Published : 24 Sep 2014 12:27 PM
Last Updated : 24 Sep 2014 12:27 PM

வெயிலும், குளிரும் பிறந்த கதை

முன்னொரு காலத்தில் அண்ணன், தங்கை ரெண்டு பேர் இருந்தார்கள். ரெண்டு பேரும் ரொம்ப ஒற்றுமையா இருந்தார்கள். எங்கே போனாலும் ஒண்ணாதான் போவார்கள். அண்ணன் பேரு கதிரவன். தங்கை பேரு நிலா.

தங்கை மேல அண்ணன் உயிரையே வைத்திருந்தான். தங்கையும் அண்ணனைச் சுற்றியே ஓடுவாள். ஊரே இவர்கள் ரெண்டு பேரையும் பாராட்டும். இவுங்க ரெண்டு பேருக்கும் ஒரு அம்மா இருந்தார்கள். அவங்க பேர் பூமி.

ஒரே அம்மாவோட குழந்தைகள் என்றாலும் ஒரே மாதிரியா குணம் இருக்கும்? இருக்காது இல்லையா? கதிரவன் பயங்கர வாலு. நல்லா சேட்டை பண்ணுவான். ஆனா, படிக்கச் சொன்னா மட்டும் படிக்குற மாதிரி போக்குக் காட்டுவான்.

அவனோட தங்கை நிலா நேர் எதிர். இருக்கற இடமே தெரியாம அமைதியா இருப்பாள். நல்லா படிப்பாள். அதனால எல்லோரும் நிலாவைப் பாராட்டுவாங்க. அதனால் கதிரவனுக்குத் தங்கை மேல் கொஞ்சம் கொஞ்சமாகப் பொறாமை வரத் தொடங்கியது.

தங்கையை அடிக்கடி வம்புக்கு இழுப்பான் கதிரவன் அண்ணன். நிலா சும்மா இருந்தாலும் கதிரவன் சீண்டிக்கிட்டே இருப்பான். ஒரு கட்டத்துல ரெண்டு பேரும் அடிக்கடி சண்டை போட ஆரம்பிச்சாங்க. ரெண்டு பேரும் ஓயாமல் சண்டை போட்டதால், பூமி அம்மாவுக்கு ஒரே கவலையா போச்சு.

தங்கைக்குக் கல்யாணம் செய்து வைத்து வெளியே அனுப்பினால், அண்ணன் பாசமாயிடுவான்னு பூமி அம்மா நினைச்சாங்க. நிலாவுக்கு கல்யாண ஏற்பாடு செய்யத் தொடங்கினாங்க. ஆனால், தங்கைக்குத் திருமணம் முடியுறதுக்குள்ளேயே அண்ணன் – தங்கை சண்டை மறந்து பாசமலர்களா மாறிட்டாங்க.

கல்யாணம் முடிந்தது. கல்யாணம் ஆனதால கணவன் வீட்டுக்கு நிலா போனாள். அம்மாவை விட்டுட்டு போனதால, நிலா சந்தோஷமாவே இல்லை. அம்மாவை அடிக்கடி நினைச்சுக்கிட்டே இருந்தாள்.

அண்ணனோட வீட்டுக்கும் அடிக்கடி போக முடியா தில்லையா? அதனால் ஒருநாள் பூமி அம்மாவைச் சந்தித்துக் கண்ணீர்விட்டாள் நிலா. அம்மாவும் பொண்ணுக்காக ஒரு யோசனை சொன்னார்கள்.

தினமும் காலை நேரத்துல அண்ணன் கதிரவன் வீட்டுலயும், இரவு நேரத்துல தங்கை நிலா வீட்டுலயும் இருக்கறதுன்னு முடிவு செய்தார்கள். கதிரவனும், நிலாவும் இதுக்கு சம்மதித்தார்கள்.

நிலாவோட மாமியார் வீட்டுலயும் சந்தோஷமா ஒத்துக்கொண்டார்கள். அன்று முதல் அம்மா, அண்ணன் வீட்டுக்கும், தங்கை வீட்டுக்கும் தினமும் மாறி, மாறிப் போயிட்டு வர்றாங்க.

கதிரவன் வீட்டுல தங்கும் போது அம்மாவுக்கு வெயில் அடிக்கும். நிலா வீட்டுல தங்கும் போது குளிர் அடிக்கும். ஏதாவது நிகழ்ச்சிக்காக கதிரவன் வீட்டுக்கு நிலா செல்லும்போது, அவள் மீதும் வெயில் படும். அன்று தான் பௌர்ணமி. இன்றுவரை இந்த வழக்கத்தைப் பூமி அம்மா சந்தோஷமாகக் கடைப்பிடித்து வர்றாங்க.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x