Last Updated : 01 Sep, 2014 10:00 AM

 

Published : 01 Sep 2014 10:00 AM
Last Updated : 01 Sep 2014 10:00 AM

இங்கிதம் தெரிந்தவரா நீங்கள்?

எடிகட் (Etiquette) என்றால் இங்கிதம் என்று சொல்லலாம். பொதுவாகவே இது அனைவருக்கும் தேவை. ஆனால் குறிப்பாகச் சில பதவிகளுக்கு அது மிக மிக அவசியம்.

எனவே வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் யாருக்கு போதிய எடிகட் இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கவும் சைகோமெட்ரிக் தேர்வுகள் பயன்படுத்தப்படுகின்றன.

எடிகட் என்றால்?

பிறர் பார்க்கும்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதுதான் எடிகட். அதாவது நம் நடவடிக்கை எப்படி இருக்கிறது, நம் பேச்சு எப்படி இருக்கிறது என்பதுதான். பொதுவாக எடிகட் எனும்போது நல்ல எடிகட்களைத்தான் குறிப்பிடுகிறோம். ‘’அவர் எடிகட் தெரிஞ்சவர்’’ என்றால் அவருக்கு நல்ல எடிகட்கள் உள்ளன என்றுதான் அர்த்தம்.

நல்ல எடிகட் இருந்தால் அவர் ஓர் உத்தமர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. நீங்கள் மனதளவில் சிறந்தவராக இருந்தாலும் பிறரிடம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால் உங்களுக்கு எடிகட் போதவில்லை என்றுதான் அர்த்தம். மாறாக மனதில் நீங்கள் ஒரு வில்லனாகவே இருந்தாலும் வெளிப்படையாக நடந்து கொள்ளும் முறையில் மிகவும் இங்கிதமானவராக இருந்தால் உங்களுக்கு எடிகட் இருக்கிறது என்றுதான் பொருள்.

கம்பெனிக்கான இங்கிதம்

வெளிப்படையாகவே பேசுவோமே. நிறுவனங்களைப் பொறுத்தவரை நீங்கள் மனதளவில் உத்தமராக இருப்பதைவிட, எடிகட் நிறைந்தவராக இருப்பதைத்தான் அதிகம் விரும்பும். ஏனென்றால் சமுதாயத்தைப் பொறுத்தவரை நீங்கள்தான் அந்த நிறுவனத்தின் பிரதிநிதி.

எனவே எடிகட் உள்ளவர் களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று ஒவ்வொரு நிறுவனமும் ஆசைப்படுவது உண்மை. இதை அறிவதற்காகவும், சைகோமெட்ரிக் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆக நாகரிகமாக நடந்துகொள்வது என்பது இன்று மிக முக்கியமான ஓர் அம்சம்.

இங்கிதக் கேள்விகள்

“வாடிக்கையாளரை முன்தினம் மாலை சந்திப்பதாக அறிவித்திருந்தீர்கள். ஆனால் ஒரு அவசர வேலை காரணமாக அவரை அன்று சந்திக்க முடியவில்லை எனில் என்ன செய்வீர்கள்?

அ) அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அடுத்த சந்திப்பு எப்போது என்பதை உறுதிப்படுத்துவேன்.

ஆ) அவராகவே என்னைத் தொடர்புகொள்ள வாய்ப்பு உண்டு. அப்படித் தொடர்பு கொள்ளும்போது என்னால் வர முடியாமலிருப்பதற்கு வருத்தம் தெரிவிப்பேன்.

இ) ‘எதிர்பாராத காரணங்களால் சந்திக்க இயலவில்லை’ என்று மின்னஞ்சலில் செய்தி அனுப்புவேன்.

வாடிக்கையாளரின் கோணத்திலிருந்து பார்த்தால் இரண்டாவது மற்றும் மூன்றாவது பதிலின்படி நீங்கள் நடந்து கொள்வது நல்ல எடிகட் அல்ல. இவற்றை அவரால் முழுமையாக ஏற்க முடியாது.

இப்போது அடுத்த கேள்வி. பல நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளோடு ஒரு பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. அவர்களில் ஒருவர் உங்களை ஒரு கேள்வி கேட்கிறார். பதிலளிக்கும்போது உங்கள் பார்வை எப்படி இருக்கும்?

அ) கேள்வி கேட்டவரைப் பார்த்தபடிதான் பதிலளிப்பேன்.

ஆ) அது ஒரு விஷயமே அல்ல. சரியான பதில் வேண்டும் அவ்வளவுதானே? எனவே தரையில் பார்த்தபடிகூட பதிலளிப்பேன்.

இ) பதிலளிக்கத் தொடங்கும்போது கேள்வி கேட்டவரைப் பார்ப்பேன்.அந்தப் பதிலைத் தொடர்ந்து கூறும்போது எதிரிலுள்ள மற்றவர்களையும் பார்ப்பேன்.

இந்த மூன்றாவது பதில்தான் எடிகட் நிறைந்த செயல்பாடு. தவிர தரையில் பார்த்துக் கொண்டு பேசுவது பலவித சந்தேகங்களை ஏற்படுத்தும். சில சமயம் எதிராளியைத் தவிர்க்க நினைக்கும்போதும், அவரிடம் அச்சம் உண்டாகும்போதும்கூட தரையைப் பார்த்தபடி பேசுவோம். இவையும் எதிர்மறை இமேஜைதான் உண்டு பண்ணும்.

ஒரு வாடிக்கையாளர் உங்களை நோக்கி வருகிறார். உங்கள் எதிரில் மூன்று காலி நாற்காலிகள் உள்ளன. என்ன செய்வீர்கள்?

அ) கண் ஜாடை மூலமாகவே அவரை உட்காரச் சொல்வேன்.

ஆ) எதிரில் இருக்கும் மூன்று நாற்காலிகளைச் சுட்டிக் காட்டி “உங்களுக்கு வசதியான நாற்காலியில் அமருங்கள்’’ என்பேன் பவ்யமாக.

இ) ஒரு குறிப்பிட்ட நாற்காலியைச் சுட்டிக் காட்டி “தயவுசெய்து உட்கார்ந்து கொள்ளுங்கள்’’ என்பேன்.

மேலோட்டமாகப் பாரத்தால் இந்த மூன்றுக்குமே பெரிய வித்தியாசம் இல்லாததுபோல தோன்றலாம். மூன்றிலுமே நாகரிகமாகத்தானே நடந்து கொள்கிறோம்? அதாவது உட்காரச் சொல்கிறோம்.

ஆனால் கண் ஜாடை மூலம் உணர்த்துவது என்பது கொஞ்சம் ‘சீப்’பாகத் தன்னை நடத்துவதான எண்ணத்தை எதிரில் இருப்பவருக்கு ஏற்படுத்தலாம்.

எனவே உங்கள் தேர்வு முதல் விடையாக இருந்தால், நீங்கள் போதிய எடிகட் இல்லாதவராகக் கருதப்படுவீர்கள்.

மூன்று நாற்காலிகளில் எதில் வேண்டுமானாலும் உட்காரச் சொல்வது வாடிக்கையாளருக்கு ஒரு தற்காலிக சங்கடத்தைத் தரலாம். எதில் உட்காருவது என்று முடிவெடுப்பதில் ஒரு சிறு தயக்கம் ஏற்படக் கூடும்.எனவே மூன்றாவது பதிலில் உள்ள செயல்பாடுதான் எடிகட்டைப் பொறுத்தவரை தேர்ச்சி பெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x