Last Updated : 15 Sep, 2018 04:10 PM

 

Published : 15 Sep 2018 04:10 PM
Last Updated : 15 Sep 2018 04:10 PM

இயற்கையைத் தேடும் கண்கள் 22: பறந்தபடி பறந்து பிடி…

ஆங்கிலத்தில் ‘கிரீன் பீ ஈட்டர்’ (Green bee eater) என்று அழைக்கப்படும் இந்தப் பறவையைத் தமிழில், பச்சைப் பஞ்சுருட்டான் என்று  அழைக்கிறார்கள். இதன் உடல் சிறியதாக இருந்தாலும், வால் கம்பியைப் போல நீளமாக இருக்கும். குஞ்சுப் பறவைகளுக்கு வால் இருக்காது.

இந்தியா முழுக்கவும் இந்தப் பறவையைக் காண முடியும். குறிப்பாக நீர்நிலைகளில், அதிக அளவில் தென்படும். வட மாநிலங்களில், அடர் பச்சை நிறத்திலும், தென் மாநிலங்களில் இளம் பச்சை நிறத்திலும் என இந்தப் பறவைகளின் குடும்பத்தைச் சேர்ந்த, அதே நேரம், மிகச் சிறிய வேறுபாடுகளைக் கொண்ட சில பறவைகள் தென்படுகின்றன.

paravai 2jpg

இந்தப் பறவையினத்தை ‘ஏரியல் ஃபீடர்ஸ்’ (aerial feeders) என்கிறார்கள். காரணம், இவை இதர பறவைகளைப் போலத் தனது இரையைத் தேடிக்கொண்டிருக்கவோ, இரைக்காகக் காத்திருக்கவோ செய்யாது. பறந்துகொண்டிருக்கும்போதே சின்னச் சின்ன ஈக்கள், குளவிகள், பூச்சிகள் போன்றவற்றைப் பிடித்துச் சாப்பிடும் திறன் கொண்டவை இவை.

பெயருக்கேற்றபடி, இவை பெரும்பாலும் தேனீக்களைத்தான் அதிகம் சாப்பிடும். அவற்றின் கொடுக்குகள் தன்னைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, மரத்தில் அந்தத் தேனீக்களை அடித்து அடித்துச் சாப்பிடும். இரை கிடைத்தவுடன், அதை உடனே விழுங்கிவிடாமல், அதை மேலே தூக்கிப்போட்டு விழுங்கும்.

இவை வலசை செல்லும் பறவைகள் அல்ல. ஆனால், அதிக வெப்பம், அதிக மழைக்காலங்களில் உணவு தேடி சில நாட்களுக்கு மட்டும் வேறு பகுதிகளுக்குச் சென்றுவரும் தன்மை உடையவை.இதர பறவைகளைப் போன்று மரத்தில் கூடு கட்டாமல், மணற்பாங்கான இடங்களில் பொந்துகள் போன்ற வடிவமைப்பைச் செய்து, அதற்குள்தான் முட்டையிடும்.

டெல்லிக்குப் பக்கத்தில் உள்ள ஓக்லா பறவைகள் சரணாலயத்தில்தான் முதன்முதலாக நான் இந்தப் பறவைகளைப் பார்த்தேன். ஒரே நேரத்தில் இரண்டு பஞ்சுருட்டான்கள் தலா ஒரு தும்பியைத் தங்கள் அலகுகளில் பக்கத்துப் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த படம் எனக்கு எப்போதும் பிடித்த படம். அதிக முறை பத்திரிகைகளில் வெளியான என்னுடைய படமும் இதுதான்.

இன்னொரு படம், டெல்லியில் உள்ள பஸாய் சதுப்புநிலத்தில் பனி மூடிய இளங்காலைப் பொழுதில், பஞ்சுருட்டான் குஞ்சுப் பறவை ஒன்றை ‘க்ளோஸ் அப்’பில் படம் எடுத்தேன். படத்தைக் கூர்ந்து பார்த்தால், அந்தப் பறவை அமர்ந்திருக்கும் கிளைகளிலும் பனி, பஞ்சு போல் படர்ந்திருப்பதைக் காணலாம். இயற்கைதான் எவ்வளவு அழகு..?

கட்டுரையாளர்,காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x