Published : 09 Sep 2018 12:52 PM
Last Updated : 09 Sep 2018 12:52 PM

அலசல்: எதற்கு இத்தனை ஆராய்ச்சி

கடந்த வாரம் தமிழக ஊடகங்களில் பிரேக்கிங் செய்தியாக மட்டுமல்ல; தனி விவாதமாக வந்த செய்தி குன்றத்தூரைச் சேர்ந்த அபிராமி என்ற பெண் திருமணத்துக்கு வெளியே ஏற்பட்ட உறவு (Extra marital life) காரணமாகத் தனது இருகுழந்தைகளை விஷம்கொடுத்துக் கொன்றுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார் என்பது.

செய்தியைக் கேட்ட நொடியி லிருந்து கேட்டவர்கள் மனம் பதைபதைத்துப் போனதைக் கடந்த வாரங்களில் காணமுடிந்தது. சமூக ஊடகங்களிலும் அந்தப் பெண்ணின் படங்கள், வீடியோக்கள் ஆகியவை பகிரப்பட்டு, கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

பலருக்கும் கடுமையான மன உளைச்சலைத் தந்த சம்பவங்களில் இதுவும் ஒன்று. இந்தக் குற்றச்செயல் நிரூபிக்கப்பட்டால் அபிராமிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் மனசாட்சியுள்ள சமூகத்தின் நிலைப்பாடாக இருக்க முடியும்.

அபிராமியின் வழக்கு பல்வேறு கேள்விகளை, மர்மங்களை, தீர்க்கப்படாத சந்தேகங்களை இன்னமும் கொண்டிருக்கிறது. எனினும், இதுபோன்ற சம்பவங்களைச் சமூகம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் தற்போதைக்கு விவாதிக்கவும் - புரிந்துகொள்ள வேண்டியதும் ஆகும். தேசியக் குற்றப் பதிவுகள் ஆணையத்தின் (NCRB) தகவல் அடிப்படையில் குற்ற எண்ணிக்கையில் மற்ற பெருநகரங்களின் வரிசையில் சென்னை மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

அப்படியானால் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு குற்றச்செயல் குறித்து நமது பொதுச் சமூகமும் ஊடகங்களும் விவாதித்துக்கொண்டுதானே இருக்க வேண்டும்? ஏன் அவ்வாறு தினசரி விவாதிப்பதில்லை? ஏன் அபிராமி போன்ற பெண்களின் குற்றச் செயல்கள் ஊடகங்களின் விவாதப் பொருள் ஆகுமளவுக்குப் பேசப்படுகிறது?

கடந்த மாதத்தில் ஒட்டன்சத்திரத்தில் இதேபோல் திருமணத்துக்கு வெளியே ஏற்பட்ட உறவால் சம்மந்தப்பட்ட ஆணும் பெண்ணும் உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பக்கத்தில் அழுதுகொண்டிருந்த குழந்தை இடையூறாக இருப்பதாகக் கருதி அந்தக் குழந்தையை இருவரும் சேர்ந்து கொன்றுவிட்டுப் பின் உறவில் ஈடுபட்டனர் என்பதாகச் செய்தி ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

இதையெல்லாம் படிக்கும்போது மனம் பதைபதைத்தாலும் இந்தச் சம்பவம் ஏன் அபிராமி அளவுக்கு விவாதமாகவில்லை? இன்று சமூக ஊடங்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் பகிரப்படும் அபிராமியின் படங்கள், வீடியோ தகவல்கள் போன்றவை ஊடகங்களின் ‘உணர்ச்சியைக் கிளறச்செய்யும் செய்தி’களுக்குத் தீனியாகப் பயன்படுத்தபட்டன. ஒட்டன்சத்திரப் பெண்ணின் புகைப்படங்கள், தகவல்கள் அவ்வாறு கிடைக்கவில்லை.

கூடுதலாக அபிராமி சிரிக்கிறார், சிவப்பாக இருக்கிறார், மியூசிக்கலியில் பாடுகிறார், ஸ்கூட்டி ஓட்டுகிறார் என்பது போன்ற தகவல்களைத் தந்து ‘இப்படியெல்லாம் இருக்கும் அபிராமி’  என்ற சொல்லாடலைத் தருவதன்மூலம் ஊடகங்கள் என்ன சொல்லவருகின்றன?

இப்படிச் சிரிக்கிற, பாடுகிற, வண்டி ஓட்டுகிற பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற கருத்தையும் உள்நோக்கத்தோடு சேர்த்து வைக்கிறார்கள். இதைத்தான் மிகநுணுக்கமாகப் பெண்கள் புரிந்துகொள்ளவும் எதிர்வினையாற்றவும் வேண்டியுள்ளது. இங்கே ஊடகங்கள் எனச் சொல்வது தொழில்முறை ஊடகங்கள் மட்டுமல்ல; வெகுமக்கள் பங்கேற்போடு செயல்படும் சமூக ஊடங்கங்களும்தான்.

