Last Updated : 02 Sep, 2018 12:30 PM

 

Published : 02 Sep 2018 12:30 PM
Last Updated : 02 Sep 2018 12:30 PM

வண்ணங்கள் ஏழு 20: உலகின் முதல் ஆண் கர்ப்பிணி

மாற்றுப் பாலினத்தவர், பால் புதுமையர் ஆகியோர் குறித்த சமூகத்தின் கற்பிதங்களைப் போக்கும் வகையில் எழுதப்பட்டுவரும் இந்தத் தொடரைப் படித்துவிட்டு பெங்களூருவிலிருந்து தீப்தி என்னும் பெண் பேசினார். தன்னைப் பற்றியும் தன் இணையருடனான காதலைப் பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

தீப்தி, 2001-ல் சென்னைக்கு வந்தார். ஏழு வருடங்கள் சென்னையில் வேலை செய்தார். அதன்பின் மேற்படிப்புக்கு ஐரோப்பா சென்றார். அங்கே ஒரு வருடம் வேலை செய்தார். கல்லூரியில் படித்தபோதுதான் கே, லெஸ்பியன் போன்ற வார்த்தைகள் தீப்திக்கு அறிமுகமாயின.

பெண்கள் மீதான தன் ஈர்ப்பு சாதாரணமானதுதான் என்னும் புரிதல் அப்போதுதான் இவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதன்பின் அலுவலகத்தில் தன்னுடன் பணியாற்றிய ஒருவரிடம் தன் விருப்பம் குறித்துச் சொன்னபோது அவர் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டார். அது தனக்கு ஆறுதலாக இருந்ததாக தீப்தி சொல்கிறார்.

“வீட்ல கல்யாணப் பேச்சு எழுந்தபோது மனரீதியா சோர்வாக இருந்தேன். அந்த நேரத்தில் எனக்கு எல்.ஜி.பி.டி. சகோதர, சகோதரிகள்தாம் ஆதரவா இருந்தாங்க. சென்னையில் இருந்தபோது தன்னார்வ அமைப்பின் கூட்டம் நடந்தது. அங்குதான் என் பார்ட்னரை முதன்முதலாகப் பார்த்தேன். நான் இப்போ என் பார்ட்னரோடுதான் இருக்கிறேன்” என்கிறார் தீப்தி.

வீட்டில் சில உறவினர்களுக்கு தீப்தியைப் பற்றித் தெரியும். அவர்கள் தீப்தியை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். “நல்லவேளையா அந்த ரெண்டு மருத்துவர்களுமே என்கிட்ட பல முறை பேசி, என் நிலையை முழுசா புரிஞ்சிக்கிட்டாங்க.

‘இவங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. பெண் மீதான அவங்களோட ஈர்ப்பும் இயற்கையானதுதான். அவங்க விருப்பத்துக்கு மாறா அவங்களுக்குத் திருமணம் மட்டும் செய்துவைக்காதீங்க’ன்னு என்னோட உறவினர்கள்கிட்ட சொன்னாங்க. ரெண்டு டாக்டர்களுமே நல்ல புரிதலுடன் இருந்ததை என்னோட நல்ல நேரம்னுதான் சொல்லணும். நான் இதைச் சொல்லக் காரணமே அந்த டாக்டர்களைப் போல் உண்மையான மருத்துவ ஆலோசனையைப் பல மருத்துவர்களும் வழங்கணும்னுதான்” என்கிறார்.

சமூகரீதியான அங்கீகாரம் ஏற்படும் போதுதான் கிடைக்கும் தன் இணையர் குறித்தும் அக்கம் பக்கத்து வீடுகளில் வசிக்கிறவர்களிடம் இயல்பாக அறிமுகப் படுத்த முடியும் என்கிறார் தீப்தி. சட்டபூர்வமான தடை விலகுவதுதான் அதற்கான வழியை அமைத்துத் தரும் என்கிறார் அவர்.

பாதி பெண் பாதி ஆண்

டிரேஸ் பெட்டி, ஆங்கிலேய தாய்க்கும் கொரிய தந்தைக்கும் 1974-ல் பிறந்தவர். பதின் பருவத்தில் ஹவாய் டீன் யு.எஸ்.ஏ. அழகிப் போட்டியில் இறுதிச் சுற்றுவரை முன்னேறினார். தேசியத் தொலைக்காட்சிகளில் ஏரோபிக்ஸ் குறித்த தொடர் ஒளிபரப்புகளிலும் வீடியோக்களிலும் இடம்பிடித்தார். அதைத் தொடர்ந்து பாடி பில்டிங்கிலும் முறையான பயிற்சியைப் பெற்றார். ஹவாய் பல்கலைக்கழகத்தில் உடல் நலப் பிரிவில் பட்டம் பெற்றார். பத்து வயதிலேயே தன்னை ஒரு ஆணாக உணரத் தொடங்கிய பெட்டி, 23 வயதில்  டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தொடங்கினார்.

