Published : 10 Sep 2018 12:26 PM
Last Updated : 10 Sep 2018 12:26 PM

நுகர்வோரை மட்டும் கைகாட்டுவது சரியா? 

பிளாஸ்டிக்; ஒரு காலத்தில் மிக அரிய வரப்பிரசாதமாகப் பார்க்கப்பட்டது. எடை குறைவானது, வலிமையானது, எந்த வடிவத்திலும் மாற்றலாம் என்பதால் உலகம் முழுவதும் இதன் பயன்பாடு அதிகரித்தது. ஆனால், இன்று அணுகுண்டுகளைக் காட்டிலும் மிகக்கொடியதாக மாறியிருக்கிறது. காரணம், பிளாஸ்டிக்குக்குப் பிறப்பு மட்டும்தான் இறப்பு என்பதே இல்லை.

பிளாஸ்டிக்கைத் தவிர்க்குமாறு நுகர்வோருக்கு அறிவுரை சொல்லும் யாரும் அது நுகர்வோரிடம் வந்து சேர்வதற்குக் காரணமாக உள்ளவர்களைக் கைகாட்டுவதில்லை. பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துபவர்களைவிட அதைத் தயாரித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் சுழற்சியில் பங்கெடுக்கும் அனைவரும் தான் முதலில் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்க்கும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.

பிளாஸ்டிக் கழிவுகளில் பெரும்பான்மை சதவீதத்தை நிறுவனங்கள் நினைத்தால் மட்டுமே தவிர்க்க முடியும். பிளாஸ்டிக் என்றாலே நேரடியாக நுகரும் சிலவற்றை மட்டுமே நாம் பட்டியல் இடுகிறோம். ஆனால், பேக்கேஜிங் என்ற பெயரில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. அதுவும் இன்றைய இ-காமர்ஸ் வர்த்தக உலகில் இந்தப் பேக்கேஜிங் முறையில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கின் அளவு சாமான்யர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை விட பல மடங்கு அதிகம்.

உதாரணமாக, நீங்கள் ஆன்லைனில் ஒரு சாதாரண பேசிக் டைப் போன் ஆர்டர் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது உங்கள் கைக்கு வந்து சேர்ந்ததும் அதைப் பிரித்தால், முதலில் பிளாஸ்டிக் டேப், அடுத்து உள்ளே, பபுள் பிளாஸ்டிக் சுற்றப்பட்டிருக்கும். அதற்கும் உள்ளே போன் வைக்கப் பட்டுள்ள பாக்ஸைச் சுற்றியும் பிளாஸ்டிக் ஒட்டப்பட்டிருக்கும். அதைப் பிரித்து போனை எடுத்தால், போனுக்கு ஒரு பிளாஸ்டிக் கவர், சார்ஜருக்கு ஒரு கவர், ஹெட்போனுக்கு ஒரு கவர் என முழுக்க முழுக்க பிளாஸ்டிக் மயம்தான். ஒரு சாதாரண சிறிய போனுக்கு இத்தனை பிளாஸ்டிக். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், இன்று ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ஒரு நாளைக்கு இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் பொருள்களின் எண்ணிக்கை எவ்வளவு, அவற்றில் இருக்கும் பிளாஸ்டிக் அளவு எவ்வளவு என்று.

பிளாஸ்டிக்கைப் பொருத்தவரை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும், இல்லையென்றால் மீண்டும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதுதான் ஆரோக்கியமான வரையறை. ஆனால் இந்தப் பேக்கேஜிங் முறையில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மீண்டும் பயன்படுத்த முடியாதவை என்பதும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. அதேபோல் உணவுப் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்கள் தரப்பிலும் அதிகளவு பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது.

பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப்பையைப் பயன்படுத்துவது, பிளாஸ்டிக் பாட்டில்களுக்குப் பதிலாக உலோக பாட்டில்களைப் பயன்படுத்துவது போன்றவையெல்லாம் அவசியம் கடைபிடிக்க வேண்டியவைதான், அதே சமயம், தொழில் நிறுவனங்கள் தங்கள் தரப்பிலிருந்தும் பிளாஸ்டிக்கைத் தவிர்க்கும் முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும். பிளாஸ்டிக்கைத் தவிர்க்கும் பேக்கேஜிங் முறைகளைக் கண்டுபிடித்து செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்தப் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x