Published : 12 Sep 2018 11:16 AM
Last Updated : 12 Sep 2018 11:16 AM

டிங்குவிடம் கேளுங்கள்: மருத்துவர்களின் கையெழுத்து ஏன் புரிவதில்லை?

மருத்துவர்கள் தாங்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை ஏன் புரியாத மாதிரி எழுதுகிறார்கள், டிங்கு?

- த.ச. அபிஷேக் பாபு, 6-ம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், ஒசூர்.

உங்களைப்போல் நானும் மருத்துவர்களின் கையெழுத்துக் குறித்து யோசித்திருக்கிறேன். சில மருத்துவர்களிடமும் கேட்டிருக்கிறேன். இதற்குப் பிரத்யேகக் காரணங்கள் இல்லை என்றுதான் சொல்கிறார்கள். மருத்துவம் படிப்பவர்களுக்கு நிறைய எழுத்து வேலைகள் இருக்கும். நேரம் குறைவாக இருக்கும். அதனால் வேக வேகமாக எழுதும்போது, கையெழுத்து மற்றவர்களுக்குப் புரியாததுபோல் இருக்கும், ஆனால் அவர்களுக்குப் புரியும்.

இப்படியே அவர்கள் 5 ஆண்டுகளும் எழுதிப் பழகி விடுவதால், அவர்களின் கையெழுத்து இயல்பாக மாறிவிடுகிறது. பாடங்களைக் கூட ரெக்கார்ட் செய்துகொண்டு, பிறகு மெதுவாக எழுதும் அளவுக்குத் தொழில்நுட்பம் இப்போது வளர்ந்துவிட்டது. அதனால் இப்போது வரும் மருத்துவர்கள் புரியும்படியே எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். பெரிய மருத்துவமனைகளில் கம்ப்யூட்டரே மருந்துகளைப் பிரிண்ட் செய்து கொடுத்துவிடுகிறது, அபிஷேக் பாபு.

அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் வட அமெரிக்காவுக்கும் ஏன் அமெரிக்கா என்று ஒரே பெயர்? எனக்குக் குழப்பமாக இருக்கிறது. கொஞ்சம் விளக்க முடியுமா, டிங்கு?

– தி. திவ்யா, 10-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, பாமணி.

ஏழு கண்டங்களில் வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் இருக்கின்றன. வட அமெரிக்கக் கண்டத்தில்தான் அமெரிக்க ஐக்கிய நாடுகள் இருக்கின்றன. இது மட்டுமின்றி, கனடா, மெக்சிகோ, கியூபா போன்ற பல நாடுகள் இந்தக் கண்டத்தில் இருக்கின்றன. தென் அமெரிக்கக் கண்டத்தில் அர்ஜெண்டினா, பிரேசில், பொலிவியா, சிலி, கொலம்பியா, பராகுவே, பெரு போன்ற பல நாடுகள் இருக்கின்றன. அமெரிக்க நாடு என்று சொல்லும்போது, அது அமெரிக்க ஐக்கிய நாடுகளைக் குறிக்கும். வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்று சொல்லும்போது அவை கண்டங்களைக் குறிக்கின்றன, திவ்யா.

பிரம்மக் கமலம் என்று ஒரு பூ உண்டா, டிங்கு?

-சு. கீர்த்தனா, 9-ம் வகுப்பு, வித்யா மந்திர், ஓசூர்.

இருக்கிறது, கீர்த்தனா. பிரம்மக் கமலம் (Epiphyllum oxypetalum) கள்ளி வகையைச் சேர்ந்த ஒரு தாவரம். ஆண்டுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே பூக்கும் இயல்புடையது. பொதுவாக இரவில் மலரும் பூக்கள் வெள்ளையாக இருக்கும். பிரம்மக் கமலமும் வெள்ளையாகவும் அழகாகவும் இருக்கும். இந்தப் பூவின் ஆயுட்காலம் சில மணி நேரம்தான். இமயமலைப் பகுதியில் மட்டுமே காணப்பட்ட இந்தப் பூ, தற்போது தமிழ்நாட்டில் கூடக் காணப்படுகிறது. புராணக் கதையில் இதை, பிரம்மா அமரும் பூ என்கிறார்கள். இந்தச் செடியைக் கிள்ளி வைத்தாலே, புதுச் செடியாக உருவாகிவிடும்.

கொள்ளிடத்தில் காவிரி கரைபுரண்டு ஓடும் அழகைப் பார்த்து பிரமித்துவிட்டேன். நீயும் ரசித்தாயா? உன் எண்ண ஓட்டம் எப்படி இருந்தது, டிங்கு?

– எஸ். ஹரிஹரசுதன், எஸ்.ஆர்.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.

கொள்ளிடத்தில் காவிரி கரைபுரண்டு ஓடும் காட்சிகளைத் தொலைக்காட்சிகளின் மூலமே கண்டு ரசித்தேன், ஹரிஹரசுதன். நான் ஒன்றிரண்டு முறை கொள்ளிடம் வந்தபோது, தண்ணீரே இல்லை. ஆனால், தண்ணீர் வந்தபோது என்னால் நேரில் வந்து பார்க்க முடியவில்லை. கொல்கத்தாவின் ஹூக்ளி, கோவாவின் மண்டோவி போன்ற மிகப் பெரிய நதிகளைப் பார்க்கும்போது தமிழ்நாட்டு நதிகளும் இப்படி ஓடினால் எப்படி இருக்கும் என்று ஏக்கமாக இருக்கும். அந்த ஏக்கம் இந்த ஆண்டு தீர்ந்துவிட்டது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஆறுகளில் தண்ணீர்ப் பெருக்கெடுத்து ஓடி, எல்லோரையும் இன்பத்தில் ஆழ்த்திவிட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x