ஆணாதிக்கத்தின் மொழி

அபிராமியின் குற்றச் செயல் தனிப்பட்ட பிரச்சினையாகப் பார்க்கப்படாமல் , அதை அனைத்துப் பெண்களுக்கான ஒழுக்கப் பிரச்சினையாகப் போதிப்பதில் மிகுந்த சிரத்தை எடுத்துகொள்கிறது ஆணாதிக்க – ஊடக சமூகம். அதற்காகவே பிரத்யேக மொழியை அது பயன்படுத்துகிறது. சட்டப்படி Extra marital affair என்பதைத் திருமணத்துக்கு வெளியே அல்லது திருமணத்துக்கு அப்பாற்பட்ட  என்றுதான் சொல்ல வேண்டும்.

பெண்களுக்கு எதிரான கருத்துருவாக்கத்தின்போது மொழிபெயர்க்கப்படும் ‘கள்ள உறவு, கள்ள புருஷன்-கள்ளக் காதலன்/ காதலி’ போன்றவையெல்லாம் எந்த அகராதியிலிருந்து உருவாக்கப்பட்டவை என்ற விளக்கத்தைப் பெண் சமூகம் கோரியாக வேண்டும்.

பொதுச் சமூகத்தின் புரிதல்

அபிராமி வழக்கைப் போன்ற வழக்குகள் ஒவ்வொருமுறை நடக்கும்போதும் ‘அவதான் இவ’ என்றெல்லாம் மீம்ஸ் போடும் அதே சமூகம், ஆணைப் பற்றிச் சொல்லும்போது மட்டும் ‘அவளை கரெக்ட் பண்ணியது இவன்தான்’ என எதோ சாதனையாளனை அறிமுகப்படுத்துவது போலத்தான் சொல்கிறது. அபிராமி வழக்கிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டிய இரு ஆண்களைக் குறித்து ஒரு கருத்தும் பேசப்படவில்லை.

செய்திகூடப் பெரிதாக இல்லை. அதெற்கெல்லாம் மேலாக விசாரணை தொடங்கி இன்னும் யார் பக்கம் தவறு என்பதுகூட முடிவாகாத நிலையில், லட்சக்கணக்கான ரசிகர்களைத் திரைத்துறையில் கொண்டிருக்கும் இப்போது அரசியலில் குதித்துத் தமிழகத்துக்கு நல்லாட்சி தரத்துடிக்கும் நடிகர் ரஜினிகாந்த் அந்தப் பெண்ணின் கணவனை வரவழைத்து ஆறுதல் சொல்வதும், தன் கட்சியின் இளைஞரணி பகுதித் தலைவர் பொறுப்பு வழங்குவதும் சொல்லவரும் சேதி என்ன? இதுபோன்ற போக்குகள் வழக்கையும் பொதுச் சமூகப் புரிதலில் ரஜினியின் நடவடிக்கை சார்ந்து செல்வாக்கையும் செலுத்தாதா?

செல்வாக்கின் நிலைப்பாடு

இரண்டு நாட்களுக்கு முன் வெளியான செய்தியில் கணவன் - மனைவி தகராறில் இருவரும் ஆளுக்கொரு அறைக்குச் சென்று ஆறு வயது மகளைத் தவிக்கவிட்டுவிட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்கள். ரஜினி போன்றோர் அந்தக் குழந்தையை வரவழைத்துத் தத்தெடுத்துத் தூக்கி வளர்ப்பார்களா? சாதி, மதம், பெண்ணடிமைத்தனம் பொருளாதார/ உழைப்புச் சுரண்டல் ஆகியவை குடும்ப அமைப்புகளைக் கட்டியாளுகின்றன.

அவற்றைச் சுயவிமர்சனத்தோடு பார்த்து அதைத் திருத்தி அமைக்க விரும்பாத ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பின் அழுத்தம் தாங்காமல் குடும்பங்கள் சிதைகின்றன. குறிப்பாக ஒரு பெண் அதைச் செய்யும்போது குடும்ப அமைப்பை அப்படியே பாதுகாக்கத் தனக்கேற்றாற்போல் கருத்தை உருவாக்குகிறது. தனது அத்தனை செல்வாக்கையும் இதற்காகப் பயன்படுத்துகிறது.

இந்த அடிப்படை பிரச்சினையைச் சமூகத்தின் அங்கங்கள் புரிந்துகொள்ளாமல் கடந்துபோனால், கற்பனைக்கு எட்டாத கொடூரங்களுக்கும் பஞ்சம் இருக்காது. தீர்வை நோக்கிப் பயணிக்கவும் இயலாது!

