Published : 29 Sep 2018 11:34 AM
Last Updated : 29 Sep 2018 11:34 AM

மூலிகையே மருந்து 24: நோய்களைத் தட்டி வைக்கும் சிற்றாமுட்டி

‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பது போல, பெயரளவிலும், உயர அளவிலும் சிறுத்திருப்பினும், நோய்களைப் போக்கும் சிற்றாமுட்டியின் வீரியம், கொஞ்சம்கூடக் குறையாது. நமக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவர்கள், எதிர்பாராத நேரத்தில்  பேருதவி செய்வதைப் போல, மூலிகை வரிசையில் அதிகம் அறிமுகமில்லாத சிற்றாமுட்டி, நோய்களைப் போக்கி பேருதவி புரியும்.

முதியவர்ளுக்கு உண்டாகும் வாத நோய்களை நீக்கி, அவர்களோடு துணை நிற்கும் ‘மூலிகை நண்பன்’ சிற்றாமுட்டி! வர்ம மருத்துவத்திலும் சிற்றாமுட்டியின் பங்கு அளப்பரியது. மூன்றடி அளவுக்கு வளரும் சிற்றாமுட்டியுடன் கைகுலுக்கி நட்பு பாராட்டினால், தோள் கொடுக்கும் நண்பனாக உருமாறும்.

பெயர்க் காரணம்: சிற்றாமுட்டிக்கு சிறுந்தொட்டி, சிறுந்தொட்டை, குறுந்தொட்டி, குறுந்தோட்டி ஆகிய வேறுபெயர்கள் உள்ளன. தட்டி என்பதற்கு கேடயம் என்ற பொருளில், ‘நோய்களுக்கான கேடயமாக’ இருப்பதால், குறுந்‘தட்டி’ என்ற பெயரும் உண்டு. பேராமுட்டி எனும் வகையிலிருந்து வேறுபடுத்திக் காட்ட, ‘சிறு’ எனும் முன்னொட்டு சேர்ந்திருக்கிறது.

அடையாளம்: இதய வடிவத்தில், வரிவரியான விளிம்புகளுடன் கூடிய இலைகளைக் கொண்ட செடி வகையினம். தாவரம் முழுவதும் மெல்லிய ரோம வளரிகள் காணப்படும். மஞ்சள் நிறத்தில் இதன் மலர்கள் காட்சியளிக்கும். வேர்கள் தடித்திருக்கும். ‘மால்வேசியே’ (Malvaceae) குடும்பத்தைச் சார்ந்த சிற்றாமுட்டியின் தாவரவியல் பெயர் ‘சிடா கார்டிஃபோலியா’ (Sida cordifolia). எஃபிட்ரின் (Ephedrine), பீட்டா சைட்டோஸ்டீரால் (Beta-sitosterol), ஸ்டிக்மாஸ்டீரால் (Stigmasterol), பால்மிடிக் அமிலம் (Palmitic acid) போன்ற வேதிப் பொருட்கள் இதில் செறிந்து கிடக்கின்றன.

உணவாக: சிற்றாமுட்டி, பாசிப்பயறு, வில்வம், பற்படாகம், கொத்தமல்லி ஆகியவற்றைக் கஷாயமிட்டு, அரிசிக் கஞ்சியில் கலந்து கொடுக்க சுரத்தின் தீவிரம் குறையும். சுரத்துக்குப் பிறகு உண்டாகும் உடல் சோர்வு நீங்க, பத்தியக் குடிநீராகவும் இதைப் பயன்படுத்தலாம். ‘அத்திசுரம் முதல் அனந்தசுரம் பித்தமும் போம்’ என்ற சித்த மருத்துவப் பாடல், பல்வேறு காரணங்களால் உண்டாகும் சுர நோய்களுக்குச் சிற்றாமுட்டி அற்புத மருந்து எனவும், உடலில் உள்ள அதிவெப்பத்தை அகற்றும் மருந்து எனவும் பதிவிடுகிறது.

துத்தி இலையோடு சிற்றாமுட்டி இலையைச் சேர்த்து, கீரை போல் சமைத்துச் சாப்பிட ஆசனவாய் எரிச்சல், வலி போன்றவை குறையும். சிற்றாமுட்டி வேரோடு பனைவெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்படும் பால் கஷாயம், உடலுக்கு ஊட்டத்தைக் கொடுக்கும். கடினப்பட்ட மலமும் எளிதாக வெளியேறும். இதன் வேருக்குச் சிறுநீர் பெருக்கும் குணமிருப்பதால், வேனிற்காலப் பானங்களில் சேர்க்கப்படுகிறது. விந்தணுக்களின் தரத்தை அதிகரிப்பதற்கான சித்த மருந்துகளில் இதன் வேருக்கும் விதைக்கும் இடமுண்டு. 

மருந்தாக: விளையாட்டு வீரர்களின் செயல்திறனை அதிகரிக்க, இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சத்து பயன்படுகிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு இதன் வேதிப்பொருட்கள் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனதுக்குச் சாந்தத்தைக் கொடுக்கவும் சிற்றாமுட்டி உதவும் என்கிறது மற்றொரு ஆய்வு. கல்லீரலுக்கு வலுவூட்டும் மருந்தாக சிற்றாமுட்டி செயல்படுகிறது. காயங்களை விரைவில் குணப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு. வறட்சி அகற்றி (Emollient) மற்றும் வீக்கமுறுக்கி (Anti-inflammatory) செய்கை கொண்ட சிற்றாமுட்டி எண்ணெய், வாத நோய்களுக்கான முக்கிய மருந்து.

வீட்டு மருந்தாக: சிற்றாமுட்டி வேர் கொண்டு செய்யப்படும் தைலத்தை வலியுள்ள பகுதிகளில் தடவலாம். சிற்றாமுட்டி, கடுக்காய், பேராமுட்டி, நெல்லிவற்றல், சுக்கு போன்றவற்றைத் தண்ணீரிலிட்டு நன்றாகக் கொதிக்கவைத்து மருந்தாகப் பயன்படுத்த வயிற்றுப் புண் குணமாகும். உடலில் தங்கிய வாயுவை வெளியேற்றவும் இது உதவும். சிற்றாமுட்டி கஷாயத்தோடு சுக்கு சேர்த்துப் பருக, எலும்புகளில் ஏற்படும் வலி குறையும்.

குளியல் எண்ணெய்: சிற்றாமுட்டி வேரின் உதவியுடன் தயாரிக்கப்படும் எண்ணெய்யை, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, கண் எரிச்சல் நீங்குவதோடு உடலுக்குப் பலமுண்டாகும். மன நோய்களின் தீவிரத்தைக் குறைக்கவும் சிற்றாமுட்டி எண்ணெய்க் குளியலை மேற்கொள்ளலாம்.

பொன்னாங்காணி, பொடுதலை, மருதாணியுடன் சிற்றாமுட்டி வேர் சேர்த்து தயாரிக்கப்படும் தைல வகை, கூந்தல் வளர்ச்சிக்கு உதவுக்கூடியது. தசைப்பிடிப்போ மூட்டுகளில் வலியோ ஏற்படும்போது கடைகளில் கிடைக்கும் சிற்றாமுட்டி வேரை வாங்கி, நல்லெண்ணெய்யில் இட்டுக் காய்ச்சி வலியுள்ள இடங்களில் தடவலாம்.

சிற்றாமூட்டி… நலம் காட்டி!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x