Published : 30 Sep 2018 03:44 PM
Last Updated : 30 Sep 2018 03:44 PM

படிப்போம் பகிர்வோம்: வாசிக்காத நாளெல்லாம் சுவாசிக்காத நாளே!

கிராமமாக இருந்து இன்று சிறு நகரமாக மாறிவரும் ஊரில் பிறந்தேன். எனக்கு வாசிப்பில் நேசிப்பை ஏற்படுத்தியவர் என் அப்பா. பாடப் புத்தகங்களையும் தாண்டிய உலகத்தை அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். நான் முதல் வகுப்பு படித்தபோதே தினமும் எங்கள் தையல்கடையில் காலையில்  நாளிதழை நான் சத்தமாக வாசிக்க, அவர் கேட்டுக்கொண்டே துணிகளைத் தைப்பார்; எனது வாசிப்பைத் திருத்துவார்.

நான் மூன்றாம் வகுப்பு படித்தபோது என் வீட்டருகில் இருந்த நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன். பள்ளி நாட்களில் தினமும் மாலை நூலகம் மூடும்வரை படித்துக் கொண்டிருப்பேன். விடுமுறை நாட்களில் காலையில் நூலகம் சென்றால் மதியம் வரை அங்கேதான் இருப்பேன். நூலகத்திலிருந்து வீட்டுக்குப் புத்தகங்களை எடுத்து வந்தும் படிப்பேன்.

பாலமித்ரா, பூந்தளிர் போன்ற சிறுவர் இதழ்களைத் தொடர்ந்து பல வருடங்கள் தவறாமல் படித்து வந்தேன். சாப்பிடும் போது புத்தகம் படிக்காமல் எனக்குச் சாப்பாடே இறங்காது.

என் வாசிப்பு வட்டம் தமிழ்வாணன், சங்கர்லால் ஆகியோரின் துப்பறியும் கதைகள், ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார் என்று தொடங்கி அனுராதா ரமணன், இந்துமதி, சிவசங்கரி, வாஸந்தி, லஷ்மி என்று பரவி பாலகுமாரன், பிரபஞ்சன், எண்டமூரி வீரேந்திரநாத், சுஜாதா, சு.சமுத்திரம், அசோகமித்திரன், மதன் என்று விரிந்து கிடக்கிறது.

இன்னதுதான் படிக்க வேண்டும் என்று நான் எந்தக் கட்டுப்பாட்டையும் வைத்துக்கொள்ளவில்லை. பொட்டலம் கட்டிவந்த பேப்பரைக்கூட படித்தபின்தான் தூக்கிப் போடுவேன். கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலைச் சமீபத்தில்தான் படிக்க வாய்த்தது. அவரது எழுத்து நடை என்னை அப்படியே கட்டிப்போட்டுவிட்டது. ராஜராஜ சோழன் காலத்துக்கே நான் சென்றுவிட்டேன். என் மனதை மிகவும் கவர்ந்த புத்தகங்களில் இதற்குத்தான் முதலிடம்.

கதைகள் மட்டுமின்றி கவிதை, கட்டுரை, பொது அறிவு என்று எந்தத் தலைப்பாக இருந்தாலும் படித்து முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். என் கணவருக்கு இதுபோல் புத்தகங்கள் படிக்க நேரமின்றி இருந்தாலும் எனக்குத் தடைபோடுவதில்லை. அவர் சில கருத்தரங்குகளில் பேசுவதற்கு, புத்தகங்களில் உதவியோடு நான் குறிப்பு எழுதித் தருவேன்.

புத்தகம் வாசிக்காத நாட்கள் எல்லாமே சுவாசிக்காத நாட்களே. எங்காவது பயணம் புறப்பட்டாலும் பெட்டியில் நான் முதலில் வைப்பது புத்தகங்களைத்தான்.  ஆனால், என் மகளுக்கு  என் அளவுக்கு வாசிக்கும் பழக்கம் இல்லை. இன்றைய கல்வி முறை தரும் அழுத்தமும் பொழுதுபோக்கு அம்சங்களும் வாசிப்புப் பழக்கத்தை இன்றைய குழந்தைகளிடமிருந்து அபகரித்துவிட்டன என்பதை நாம் கவலையோடு ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனாலும் எப்படியாவது என் மகளையும் வாசிப்புக்குள் இழுத்து விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

- தேஜஸ்,  கோவை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x