என்ன செய்யப்போகிறோம்?

கடந்த மாதம் தமிழக மாவட்டம் ஒன்றில் இருக்கும் பெண்கள் சிறைக்குச் சென்றிருந்தேன். “மேடம், இந்தப் பொண்ணுக்குக்கூட ஏதாவது உதவ முடியுமா பாருங்க” என்று பெண் காவலர் கைகாட்டிய அந்தப் பெண்ணுக்கு 35 வயதிருக்கும். கணவனைப் பிரிந்து ஒரு நண்பர் வீட்டில் நான்கு வயதுப் பெண்குழந்தையுடன் தஞ்சமானவர். நம்பித் தஞ்சமடைந்தவளின் நான்கு வயதுப் பெண்குழந்தையைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியிருக்கிறான்.

இந்தத் தாய் உடந்தையாக இருந்தாள் என்பது வழக்கு. “கொழந்த ஒண்ணுக்குப்போற இடத்துல ரத்தம் வந்ததைப் பார்த்ததுக்கு அப்புறம்தான் ஏதோ நடந்துருக்குன்றதே எனக்குத் தெரியும். உடந்தையாலாம் இல்லம்மா”  என்றார்.

“கொழந்த இப்போ எங்க இருக்கு?”

“அவுங்கப்பாவோட தங்கச்சிகிட்ட இருக்கு துன்னு சொல்றாங்கம்மா. நான் இன்னும் பாக்கல”

ஏன் அப்பாவிடம் இல்லையெனக்  கேட்டதற்குப் பெண் காவலரிடம் பதில் இல்லை.

23 வயதில் பெண்ணொருத்தி பிள்ளைபெற்ற, பச்சை உடம்புக்காரி என்பது பார்த்த மாத்திரத்தில் தெரிந்தது. அவள் மார்பகப் பால்பொங்கி, ரவிக்கையை நனைத்துச் சேலை கடந்து ஈரம் தெரிந்தது. ஒருமாதக் குழந்தையைக் கிணற்றில் தூக்கிப்போட்டுக் கொன்றாள் என்பது வழக்கு. கணவனும் மாமியாரும் கொடுமைப்படுத்தியதால் வெறுப்பில் செய்துவிட்டேன் என்றாள். புருஷன் சோறும் போடவில்லை. பிள்ளையையும் இவளையும் பார்த்துக்கொள்ளவும் இல்லை.

ஒருமாதப் பெண்குழந்தையை வைத்துக்கொண்டு வேலைக்கும் போக முடியவில்லை. எப்போது பார்த்தாலும் செக்ஸ் டார்ச்சர். பார்க்கவே பரிதாபமாக இருந்த அவள் டிப்ளமோ நர்சிங் முடித்தவள்  என்றதும் பகீரென்றது. குறைந்தபட்ச சட்ட உதவியோ ஆற்றுப்படுத்தும் உதவியோகூடக் கிடைக்காத முதிய/இளம் பெண்கள்  இவர்களைப்போல ஏராளம். இன்றைய பெண்களின் நிதர்சன நிலைக்கு இவை சில உதாரணங்கள் மட்டுமே.

சரி, அபிராமியின் குற்றம் இந்தியக் குற்றவியல் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். சட்டம் அதன் கடமையில் இம்மியளவுகூட விலகிடாமல் இந்த வழக்கை விசாரித்து உரிய தண்டனை அளிக்க வேண்டும் என்பதுதான் நம் நிலைப்பாடு.

அதேநேரம் இதுபோன்ற தனிமனிதக் குற்றங்களில்  பெண் ஈடுபடும்போது மட்டும் அதைச் சமூக விவாதமாக்கி வீடுகளில், தெருக்களில், சொந்தபந்தத்தில் இருக்கிற ஆண்களும் குறிப்பிட்ட சதவீதத்தில் பெண்களும் ஒரேஒரு முறைகூடத் தங்கள் வீட்டுப் பெண்களை நோக்கி, “பார்த்தியா.. இதுக்குத்தான் போன் பேசாதேங்கறேன், இதுக்குதான் வெளிய போகாதன்றேன், இதுக்குத்தான்ஆடாத, பாடாதன்றேன், இதுக்குத்தான் படிக்கவே வேணாங்குறேன்” என்பது போன்ற கருத்துகளை உருவாக்கிப் பெண்களின் எஞ்சியிருக்கும் வெளிகளையும் சுருக்கிவிடும்போது அந்தப் பிரச்சினையை, அதிலிருக்கும் ஆபத்தை மக்கள் நீதிமன்றம் அல்லாமல் வேறெந்த நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது?

- சுசீலா ஆனந்த்
கட்டுரையாளர் ஒரு வழக்கறிஞர்
தொடர்புக்கு: suseeanand@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x