் அரசியல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் அப்படி ‘அடிமையாக்கப்படும்’ நாட்டை காலனி என்பார்கள். இந்தக் கோணத்தில்தான் “இந்தியா ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது’’ என்கிறோம்.

Colonialism என்ற வார்த்தையும் colony என்பதிலிருந்து வந்ததுதான். ஒரு சக்தி மிகுந்த நாடு பிற நாடுகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதோடு அந்த நாடுகளின் வளங்களையும் சுரண்டினால் அதை colonialism என்பார்கள். இந்த விதத்தில் இந்தியாவை ஆக்கிரமித்த அத்தனை ஐரோ​ப்பிய சக்திகளும் colonizersதான். தங்குவதற்காக வந்தவர்கள் அல்ல (not settlers).

*************

“சிலர் பேசுவதோ பாடுவதோ சகிக்க முடியாமல் இருக்கும். இப்படிப்பட்டவர்களின் ஒலியை என்னவென்று அழைக்கலாம்?’’

Cacophony. அர்த்தமில்லாத வார்த்தைகளை இணைத்துப் பாடுவதும் இந்த வகையில் சேரும்.

'ஒம ஹசியா' என்று தொடங்கும் ‘தமிழ்ப்படம்’ பாடல் மற்ற பல திரைப்படப் பாடல்களில் இடம்பெறும் அர்த்தமில்லாத ஒலிகளைக் கொண்டு மட்டுமே உருவாக்கப்பட்ட பாடல். என்றாலும் இசையமைப்பும் பாடுபவர்களின் குரல்​களும் இனிமையாக இருப்பதால் இதை cacophony என்று கூறுவதா என்று விளங்கவில்லை.

பிரபல ஆஸ்டரிக்ஸ் comic strip-ல் Cacofonix என்ற ஒரு பாத்திரம் வரும். இவர் பாடத் தொடங்கினாலே சுற்றி இருப்பவர்கள் தெறித்து ஓடத் தொடங்குவார்கள்.

Cacophony என்பதற்கு எதிர்ச்சொல்லாக euphony என்பதைக் குறிப்பிடலாம். இவை முறையே அபஸ்வரம், இன்னிசை ஸ்வரம்.

*************

“என்னோட pen drive corrupt ஆயிடுச்சு என்று ஒருவர் கூறக் கேட்டேன். Corruption என்று நான் இதுவரை அறிந்தது வேறு’’ என்று வியப்பு தெரிவித்திருக்கிறார் ஒரு வாசகர்.

Corruption என்றால் ஊழல் என்பது உண்மைதான். Journalists should expose corruption in high places.

The corruption of youth எனும்போது இளைஞர்களிடையே ஒழுக்கக்கேடு அதிகமாவதை அது குறிக்கிறது. A word has been corrupted என்றால் அந்த வார்த்தையின் பொருள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று அர்த்தம் (“அஞ்சு மணிக்கு வந்துடுவே இல்ல?’’ என்கிற கேள்விக்கு “கண்டிப்பாக” என்று பதிலளிப்பது இந்த வகைதான். கண்டிப்பாக என்பது sure என்ற வார்த்தையைக் குறிப்பதில்லை. Strict என்ற வார்த்தையைத்தான்).

இதையே இன்னும் விவரிக்கும்போது ஒன்று மாசடைவதையோ, அழிவதையோகூட corruption என்ற வார்த்தையில் குறிப்பிடுகிறார்கள். இந்த விதத்தில் pen drive-ல் வைரஸ்கள் காரணமாக அதிலுள்ள தகவல்கள் அழிந்துவிட்டது என்றாலோ, அதைத் தொடர்ந்து பயன்படுத்த முடியவில்லை என்றாலோ அந்த pen drive corrupt ஆகிவிட்டதாகக் கூறுகிறோம்.

english 2jpg100 

“காரைக்குடியில் ஒரு சிறிய கடையின் வாசலில் 'இங்கு சுத்தமான பசுவின் பால் கிடைக்கும்’ என்று எழுதி இருந்தது. இங்கு பசு சுத்தமா அல்லது பால் சுத்தமா? ஆங்கிலத்தில் எழுதும்போதும் இதே கேள்வி எழுமா?’’ என்று சில மாணவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

கேள்வியில் ஒருவிதக் கிண்டலும் புலப்படுகிறது. என்றாலும் அதுவும் நியாயமான கேள்விதான்! Pure cow’s milk is sold here என்பதற்குப் பதிலாக Pure cowmilk என்று நாமாக இரு வார்த்தைகளை சேர்த்து விடலாமா? (தமிழில் பசுவின் பால் என்பதற்கு பதிலாக சு​த்தமான பசும்பால் எனலாம்).

Milk cow என்றால் பால் தரும் பசு (கறவைமாடு).

ஒரு மனிதனாலோ, நிறுவனத்தாலோ அதிக லாபத்தை அளிக்க முடிகிறது என்றால் அதை அல்லது அவ​​ரை Milch cow என்பதுண்டு. For the grand hotels, foreign tourists are the milch cows.

*************

போட்டியில் கேட்டுவிட்டால்

I have finished my work, _________?

a) Did I

b) Didn’t I

c) Have I

d) Haven’t I

ஒன்றைக் கூறிவிட்டு அதை உறுதிப்படுத்துவதற்காக ஒரு கேள்வியைக் கேட்டால் ஒன்றை மனதில்கொள்ள வேண்டும். கூறிய தகவல் நேர்மறையானதாக இருந்தால், தொடரும் கேள்வி எதிர்மறையானதாக இருக்க வேண்டும். கூறிய தகவல் எதிர்மறையானதாக இருந்தால் தொடரும் கேள்வி நேர்மறையானதாக இருக்க வேண்டும். It is sweet, is it? என்பது தவறு. It is sweet, isn’t it? என்பதே சரி. அதேபோல It is not sweet, isn’t it? என்பது தவறு. It is not sweet, is it? என்பதுதான் சரி.

அந்த வகையில் பார்க்கும்போது கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தின் இறுதிப் பகுதியாக Didn’t I என்பதும் Haven’t I என்பதும் வரக்கூடும். ஆனால், வாக்கியத்தின் முதல் பாதி எந்த tenseல் உள்ளதோ, அதே tense-ல்தான் பிற்பகுதியும் இருக்க வேண்டும். அப்படிப் பார்க்கையில் I have finished my work, haven’t I? என்பதே சரியானது.

 

சிப்ஸ்

# The plane plummeted என்று மட்டும் ஒரு தலைப்புச் செய்தியில் படித்தேன். அதைத் தொடர்ந்து up அல்லது down ஆகிய இரண்டு வார்த்தைகளில் ஒன்று இடம்பெற்றிருக்க வேண்டாமா?

வேண்டாம். Plummet என்றால் வேகமாக நெட்டுக்குத்தாக விழுவது. மேல் நோக்கி எதுவும் plummet ஆகாது.

# மசித்து அல்லது குழைத்து வைக்கப்பட்ட உருளை என்பதை எப்படிக் குறிப்பிடலாம்?

Mashed potatoes.

# பல பக்கங்கள் கொண்ட புத்தகத்தை Fat book எனலாமா?

Thick book எனலாம். Voluminous book என்றும் கூறலாம்.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com | ஓவியம்: வெங்கி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x