2002 மார்ச்சில் மாற்றுப் பாலின அறுவை சிகிச்சைக்கும் தயாரானார். பல்வேறு கட்டங்களை உள்ளடக்கிய இந்தச் சிகிச்சையில் முதற்கட்டமாக மார்பகங்களை நீக்கும் சிகிச்சையைப் பூரணமாகச் செய்துகொண்டார்.  கர்ப்பப் பை, இனப் பெருக்க உறுப்புகளை அவர் அறுவை சிகிச்சை செய்து மாற்றவில்லை. அதன்பின் அரசு சார்ந்த ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற எல்லா ஆவணங்களிலும் ஆணாகத் தன் பெயரை தாமஸ் டிரேஸ் பெட்டி என்றே பதிவுசெய்தார். குறுக்குவெட்டு அர்த்தநாரி தோற்றத்தோடு வளையவந்தார் பெட்டி.

அதன் பின் நான்ஸி கில்லஸ்பியைச் சட்டபூர்வமாக 2003-ல் திருமணம் செய்துகொண்டார். மருத்துவரீதியாக நான்ஸியால் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாத நிலை இருப்பதை உணர்ந்த பெட்டி, செயற்கைக் கருவூட்டலின் மூலம் தானே குழந்தையைப் பெற்றெடுக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால், அந்த முதல் முயற்சியில் உருவான மூன்று கருக்களுமே கலைந்துவிட்டன.   பிறகு  2008 முதல் 2010-க்குள்  மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

முதல் கர்ப்பிணி ஆண்

தேசிய எல்.ஜி.பி.டி. இதழான ‘தி அட்வோகேட்’டில் தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவரும் அவருடைய மனைவியும் சந்தித்த மருத்துவரீதியிலான தீண்டாமை குறித்தும் எழுதினார். அதிலும் அவர்களின் மதரீதியிலான நம்பிக்கைகளால் தாங்கள் எப்படியெல்லாம் துன்பப்பட்டோம் என்பதை நெகிழ்ச்சியோடு அவர் பதிவு செய்திருந்தார். மேலாடை இல்லாமல் தாடியோடு கர்ப்பமாக இருக்கும் பெட்டியின் படத்துடன் வந்த அவரின் சுயசரிதை, இணையத்தின் மூலமாக விறுவிறுவென உலகின் பல நாடுகளுக்கும் பரவியது.

vannam 3jpgமார்க் குயின் வடித்த சிலை

ஓப்ரா வின்ஃபிரே நடத்திய நிகழ்ச்சியில் 2008-ல் பங்கேற்றார். அதில் அவர் முக்கியமாக,  ஆணாக இருந்து குழந்தையைப் பெற்றெடுப்பது தன் இனப்பெருக்க உரிமை என்றார்.

 “குழந்தையைப் பெற்றெடுப்பதை ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாகப் பார்க்கிறேன். நான் யார் என்பது குழந்தைப் பிறப்பதை வைத்து முடிவு செய்யும் விஷயம் இல்லை. குழந்தை பெற்றுக்கொள்வதை மனித உரிமையாகப் பார்க்கிறேன். அந்த வகையில் நான் ஒரு மனிதன், என் மரபின் வழியாகக் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் உரிமை” என்றார்.

முத்துக்கள் மூன்று

இதைத் தொடர்ந்து பெட்டிக்கு ஜூன் 29, 2008 அன்று முதல் குழந்தை  சூசன் ஜூலியட் பெட்டி பிறந்தாள். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் பெட்டியின் குடும்பம் நிற்கும் ஒளிப்படம்  பியூப்பிள்ஸ் மேகஸினில் வெளிவந்தது. 2009 ஜூன் 9 அன்று மகன் அஸ்டின் அலெக்ஸாண்டர் பிறந்தான்.  2010 ஜூலை 25 அன்று பெட்டிக்கு  மூன்றாவது குழந்தையாக ஜென்சன் ஜேம்ஸ் பெட்டி பிறந்தான்.

2010-ல் கின்னஸ் புக் ஆப் ரெகார்ட்ஸ், குழந்தையைப் பெற்றெடுத்த உலகின் திருமணமான முதல் ஆண் என்று பதிவிட்டது. அதோடு அது ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் பெட்டிக்கு உலகின் ‘முதல் கர்ப்பிணி ஆண்’ எனும் பட்டத்தைக் கொடுத்தது. தனிப்பட்ட காரணங்களால் நான்ஸி, பெட்டி திருமணம் விவாகரத்து ஆனது. இப்போது மூன்று குழந்தைகளுமே பெட்டியின் வசம். தற்போது இனப் பெருக்க உறுப்புகளையும் அறுவை சிகிச்சையின் மூலமாக மாற்றிக்கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தாமஸ் பெட்டி.

(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x