Published : 05 Sep 2018 10:33 AM
Last Updated : 05 Sep 2018 10:33 AM

டிங்குவிடம் கேளுங்கள்: தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறப்பது ஏன்?

சமீபத்தில் தலைவர்கள் மறைந்தபோது, நம் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டார்கள். ஏன் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுகிறார்கள், டிங்கு?

– எஸ். முல்லை, 10-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, சேலம்.

தேசியக் கொடியை ஒவ்வொரு நாடும் மிகவும் உயர்வாக மதிக்கிறது. அதேபோல இந்தியர்களும் தேசியக் கொடி மீது மதிப்பும் மரியாதையும் அதிகம் வைத்திருக்கின்றனர். மறைந்தவர்களுக்கு அதிகபட்ச மரியாதை செலுத்தவும் துக்கத்தை வெளிப்படுத்தவும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படுகிறது. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் போன்றவர்களின் மறைவின்போது இந்தியா முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படுகிறது.

மக்களவை சபாநாயகர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி போன்றவர்கள் மறைவின்போது டெல்லியிலும் யூனியன் கேபினெட் மந்திரி மறைவின்போது டெல்லி மற்றும் அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரோ அந்த மாநிலத் தலைநகரத்திலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படுகிறது. மாநில அமைச்சர்களுக்கு டெல்லியிலும் ஆளுநர், துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் போன்றவர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படுகிறது.

குடியரசு தினம், சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம், சுதந்திரப் போராட்டத்தை நினைவுகூரும் ஏப்ரல் 6 முதல் 13 வரையான தேசிய வாரம் போன்ற நாட்களில் தலைவர்கள் மறைந்தால், கொடி அரைக் கம்பத்தில் பறக்காது. அயல்நாட்டுத் தலைவர்கள் மறைவின்போது, உள்துறை அமைச்சகத்தில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டால், அப்போது தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும்.

2013-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மறைவின்போதும் 2015-ம் ஆண்டு சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ மறைவின்போதும் இந்தியாவில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது, முல்லை.

 

நாம் கரண்டிகளைக் கொண்டு பயன்படுத்தும்போது கெட்டுப் போகாத உணவு, கைகளைப் பயன்படுத்தி எடுக்கும்போது விரைவில் கெட்டு விடுகிறதே, ஏன்? கைகளில் ஏதேனும் வேதிப் பொருள் உள்ளதா, டிங்கு?

- வித்யபாரதி கார்த்திக், காரைக்குடி.

நம் கைகளில் வேதிப் பொருள் இல்லை, பாக்டீரியாக்கள் இருக்கின்றன. நாம் ஒவ்வொரு முறையும் நன்றாக சோப்பு போட்டுக் கைகளைச் சுத்தம் செய்துகொண்டிருப்பதில்லை. அதனால் உணவுப் பொருட்களைத் தொடும்போது பாக்டீரியாக்கள் கைகளில் இருந்து உணவுக்குச் சென்றுவிடுகின்றன. உணவை வேகமாகக் கெட்டுப் போக வைக்கின்றன, வித்யபாரதி.

 

மண்புழுக்கள் எவ்வாறு நகர்கின்றன, டிங்கு?

– ஜிதேந்த், 5-ம் வகுப்பு, பியுஎம் பள்ளி, சுல்தான்பேட்டை, திருப்பூர்.

மண்புழுவின் உருளை வடிவான உடலின் புறத்தோல், வளைத்திசுக்களால் ஆனது. அவற்றுக்கு அடியில் நீண்ட தசைநார்கள் உள்ளன. இந்தத் தசைநார்கள் சுருங்கும்போது, உயரம் குறைந்து, உடல் பருத்துவிடும். வளைத்திசுக்கள் சுருங்கும்போது மண்புழுவின் உடல் நீண்டு விடும். இப்படித் தசைநார்களும் வளைத்திசுக்களும் மாறி மாறி இயங்குவதால், மண்புழு இடம் விட்டு இடம் நகர்கிறது, ஜிதேந்த்.

 

விவசாயம் செய்வதிலும் தோட்டம் போடுவதிலும் உனக்கு அனுபவம் உண்டா, டிங்கு?

– எஸ். ஹரிஹரசுதன், 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம், திருச்சி.

விவசாயத்தைப் பற்றி ஓரளவு தெரியும். ஆனால், நான் நெருக்கமாகப் பார்த்ததில்லை. அதற்கான வாய்ப்பும் எனக்குக் கிடைத்ததில்லை. ஆனால், விவசாயத்தின் மீது ஆர்வமும் மரியாதையும் அதிகம் இருக்கிறது. வீட்டுத் தோட்டத்தில் நிறைய அனுபவம் இருக்கிறது. ஓய்வு நேரங்களில் தோட்ட வேலைகள்தான் செய்வோம். படிக்கும் நேரம்கூடத் தோட்டத்தில் அமர்ந்துதான் படிப்போம்.

பல வகை கீரைகள், கத்தரி, வெண்டை, பாகற்காய், பூசணி, புடலை, சுரை, அவரை, வாழை, தென்னை, மா, கொய்யா, பலா, சாத்துக்குடி, பப்பாளி, கறிவேப்பிலை, மருதாணி என்று எங்கள் தோட்டத்தில் ஏராளமானவற்றை விளைவித்திருக்கிறோம். செம்பருத்தி, நந்தியாவட்டை, ரோஜா மற்றும் பெயர் அறியாத பல பூச்செடிகளை வைத்து தோட்டத்தை அழகுப்படுத்தியிருக்கிறோம்.

இன்றும் அந்த ஏக்கத்துக்காக மாடித் தோட்டம் என்ற பெயரில் சில பைகளில் பிரண்டை, முடக்கத்தான், கற்பூரவல்லி, ரோஜா, கற்றாழை போன்றவற்றை வளர்த்து வருகிறோம், ஹரிஹரசுதன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x