Published : 22 Jul 2018 10:39 AM
Last Updated : 22 Jul 2018 10:39 AM

படிப்போம் பகிர்வோம்: புத்தக உளிகள்

சிறு வயதில் என்னைத் தூங்கவைக்க ஆச்சியும் தாத்தாவும் சொன்ன கதைகளே பின்னாட்களில் சித்திரக் கதைகள், அம்புலிமாமா போன்றவற்றை நோக்கி என்னை இழுத்துச் சென்றன.

பள்ளியில் துணைப்பாட நூலாகப் படித்த அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாறு எனது வாசிப்பு தாகத்தை அதிகப்படுத்தியது. அதில் ஆரம்பித்து காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர், அம்பேத்கர் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தேடித் தேடிப் படித்தேன். அவற்றைப் படிக்கப் படிக்க எனக்குள் ஏற்பட்ட சிந்தனை மாற்றங்களை என்னால் முழுமையாக உணர முடிந்தது.

மனிதம், அன்பு, பெண்ணியம், போராட்டம் என்று அனைத்தையும் எனக்கு ஒருங்கே கற்றுக்கொடுத்த புத்தகங்கள் பல. அவை பல நேரம் குருவாக இருந்து என்னை நல்வழிப்படுத்தியுள்ளன.

நான் திருமணமாகிச் சென்றபோது,  புத்தகப் பிரியரான என் கணவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நல்ல புத்தகங்களை வாங்கி அலமாரி நிறைய அடுக்கிவைத்திருந்தார். அதைப் பார்த்தவுடன் சொர்க்கத்துக்குள் நுழைந்ததைப் போல உணர்ந்தேன். மனிதவள மேம்பாடு, பழமொழிகள், பொன்மொழிகள், கதைகள், கவிதைகள் என்று கலந்து கட்டி இருந்த அத்தனை புத்தகங்களும் என்னைச் செதுக்கிய/ செதுக்கும் உளிகளாக இன்றுவரை தொடர்கின்றன.என்னதான் இணையத்தில் புத்தகங்களைப் படித்தாலும் கைகளில் புத்தகத்தை வைத்துப் படிக்கும் அனுபவத்தின்

இனிமையே தனி. அதிலும் பெரிய எழுத்துக்களுடன் கூடிய சிறிய அளவு புத்தகங்கள் என்றால் கூடுதல் ஈர்ப்பாகவே இருக்கும். தீப்பெட்டி அளவில் பொன்மொழிகளோடு வரும் புத்தகங்களைப் படிப்பது அலாதி இன்பம்!

லக்ஷ்மி, வாஸந்தி, இந்துமதி, சிவசங்கரி, ராஜம் கிருஷ்ணன், உ.வாசுகி, ச.தமிழ்செல்வன் போன்றோர் எழுதிய புத்தகங்கள் எங்கு கண்களில் பட்டாலும் ஆனந்தமே. சமீபத்தில் படித்த புத்தகங்களில் திருநங்கைகள் வாழ்க்கைக் குறித்து செல்வசுந்தரி எழுதிய, ‘ உன்னை விட்டு விலகுவதில்லை’ புத்தகம் மனதை நெகிழவைத்தது.

- இரா. பொன்னரசி, சத்துவாச்சாரி, வேலூர்.

 

வாழ்க்கையின் உன்னதம்

ஒவ்வொரு புத்தகத்தையும் வாசித்து முடிக்கும்போதும் எனக்குப் புதிதாகப் பிறந்தது போன்ற உணர்வு ஏற்படும். நான் முதலில் படித்த புத்தகம், கல்லூரிக்குப் படிக்கச் செல்லும் ஒரு கிராமத்து ஏழை இளைஞனைப் பற்றிய கதை. அதன் பிறகு நான் படித்தது வெ.இறையன்பு எழுதிய, ‘ஆத்தங்கரை ஓரம்’ புத்தகம். என் கல்லூரியில் நடந்த புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகம் சிறப்பாக இருந்தது. அந்தப் புத்தகத்தில் வரும் கிராமம், கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட சொர்க்கபுரிபோல் இருக்கும். இது போன்ற எளிமையான புத்தகங்களை வாசிப்பது, புத்தகம் படிக்காத பழக்கம் உள்ளவர்களுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும்.

புத்தகத்தைப் படிக்கும்போது அதில் வரும் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் நம் மனத்தினுள் அப்படியே பதிந்துவிடும். புத்தகம் படித்து முடித்த பின்னும் சில நாட்கள் அவை நம் மனத்தை விட்டு அகலாது. ‘ஆத்தங்கரை ஓரம்’ புத்தகமும் அப்படியொரு அனுபவத்தைத்தான் எனக்கு அளித்தது. கிராமத்தை வெள்ளம் வந்து அழிக்கும் காட்சியைப் படித்தபோது, என் வீடும் வெள்ளத்தில் அடித்துச்செல்வதுபோல் தோன்றியதை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை. புத்தகத்தை வாங்கிப் படிப்பதோடு மற்றவர்களிடம் இருந்து இரவல் வாங்கியும் படிப்பேன். எனக்குப் பிடித்த புத்தகங்களை மற்றவர்களுக்குக் கொடுத்துப் படிக்கச் சொல்வேன். பிறருக்குக் கொடுத்த புத்தகம் மீண்டும் என்னிடம் திரும்பி வரும்வரை ஒரு நண்பனைப் பிரிந்த துயர் எனக்கு இருக்கும்.

புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது மன அமைதிக்கு வழிவகுக்கும். ‘இன்று நாம் புத்தகத்தைத் தலைகுனிந்து படித்தால் நாளை தலைநிமிர்ந்து வாழலாம்’ என்னும் வாசகத்துக்கு ஏற்ப, இன்று இளைஞர்கள் மத்தியில் வாசிப்பு அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வரலாறு, இலக்கியம், மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் ஆகியவற்றைப் படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். நம் வாழ்க்கையின் உன்னதம் வாசிப்பில்தான் இருக்கிறது.

- எஸ். தீபிகா, பட்டுக்கோட்டை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x